ராகு கேது: திரைப் பார்வை - பக்தியும் பயமும் ஜெயமும்

ராகு கேது: திரைப் பார்வை - பக்தியும் பயமும் ஜெயமும்
Updated on
2 min read

கட்டங்களை நம்பும் யாரொருவருக்கும் நவக் கிரகங்கள் மீது பக்தியும் பயமும் உண்டு. ஆனால், நவக் கிரகங்கள் எப்படி உருவாகின என்று எல்லாரும் தெரிந்துகொண்டிருப்பார் களா என்றால் சந்தேகம்தான். அதை விரிவாகவும் சுவாரசியமாகவும் படைத் திருக்கிறது இந்தப் புராணப் பக்திப் படம். அசுரர்களுடனான தொடர் மோதலில் இந்திராதி தேவர்கள் நொந்துபோய், இனி இறப்பே இல்லாத வரம் வேண்டும் என்று பாற்கடல் வாசனாகிய மகா விஷ்ணுவிடம் போய் மண்டியிடுகிறார்கள்.

அவரோ, “மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தி இந்தப் பாற் கடலைக் கடையுங்கள். அதிலிருந்து கிடைக்கும் அமுதத்தை உண்டால் இறப்பே கிடையாது” என்கிறார். போர் நடத்தி நடத்தி வலிமை குன்றி யிருக்கும் தேவர்கள், பாற்கடலைக் கடைய, நாரதரின் உதவியுடன் அசுரர்களை அழைத்து வருகிறார்கள்.

தேவர்கள் ஒரு பக்கம், அசுரர்கள் ஒருபக்கம். கடைந்து அமுதம் எடுத்த பிறகு அதைப் பங்கு பிரித்துக்கொள்ள வேண்டும் என்பது ஜெண்டில்மேன் அக்ரீமெண்ட்! அமுதமும் வருகிறது. ஆனால், மோகினி அவதாரத்தில் வரும் விஷ்ணுபிரான், நியாயமாகப் பிரித்துக் கொடுக்க முயன்றாலும் அசுரர்களின் ஆர்வக் கோளாறு காரணமாக அமுதம் அவர்களுக்குக் கிட்டாமல் போகிறது.

ஆனால், அசுரஇளவரசனாகிய சுபர்பானு, தேவர்களைப் போல் வேடமிட்டு அமுதத்தை அருந்திவிடுகிறார். இதை அறிந்த மகாவிஷ்ணுவின் கோபம் சுபர்பானுவை எப்படிப் பட்ட நிலைக்குக் கொண்டுபோய் நிறுத்தியது எனக் கதை செல்கிறது.

கலைமாமணி கே.பி.அறிவானந்தம் எழுதியி ருக்கும் திரைக்கதையின் சிறப்பு, ராகு கேது உருவான கதையுடன் நின்றுவிடாமல், சாயா கிரகங்களாக விளங்கும் அவற்றால் மற்ற ஏழு கிரகங்களை எப்படிக் கட்டுப்படுத்த முடியும், ராகுவும் கேதுவும் தரும் வெற்றிகளும் ஞானமும் என்ன என்பதைத் துணைக் கதையாக விளக்கிய விதம் நெகிழ்ச்சியாக ஈர்க்கிறது. நீண்ட இடை வெளிக்குப் பின் செந்தமிழ் வசனங்களைக் கேட்பது மாறுபட்ட திரை அனுபவம்.

கிராஃபிக்ஸ், வி.எஃப்.எக்ஸ் துறை மிகப்பெரிய வளர்ச்சி பெற்றிருக்கும் இக்காலத்தில், அதை அதிகமும் நம்பாமல் இப்படத்தை ஒரு ‘காஸ்டியூம் டிராமா’வாக கதையையும் நடிக்கும் கலைஞர்களையும் நம்பிப் படமாக்கியிருப்பதற்காகவே படக்குழுவைப் பாராட்டலாம்.

த.பாலசுந்தரம் இயக்கித் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், அவரே அசுர இளவரசன் சுபர் பானு, கேது ஆகிய வேடங்களில் நல்ல தமிழ் பேசி சிறப்பாக நடித்திருக்கிறார். இவரது காதலியாக வரும் சந்தியாவின் நடிப்பும் ஈர்க்கிறது.

சிவன் பார்வதியாக வரும் சமுத்திரக்கனி - கௌசிகா கோபி கிருஷ்ணன் இணை, துர்காதேவியாக வரும் கஸ்தூரி, மகா விஷ்ணுவாக வரும் விக்னேஷ் ஆகிய நட்சத்திர நடிகர்கள் நாடகக் கலைஞர்களின் இந்த முயற்சிக்கு முத்தாய்ப்பு சேர்த்திருக்கிறார்கள். பெரும்பான்மை சமூகத்தின் கலாச்சார வாழ்வில் வேரோடியிருக்கும் இதுபோன்ற புராணப் பக்திக் கதைகளை ஒரு சிறந்த படத்தொகுப்பாளர் இல்லாமல் கோவையாகச் சொல்ல முடியாது.

அதை அட்டகாசமாகச் சாதித்துக் காட்டியிருக்கிறார் தமிழ் சினிமாவின் பெருமிதங்களில் ஒருவரான எடிட்டர் பி. லெனின். ஆடைகள், ஒப்பனை, நடிப்பு, படத்தொகுப்பு, திரைக்கதை, வசனம் ஆகிய அம்சங்களுக்காக மட்டுமல்ல; இப்படத்தின் நல்ல தமிழுக்காகவே இதை ஒருமுறை காணலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in