

கதாபாத்திர மதிப்பும், சமூக அக்கறையுடன் கூடிய பொழுது போக்குத் தன்மையும் முக்கியத்துவம் பெறும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஜய் ஆண்டனி. கிட்டு என்கிற கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்து, தயாரித்துள்ள அவரின் 25வது படமாக, வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவிருக்கிறது ‘சக்தி திருமகன்’.
‘அருவி’, ‘வாழ்’ படங்களின் மூலம் கவனிக்க வைத்த அருண் பிரபு எழுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம். ‘15 வருடம் சிறையில் இருந்த ஒருவன், விடுதலையானதும் அரசியல் களத்தில் ஏற்படுத்தும் பூகம்பம்தான் கதை; இதுவொரு நியோ - பொலிட்டிகல் த்ரில்லர்’ என்கிறார் இயக்குநர்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாறுதோ’, ‘ஜில் ஜில் ஜில்’ ஆகிய இரண்டு பாடல்கள் நேற்று ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டன. கார்த்திக் நேத்தா வரிகளில், விஜய் ஆண்டனியே இசையமைத்திருக்கும் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியீட்டு விழாவில் தன்னுடைய பிறந்தநாளையும் கேக் வெட்டிக் கொண்டாடினார்.
படத்தில் அவருடைய இணையாக நடித்திருப்பவர் திருப்தி ரவீந்திரா. விஜய் ஆண்டனி படமென்றால் ஆந்திராவிலும் எதிர்பார்ப்பு அள்ளும். அதற்கு ஏற்ற கதையாக ‘சக்தி திருமகன்’ இருக்கும் என்பதை டீசர் முன்னோட்டம் சொல்கிறது.