

1994-ம் ஆண்டில் வெளிவந்து வெற்றிபெற்ற லூயி லௌரி எழுதிய நாவலின் கதையைத் தழுவி அந்த நாவலின் தலைப்பிலேயே உருவாகியிருக்கிறது ‘தி கிவர்’. சோகம், தீமை என எதுவும் பாதிக்காத மனித சமூகத்தை ஒரு சர்வாதிகார அரசாங்கம் உருவாக்குகிறது. இந்தக் கற்பனையான மனித சமூகத்தில் வெறுப்பு, போர் எதுவுமே இல்லை. ஆனால் அங்கே உணர்வுகளும் இல்லை. சிறு தவறுகள் கூடப் புரியப்படுவதில்லை. வெறுப்பு, அச்சம், போருக்கு வழிவகுக்கும் நினைவுகள் முழுக்க அகற்றப்பட்ட ஒரு சமூகமாக உள்ளது. அங்கே நிறவேறுபாடு இல்லை. தனித்தனித் தேர்வுகள் இல்லை. காதல் இல்லை. சமத்துவம் மட்டுமே உண்டு.
அந்தப் ‘பரிசுத்த’ உலகில் இனவெறியோ, முரண்பாடுகளோ, நோய்களோ இல்லை. அங்கே எல்லாருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. தனது சமூகத்தின் மொத்த நினைவுகளையும் தனது மூளையில் வாங்கிக்கொள்ளும் ரிசீவராகத் தேர்ந்தெடுக்கப்படும் 16 வயது ஜோனஸ் தான் இத்திரைப்படத்தின் நாயகன். அவன் தனது உலகின் ‘இறந்த காலத்தை’ படிப்படியாக கண்டுபிடிக்கிறான். ஒரு உன்னதமான சமூகத்தை உருவாக்குவதற்காகத் தமது மூதாதையர்கள் மனித குலத்துக்குப் புரிந்த எண்ணற்ற தீங்குகளைப் பற்றித் தெரிந்துகொள்கிறான். இந்த உலகிலிருந்து தப்புவதும், சக மனிதர்களைத் தப்பிக்க வைப்பதும் அவசியம் என்ற நிலை வருகிறது. ஜோனஸ் தப்பித்தானா?
பலவிதமான வேறுபாடுகள், குணாதிசயங்கள் கொண்ட ஒரு சமூகத்தை ஒற்றைப்படையான சமூகமாக மாற்றுவதற்கு முயலும் பேரதிகார அரசுகளை ஞாபகப்படுத்துவதாக இப்படத்தின் கதை உள்ளது. சமூகத்தை மேம்படுத்துகிறோம் என்ற உத்தரவாதத்தின் பெயரிலேயே உலகின் பெரிய சர்வாதிகாரங்கள் மக்களை தன்வயப்படுத்துகின்றன.
‘தி கிவர்’ திரைப்படத்தின் நாயகனும், “மக்களுக்குத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் கிடைக்கும்போது, அவர்கள் தவறானதையே தேர்ந்தெடுக்கிறார்கள்” என்று கூறுகிறான்.
இப்படத்தில் புகழ்பெற்ற நடிக, நடிகையரான ஜெஃப் பிரிட்ஜஸ், மெரில் ஸ்ட்ரீப், கேட்டி ஹோல்ம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். 16 வயது நாயகன் ஜோனஸ்ஸாக, ப்ரெண்டன் த்வாய்ட்ஸ் நடித்திருக்கிறார்.
லூயிஸ் லௌரி எழுதிய கதையை பிலிப் நாய்ஸ் இயக்கி, ஆகஸ்டு 15-ம் தேதி இந்தியாவில் வெளியாக இருக்கும் தி கிவர் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.