Published : 04 Jul 2025 11:08 AM
Last Updated : 04 Jul 2025 11:08 AM
இலங்கைத் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்பட்டதன் நிகழ்காலச் சாட்சியமாகச் சர்வதேசக் கவ னத்தை ஈர்த்திருக்கிறது யாழ்ப்பாணத்தின் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக் கூடுகளால் நிறைந்துள்ள பெரும் புதைகுழி. அதேபோல், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரசியல் படுகொலை நடந்து 34 ஆண்டுகள் கடந்த பிறகும் இந்திய மனம் அதை மறக்க விரும்பவில்லை என்பதை ‘தி ஹண்ட் - ராஜீவ் காந்தி கொலை வழக்கு’ என்கிற புதிய இணையத் தொடர் எடுத்துக்காட்டுகிறது.
ராஜீவ் கொலையாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவில் அங்கம் வகித்த சில மூத்த அதிகாரிகள் எழுதிய புத்தகங்கள் உள்பட, மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு இந்தியத் தலைவர் படுகொலை செய்யப்பட்டச் சதியின் வரைபடத்தை அலசி ஆராயும் பல நூல்கள், புத்தகச் சந்தையில் பல மொழிகளில் நன்கு விலைபோயின. அனிருத்ய மித்ரா என்கிற புலனாய்வுப் பத்திரிகையாளர் எழுதி வெளியான புத்தகத்தின் தரவுகளைத் தழுவி, 7 அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடரை சோனி லிவ் தளத்துக்காகத் தேசிய விருதுபெற்ற இயக்குநர்களில் ஒருவரான நாகேஷ் குக்குனூரின் படைப்பாக்கக் குழு வினர் உருவாக்கியிருக்கிறார்கள்.
சென்னையின் ஸ்ரீபெரும்புதூரில் 1991, மே 21ஆம் தேதி இரவு படுகொலை சம்பவம் நடந்த நாளிலிருந்து, அடுத்து வரும் 90 நாள்களுக்குள் சிபிஐயின் சிறப்புப் புலனாய்வுக் குழு கொலையாளிகளை படிப்படியாக நெருங்குவதுதான் கதை. படுகொலைச் சம்பவம் நடந்த 4வது நாள் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதும், சிபிஐ சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்குத் தலைமையேற்க டி.ஆர்.கார்த்திகேயன் விதிக்கும் நிபந்தனை யிலிருந்து தொடர் ஈர்க்கத் தொடங்குகிறது.
தமிழ்நாடு தடவியியல் துறை இயக்குநராக அப்போது பணி புரிந்த டாக்டர் பி.சந்திர சேகர், ‘மனித வெடி குண்டுத் தாக்குதல்’ வழியாகவே ராஜீவ் படுகொலை நிகழ்த்தப்பட்டது என்பதை உறுதி செய்தார். அது, சிபிஐயின் விசாரணைக்குப் பெரும் திறப்பைக் கொண்டுவர, அங்கிருந்து சூடு பிடிக்கும் விசாரணை, சென்னை, வேதாரண்யம், மதுரை, இலங்கை, பெங்களூர், டெல்லி என எட்டுக்கால் பாய்ச்சலில் விரைந்து சென்று சதியின் முடிச்சுக்களை படிப்படியாக விடுவித்துக்கொண்டே செல்கிறது.
ராஜீவ் படுகொலையில், புலிகளின் தரப்பில் கூறப்பட்ட ‘அமைதிப் படை’ காரணத்தை, ஒளிவு மறைவின்றித் தொடர் பேசியிருக்கிறது. ராஜீவ் படுகொலைக்குப் பிறகு, ஒற்றைக் கண் சிவராசன் புலிகளின் தலைமைக்குக் கட்டுப்படாமல் திமிறிக்கொண்டு இந்தியாவில் களமாடத் தொடங்கினார் என்கிற சித்தரிப்பைத் தொடரின் ‘டெம்போ’வாக கடைசிக் காட்சி வரைக் கையாண்டிருக்கிறார்கள். விசாரணையின் போக்கில், இன விடுதலைப் போராட்டக் களத்தில் போராளிகளாக இருந்தவர்களில் சிலர், எப்படிப்பட்ட சூழ்நிலையில் பயங்கரவாதிகளாக உருவெடுத்தார்கள் என்கிற கோணத்தைப் பட்டும் படாமல் தொட்டுச் செல்கிறது தொடர்.
தனு, ஒற்றைக் கண் சிவராசன் போன்ற பலருக்கும் நடிகர்கள் தேர்வு மிகத் துல்லியம்!. ஆனால், புலிகளின் தலைவர் பிரபாகரனாக நடிக்க, அவருடைய முகச் சாயல், நிறம், உடல்மொழி, குரல், உச்சரிப்பு என எதனோடும் அறவே ஒட்டாத, பாரிய வேறுபாடு கொண்ட ஒருவரைத் தேர்வு செய்திருப்பதன் மூலம், படைப்பாக்கக் குழு பாதுகாப்பான ஆட்டத்தை ஆடியிருக்கிறது. ராஜீவ் காந்தியாக ஒரு காட்சியில் தோற்றப் பொருத்தத்துடன் தோன்றி இருப்பவரின் பெயர் ராஜீவ் குமார்! ஒட்டு மொத்தமாக ‘நடிகர்கள் தேர்வு’ இத்தொடரின் பெரும் பலம்.
நடிப்பைப் பொருத்தவரை எந்தவொரு சிறு கதாபாத்திரத்தை ஏற்றவரையும் சிறு குறையும் சொல்ல முடியாது. ஆனால், சி.பி.ஐ. கார்த்திகேயனாக வரும் அமித் சியால், அமித் வர்மாவாக வரும் ஷாகில் வைத், கே.ரகோத்தமனாக வரும் பக்ஸ் ஆகியோர் கூடுதல் முக்கியத்துவத்துடன் நடிப்பில் தனித்துத் தெரிகிறார்கள். சிவராசனாக வரும் ஷமீக் முஸ்தபா தொடர் முழுவதும் மிரட்சியான பய உணர்வைத் தந்தபடியிருக்கிறார். தனுவாக வரும் ஸ்ருதி ஜெயன், நளினியாக வரும் அஞ்சனா பாலாஜி ஆகியோரின் நடிப்பும் டெரர் ரகம்.
அவ்வப்போது அனுமதிபெற்ற ஆவணப்படக் காட்சிகளும் தொடரில் தென்படுகிறது. ஆங்கிலம், இந்தியில் கதாபாத்திரங்கள் அதிகமும் பேசுவதால் ‘சப் -டைட்டில்’களை கவனிக்க வேண்டிய சிக்கல் தொடரில் இருக்கிறது. நாகேஷ் குக்குனூர் - ரோகித் - ஸ்ரீராம் ராஜன் ஆகிய மூவரும் இணைந்து எழுதியிருக்கும் திரைக்கதையில் தேவைப்பட்ட அளவுக்குச் சித்தரிப்பு களையும் சேர்த்திருக்கிறோம் என்பதை ‘பொறுப்புத் துறப்பு’ ஆகவே சொல்லிவிடுகிறார்கள்.
தபஸ் ரேலியாவின் ஒரிஜினல் பின்னணி இசை தொடருக்கு அட்டகாசமாக உயிரூட்டியிருக்கிறது. ஒரே நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்குத் தாவிச் சென்று தொடர்ச்சியை உணரவைக்கும் ஃபரூக் ஹண்டகரின் படத்தொகுப்பு தொடருடன் நம்மை இறுதி வரை பிணைத்து வைக்கிறது. வரும் நாள் களில் பேசுபொருளாகும் ஒரு தொடராக இது இருக்கும் என்பது மட்டும் உறுதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT