‘சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’ படம் எப்படி? - வாசிப்பு நிகழ்த்தும் சாகசம்!

‘சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’ படம் எப்படி? - வாசிப்பு நிகழ்த்தும் சாகசம்!

Published on

சீரியல் கில்லர், சைக்கோ கில்லர் கதைகளில் கொலையாளி வெளிப்படையாக விட்டுச் செல்லும் தடயங்களை வைத்துக்கூட அவனை/ளை நெருங்க முடியாமல் துப்பறிவாளனாக வரும் நாயகன் அல்லாடுவான். இந்தப் படத்தில் ஒரே மாதிரியான தொடர் கொலைகளைச் செய்யும் கில்லர், வேண்டுமென்றே விட்டுச்செல்லும் தடயங்களைப் புறம் தள்ளிவிட்டு, நாயகன் தனக்கேயுரிய ‘க்ரைம் நாவல்’ வாசிப்பனுபவம் தந்த அறிவைப் பயன்படுத்திக் கண்டறியும் விஷயங்களுக்காகக் காவல் துறையின் பாராட்டைப் பெறுகிறான்.

மதுரையிலிருந்து பொழுதுபோக்கு க்ரைம் நாவல்கள் எழுதிப் புகழ்பெற்ற ஒரு நாவலாசிரியரின் மகன் பிரபு (வெற்றி). அவருடைய அப்பாவின் நினைவைப் போற்றும் வகையில் தொடர் ஒன்றை வெளியிட விரும்பும் பத்திரிகையின் ஆசிரியர் குழுவுக்கு உதவுவதற்காக சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில், எதிர்பாராதவிதமாகக் காவல் ஆய்வாளரான ராமையாவுக்கு (தம்பி ராமையா) ஒரு கொலை வழக்கில், விசாரணை அடுத்தக் கட்டம் நோக்கி நகர உதவுகிறார்.

அது சீரியல் கில்லிங் என்பது புலனாகத் தொடங்கியதும் பிரபுவின் உதவியைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ளும் ராமையாவின் வாழ்க்கையில் ஒரு பேரிடி விழுகிறது. போட்டித் தேர்வுக்குப் படித்துவந்த அவருடைய மகள் தற்கொலை செய்துகொள்ள, தொடர் கொலைகளுக்கும் இந்தத் தற்கொலைக்குமான முடிச்சை பிரபு எப்படி அவிழ்க்கிறார் என்பது கதையாக விரிகிறது.

இயக்குநர் தேர்ந்துகொண்டிருக்கும் இந்தக் கதை, ஒரே நேர்கோட்டில் அமைந்த திரைக்கதை வடிவத்தில் சொல்லப்பட்டிருந்தால் அடிப்படையான அதன் சுவாரசியத் தன்மையைப் பல மடங்கு கூட்டியிருக்கும். ஆனால், முன்னும்பின்னுமாகச் சிதறும் கதைசொல்லல் காரணமாக படத் தொகுப்பாளரே பல இடங்களில் குழம்பிக் காட்சிகளைக் கோத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இதைத் தாண்டி, புதிய கதாபாத்திர அணுகுமுறையுடன் கதை சொல்ல முயன்றதற்காக இயக்குநர் அனீஸ் அஷ்ரப்பைப் பாராட்டலாம்.

‘8 தோட்டாக்கள்’ படத்தில் தொடங்கி, த்ரில்லர் கதைகளுக்காக நேர்ந்துவிடப்பட்ட நாயகனாக வலம் வரும் வெற்றி, இப்படத்தில் நடிப்பில் நிறையவே முன்னேறியிருக்கிறார். நகைச்சுவை, நடனம், சீரியஸான புலன் விசாரணைக் காட்சிகளில் நுணுக்கம் என நடிப்பிலும், ஆக்‌ஷன் காட்சிகளில் அர்ப்பணிப்பான பங்களிப்பு எனப் படம் முழுவதும் புதிதாகத் தோன்றுகிறார்.

காவல் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் வரும் தம்பி ராமையா, விசாரணையில் விளையாட்டுத்தனமாகவும் சென்டிமென்ட் காட்சிகளில் பொறுப்புடனும் வந்துபோகிறார். கதாநாயகியாக வரும் ஷில்பா மஞ்சுநாத் ஏற்றுள்ள கட்டுரையாளர் கதாபாத்திரம் பரிதாபமாகப் பாதிப் படத்தில் காணாமல் போய், கிளைமாக்ஸ் காட்சியில் வந்து சேர்கிறது.

நாவல் வாசிப்பின் வழியாகக் கிடைத்த அறிவைக் கொண்டு, தொழில்முறை அறிவை முந்திச் செல்ல முடியும் என்பது ஃபேண்டஸி. அதை ஓரளவுக்கு ரசிக்கும்படி சொல்லியிருக்கிறது இந்த முதல் பக்கம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in