

ஹரீஷ் சினிமாஸ் சார்பில் அ.அழகு பாண்டியன் தயாரிப்பில், சுபாரக். எம். எழுதி, இயக்கியிருக்கும் படம் ‘நறுவீ’. நீலகிரியில் தேயிலை எஸ்டேட் ஒன்றை ஒட்டியிருக்கும் அடர்ந்த காடு அது. ‘அதற்குள் தப்பித் தவறி ஆண்கள் உள்ளே நுழைந்துவிட்டால் உயிருடன் திரும்ப மாட்டார்கள்’ என்று அந்தக் காட்டின் அருகில் வசிக்கும் மக்கள் மலையேற்றம் செய்ய வருபவர்களை எச்சரிக்கி றார்கள். ஆனால், ஆராய்ச்சி என்கிற பெயரில் பொழுது போக்க வரும் ஐந்து பேரும், ஒரு காதல் ஜோடியும் அத்துமீறி உள்ளே நுழைய, அதன்பின் அங்கே என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
“ஹாரர் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில், பழங்குடியினத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்லியிருக்கிறோம். இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுக மாகும் ஹரீஷ் ஓர் இளம் மருத்துவர். கதா பாத்திரத்துக்காகவே ஒரு மருத்துவரைத் தேர்ந் தெடுத்தோம்” என்கிறார் இயக்குநர். இவருடன் வின்சு, வி.ஜே.பப்பு, பாடினி குமார், ஜீவா ரவி, பிரவீணா எனப் பலர் நடித்திருக்கிறார்கள். ‘எஃப்.ஐ.ஆர்’ படப் புகழ் அஸ்வத் இசையமைத்துள்ளார்.
முடி முக்கியமா, இல்லையா? - ‘பன்றிக்கு நன்றி சொல்லி’, ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ படங்களின் மூலம் கதாநாயகனாகக் கவனிக்க வைத்த துருதுரு நடிகர் நிஷாந்த் ரூஸோ. அவர் துணிந்து நடித்திருக்கும் படம் ‘சொட்ட சொட்ட நனையுது’. அட்லர் எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் எஸ். ஃபரீத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் முழுநீள நகைச்சுவை - சீரியஸ் காதல் திரைப்படம் இது. நிஷாந்த் ரூஸோவுக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் வர்ஷிணி, ஷாலினி நடித்திருக்கின்றனர்.
சமீபத்தில் நடந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேசும்போது “முடி எவ்வளவு முக்கியம் என்பதையும் அதேநேரம் அது அவ்வளவு முக்கியம் இல்லை என்பதையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் விதமாக பொறுப்புணர்வுடன் படத்தில் கதையைக் கையாண்டிருக்கிறோம். இந்தப் படம் பார்த்தபின் முடியின்மையால் தாழ்வுணர்ச்சி கொண்டவர்கள் கம்பீரமாக உணர்வார்கள்.
முடி இருப்பவர்களும் இல்லாதவர்களை மரியாதையாக நடத்துவார்கள். படத்தில் அவ்வளவு விஷயங்களை அழகாக ஒரு முக்கோணக் காதல் கதைக்குள் அடுக்கி வைத்திருக்கிறோம். குடும்பத்துடன் பார்க்கலாம்” என்றார். விழாவுக்கு நாயகன் நிஷாந்த் வழுக்கைத் தலை ஒப்பனையுடன் வந்து ஆச்சர்யப்படுத்தியிருந்தார்!