

நட்சத்திரங்கள் எப்போதுமே நேச்சுரலாகத்தான் இருக்கிறார்கள். கால்களைத் தரையில்தான் பாவியிருக்கிறார்கள். ஆனால், அவர்களைச் சுற்றியிருப்பவர்களும் ரசிகர்களும்தான் அவர்களுக்குப் பெரிய பிம்பத்தைக் கட்டமைக்கி றார்கள். நான் விஜய்க்கு கதை சொல்லச் சென்றபோது என்னோடு எஸ்கார்ட்டாக அனுப்பப்பட்டவர், எனது கதை ஓகே ஆகிவிட்டது என்று தெரிந்ததும் என்னை எப்படியாவதுப் படப்பிடிப்பில் கட்டுப்படுத்திவிட வேண்டும் என்று புதிய 10 கட்டளைகளைத் தூக்கிக் கொண்டு என்னிடம் வந்தார். ‘ஜான்.. விஜய் சார்.. காலையில 9 மணிக்கு செட்ல இருப்பார்.. சாயங்காலம் 6 மணிக்கு நீங்க அனுப்பிடணும். 5.30க்கு எல்லாம் கார் வந்துடும். அதேமாதிரி சன்ரைஸ் கால்ஷீட் எல்லாம் அவர்கிட்டசாத்தியமே இல்ல. நைட் ஷூட் இருக் குன்னா முன்னாடியே சொல்லிடணும்’ என்று வரிசையாக அடுக்கினார். இவை எல்லாம் இவர்களாகவே கற்பனை செய்துகொண்டது. வேலை என்று வந்துவிட்டால், விஜய் எவ்வளவு ‘இன்வால்வ்மெண்ட்’ காட்டுவார் என்பதற்கு ஊட்டி படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.
2004, டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி. புத்தாண்டு பிறக்கப் போகிறது. ‘சச்சின்’ படக்குழுவில் அனைவரும் விருந்து சாப்பிட்டுக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். நான், ஒளிப்பதி வாளர் ஜீவா, விஜய் மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ‘பத்து கட்டளை’ அன்பர் சற்று தூரமாக இருந்து எங்களை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது விஜய்: “அண்ணா.. நாளைக்கு நியூ இயர். சென்டிமென்டலா ஒரு ஷாட் எடுத்துட்டு நாம பேக்-அப் பண்ணிக் கலாம். என் கையால யூனிட்ல இருக்க எல்லாருக்கும் நான் கிஃப்ட் கொடுக்க விரும்புறேன். நாளை அவங்க லீவு மாதிரி எஞ்சாய் பண்ணட்டும்” என்றார். நாங்கள் ஓகே என்றதும் ‘ஹேப்பி நியூ இயர்’ சொல்லிவிட்டுத் தூங்கப் போய்விட்டார். உடனே அந்த அன்பர் ஓடிவந்து ‘விஜய் சார் என்ன சொல்லிட்டுப் போறார்?’ என்று பதற்றமாகக் கேட்டார். விஷயத்தைச் சொன்னதும் இவர் சீரியஸ் ஆகி: ‘நாளை ஒரு ஷாட்டுக்கு மேல எடுக்காதீங்க.. விஜய் தம்பி டென்ஷன் ஆகிடப் போறார். ஜாக்கிரதை..’ என்று எச்சரித்துவிட்டுப் போனார்.