விஜயின் சகிப்புத்தன்மை பிடிக்கும்! | ப்ரியமுடன் விஜய் 37
நடுத்தரக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவன் நான். அப்பா பாத்திரக் கடை வைத்திருந்தார். மக்களையும் சமூகத்தையும் நன்கு புரிந்துகொண்டவர். அவருக்குப் பின் தன்னுடைய வாரிசுகளில் ஒருவர் கடையைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார். ஆனால், என்னுடைய கனவு விளையும் நிலம் கோடம்பாக்கமாக இருந்தது. எனது விருப்பத்தையும் கனவையும் புரிந்துகொண்ட அவர், என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. நான் சமூகத்தை எப்படிப் பார்க்கிறேன் என்பதை நான் எழுதிய சிறுகதைகளின் வழியாக அவர் அறிந்துகொண்டு, என் மீது என்னைவிட அதிக நம்பிக்கை வைத்தார்.
சின்ன வயதிலிருந்து ஆக்ஷன் படங்கள் பார்த்து வளர்ந்தேன். அதனால், ஆக்ஷன் இல்லாத ஒரு திரைக்கதையை என்னால் எழுத முடியாது. என்னதான் எமோஷன், சென்டிமென்ட், காதல் என்று கதைகள் செய்தாலும் அவற்றுடன் சண்டைக் காட்சி வைக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால், அவை இயல்பான சண்டைக் காட்சிகளாகத் தெரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன்.
