

காதல் கடிதங்கள் இரண்டு வகை. எழுதிய பின் சரியான பெறுநரிடம் சேர்பவை, இறுதிவரை பெறுநரிடம் சேராமல் எழுதியவரிடமே பொக்கிஷமாய் இருப்பது. இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்த கடிதம் ஒன்றில் புதைந்திருக்கும் வலியைச் சொல்லும் கதைதான் அமேசான் பிரைம் மற்றும் மனோரமா மேக்ஸ் ஆகிய தளங்களில் காணக் கிடைக்கும் ‘அபிலாஷம்’.
வாழ்க்கைச் சூழல் காரணமாக உள்ளம் கிளர்த்திய உணர்வை ஒருவருக்கு இன்னொரு வர் வெளிப்படுத்தத் தவறிய பதின்ம வயதினர் அபிலாஷும் ஷெரினும். அலையில் ஆடும் காகித வாழ்வு அவர்களைப் பிரித்து தூரமாகப் போட்டுவிட்டுப் போகிறது. இருபது ஆண்டுகள் கழித்து இன்னொரு சூழலில் காலம் அவர்களைச் சந்திக்க வைக்கிறது. நேற்றின் சுமைகள் நெருக்க, இரண்டாம் தருணச் சந்திப்பில் அவர்களின் வாழ்வு என்ன ஆனது என்பது கதை.
90களின் தொடக்கத்தில் வந்த தமிழ் காதல் கதைகளின் வார்ப்புருவைக் கொண்டிருக்கும் திரைக்கதை. தன்னளவில் தயக்கங்கள் கொண்ட கதாநாயகன், அவனுக்கு நித்தம் உதவிடும் பால்ய நண்பன், அதே ஊருக்குப் பிரிவின் சுமையுடன் திரும்பும் நாயகி இவர்களே பிரதானக் கதாபாத்திரங்கள். இவை போகச் சற்றே வலிந்து உள்நுழைக்கப்பட்ட ஓர் எதிர்மறைக் கதாபாத்திரம். இவற்றுடன் சிலிர்ப்பூட்டும் துணைக் கதாபாத்திரங்களையும் கொண்டு ஒரு மெல்லிய கதையை போரடிக்காமல் சொல்லி இருக்கிறார்கள்.
ஒரு காட்சியில் அபிலாஷின் அம்மா, ‘தான் மீன் உண்ணாவிட்டாலும் மீன் சமைக்கும் போதெல்லாம் இறந்து போன தன்னுடைய கணவனின் வாசம் கூடவே இருப்பதாகவும் ஒருவரை விரும்புவதென்பது கைவிடமுடியாத ஒரு பழக்கம்’ என்று சொல்லும் காட்சி உள்பட வசனம் மெல்லிய வருடலாய் உணர்வைத் தொடுகிறது. ஆனால், இவ்வளவையும் மீறிக் கதைசொல்லல் முறையை நகைச்சுவையாக நகர்த்துவதா அல்லது அழுத்தமான உணர்வுகளால் கடத்துவதா என்கிற குழப்பம் திரைக்கதை நெடுகிலும் தொடர்கிறது.
மாறாக முடிவு யதார்த்தமாக அமைக்கப்பட்டிருந்தது வருடல். மெல்லிய நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துப் பழக்கப்பட்டிருந்த ஷைஜு குருப், அபிலாஷ் கதாபாத்திரத்தை ஏற்று சில முக்கியமான கட்டங்களில் சுமையைத் தாங்கமுடியாமல் சற்றே தடுமாறுகிறார். ஆனால், ஷெரினாக நடித்தி ருக்கும் தன்வி ராம், கடந்த காலத்தின் சோகச் சுமையைத் தன் அழகான உடல் மொழியில் வெளிப்படுத்துகிறார். இதமான சிறு பாடல்களும் கதையின் போக்குக்கு உதவுகின்றன.
கதாசிரியர் ஜென்னி கச்சபில்லியின் எளியகதையை சுவாரசியம் கெடாமல் இயக்கியிருக் கிறார் ஷாம்சு சைபா. மோகன்லாலின் ‘எல்2 எம்புரான்’ வெளிவந்த அதே வாரத்தில் வெளியான இப்படத்தின் மேல் விழுந்த வெளிச்சம் சற்று குறைவு. தமிழில் ‘இதயம்’ படம் வெளியாகி சில பத்தாண்டுகள் ஓடிவிட்டாலும் பொத்தி வைத்தக் காதலையும் சேர்ப்பிக்கப்படாத கடிதங்களையும் பொக்கிஷமாய் வைத்துக்கொண்டிருக்கும் ‘இதயம்’ முரளிகள் திரை வெளியில் இன்னமும் அமரத்துவத்துடன் விளங்குவது ஆச்சரியம்தான்!