

இயக்குநர் ‘ஈரம்’ அறிவழகனின் முதன்மை உதவி இயக்குநர் கௌதம் கணபதி எழுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சரண்டர்’. படத்தின் டீசர் முன்னோட்டம் வெளியாகி கவனம் ஈர்த்திருக்கும் நிலையில் படமும் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
‘சரண்டர்’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்துவிட்டு, அதன் கீழே ‘அறம் கூற்றாகும்’ என நல்ல தமிழில் துணைத் தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதையே தலைப்பாக வைத்திருக்கலாமே? - உண்மையைச் சொன்னால், ‘அறம் கூற்றாகும்’ என்பதைத்தான் முதலில் தலைப்பாக வைத்தேன். முதல் படம் எல்லாத் தரப்பு ஆடியன்ஸையும் போய்ச் சேர தலைப்பு மிகவும் பரிச்சயமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னதால் மாற்றினோம். ‘சரண்டர்’ என்பதும் கதையோடு நெருங்கிய தொடர்பு கொண்டதுதான்.
‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்பது இளங்கோவடிகளின் வாக்கு. அரசியலும் ஆட்சியும் ஒழுங்கற்றுப் போகும்போது, அறம் அழிந்து, அநீதி எழுந்து அதனால் குடிமக்கள் படும் துன்பங்கள் அதிகரிக்கும் என்பதைக் கண்டே இப்படிக் கூறினார். ‘சரண்டர்’ கதைக்கும் அது பொருந்தும்.
என்ன கதை? - சட்டசபைத் தேர்தல் நடக்க 5 நாட்கள் மட்டுமே இருக்கிறது. அப்போது சென்னையின் புறநகர் காவல் நிலையமான திருமழிசை ஸ்டேஷனில் ஒரு கைத்துப்பாக்கி காணாமல் போகிறது. ஆறு மாதத்தில் பணி ஓய்வு பெறவிருக்கும் ரைட்டர் லாலின் பொறுப்பில் இருந்த ஆயுதங்களில் ஒன்று அது.
தேர்தலுக்கு முன் அதைக் கண்டறிந்து மீட்காவிட்டால் லால் சஸ்பெண்ட் ஆவதுடன் பி.எஃப் உள்ளிட்டவையும் உடனே கிடைக் காமல் போகலாம். இதை உணரும் அந்த நிலையத்தின் பயிற்சி எஸ்.ஐ. ஆன தர்ஷன் களத்தில் இறங்கி துப்பாக்கியைத் தேடத் தொடங்குகிறார்.
இன்னொருபக்கம், பிரபல தாதாவான சுஜித்சங்கரிடம் ஒரு தொகுதியில் வாக் காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்யும்படி கோடிகளில் ஒரு பெரிய தொகைக் கொடுக்கப்படு கிறது. அந்தப் பணத்தை அவருடைய ஆட்கள் தொலைத்துவிடுகிறார்கள். துப்பாக்கியைத் தேடி தர்ஷனின் குழுவும் பணத்தைத் தேடி சுஜித் குழுவும் புறப்பட்டு, இரண்டையுமே நெருங்கும்போது ஒரு புள்ளியில் சந்தித்து மோதிக்கொள்கிறார்கள். அங்கிருந்து கதை எதை நோக்கிப் போகிறது என்பதுதான் திரைக்கதை.
இதில் தொலைந்தது துப்பாக்கி மட்டும் அல்ல. நல்ல மனிதர்களுக்குக் கஷ்டம் சூழ்ந்தாலும் அது பனிபோல் மறைந்து நல்லது நடக்கும் என்கிற ‘பேசிக் தியரி’தான் இந்தக் கதையை நகர்த்திச் செல்லும் வினையூக்கி. இதற்குள் ஓர் அப்பா - மகனுக்கு இடையிலான உணர்ச்சிப் போராட்டமும் ஒளிந்திருக்கிறது. ஒரு ஆக்ஷன் கம் எமோஷனல் டிராமா.
தர்ஷன் கதாபாத்திரம் பற்றி.. பயிற்சி எஸ்.ஐ.ஆக அந்தக் காவல் நிலையத்தில் பணியில் சேரும்போது சாப்பாடு வாங்கி வரும் எடுபிடி வேலைக்கு அவரைப் பயன்படுத்துவார்கள். அவரை அரவணைப்பவர்தான் நேர்மையான காவல்காரரான லால். ஒரு கட்டத்தில் தர்ஷனை ஏன் எடுபிடி வேலைகள் வாங்கினோம் என்று மூத்த அதிகாரிகள் அலறும்படி அவர் செய்யும் செயல் அவரை உயர்த்தும். இந்தக் கதாபாத்திரத்துக்காக ஓய்வு பெற்ற, காவல் பயிற்சிக் கல்லூரி அதிகாரியிடம் முறையாகப் பயிற்சி பெற்று நடித்துள்ளார் தர்ஷன்.
வேறு யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள் - படக்குழு பற்றியும் கூறுங்கள்.. ஹீரோயின் இல்லாத கதை. ஆனால், பாடினி குமார் ஒரு முக்கியகதாபாத்திரத்தில் வருகிறார். ‘ஹார்ட்பீட்’, ‘திருவள்ளுவர்’ ஆகிய படங் களில் அட்டகாசமான ரொமாண்டிக் கதாபாத்திரங்களில் வந்தவர். அவருக்கும் தர்ஷனுக்கும் சில ரசமான நகர்வுகள் படத்தில் உண்டு. முனிஷ் காந்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார். இசை விகாஸ் படீஷா. இவர் தேவி பிரசாத், தமன் ஆகியோரிடம் இணை இசையமைப்பாளராகப் பணியாற்றியவர்.
அவரை இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்து கிறோம். படத்தில் பாடல் கிடையாது. கதை அவ்வளவு வேகமாக நகரும். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ஆந்தாலஜி படத்தின் ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் தான் இப்படத் துக்கும் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவைப் போலவே சவுண்ட் டிசைனும் இதில் முக்கியமான ஒன்றாக இருக்கும். அபி பிக்சர்ஸ் மூலம் வெளிநாட்டு வாழ் இந்தியரான குமார் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இது அவருக்கும் முதல் படம்.