

கோலிவுட்டின் தரமான நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்தவர் கலையரசன். சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் மூலம் பிரபலமான ப்ரியா யூபிடி ஆகிய இருவரும் நாயகன் நாயகியாக நடித்துள்ள படம் ‘டிரெண்டிங்’. ராம் பிலிம் பேக்டரி சார்பில் மீனாட்சி ஆனந்த் தயாரித்துள்ள இப்படத்தை எழுதி, இயக்கி, இயக்குநராக அறிமுகமாகிறார் சிவராஜ். அவருடன் படம் குறித்து உரையாடியதிலிருந்து…
படத்தின் தலைப்பு இது ‘விளாகர்’களைப் பற்றிய கதை என எண்ணத் தோன்றுகிறது.. அது சரிதான்! தனி ‘விளாகர்’களை (Vlogers) விட, இன்று ‘கப்பிள் விளாகர்’கள் (Couple vloggers) பெருகிவிட்டார்கள். அவர்களே
சட்டென்று பிரபலமாகியும் விடுகிறார்கள். இந்தக் கதையில் அப்படியொரு தம்பதியின் வாழ்க்கையில், ஆன்லைன் ‘கப்பிள் கேம்’ ஒன்று என்ன மாதிரியான சூறாவளியை உருவாக்குகிறது என்பதுதான் கதை.
கலையரசன் - ப்ரியா யூபிடி ஏற்றுள்ள கதாபாத்திரங்கள் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவான தகவல்களைத் தாருங்கள்..
அர்ஜுன் - மீரா இருவரும் நவீன யுகத் தம்பதிகள். இருவருக்கும் இயல்பாக இருக்கும் படைப்பாற்றல், அவர்களை யூடியூபில் தம்பதியாக இணைந்து காணொளி வெளியிடத் தூண்டுகிறது. மெல்ல மெல்ல அவர்களின் காணொளிகளுக்கு லைக்குகளும் பார்வையாளர்களும் குவிய, சட்டென்று பிரபலமாகி விடுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் சற்றும் எதிர்பாராத ஒரு நேரத்தில் அவர்களின் யூடியூப் கணக்கு நீக்கப்பட்டுவிடுகிறது. நொந்துபோகும் அவர்களைத் தூண்டில் வீசி மீன்களைப் பிடிப்பதுபோல், அவர்களைக் குறிவைத்து தொந்தரவு செய்யும் ‘பாப் அப்’ அழைப்பு, தம்பதிகளுக்கான ஆன்லைன் விளையாட்டில் சேரும்படி செய்துவிடுகிறது. முகம் தெரியாத மனிதர்கள் நடத்தும் அந்த விளையாட்டில் இணைகின்றனர். பல தம்பதிகளையும் முந்தி, முதலிடத்துக்கு வரவேண்டும் என்கிற வெறி அர்ஜுன் - மீராவுக்கு ஏற்படுகிறது.
விளையாட்டை நடத்து கிறவர்கள் கொடுக்கும் ‘டாஸ்க்கு’களின் பின்விளைவுகள் பற்றி யோசிக்காமல் விளையாடத் தொடங்குகிறார்கள். இதனால், அவர்களுடைய சொந்த வாழ்க்கை எப்படி யெல்லாம் மாறுகிறது, தம்பதிகளுக்கான ஆன்லைன் விளையாட்டு என்று வரும்போது நிஜ வாழ்க்கையில் ஒரு தம்பதிக்கு இடையிலான உண்மையான உணர்வுகள் என்னவாக மாறுகின்றன என்பதை ஓர் உளவியல் போராட்டமாக எதிர்கொள்வதுதான் திரைக்கதை.
இந்தக் கதையை எழுதத் தூண்டியது எது? - சமூக வலைதளத்தில் பார்த்த ஒரு ரீல்ஸ் காணொளிதான் தாக்கத்தைக் கொடுத் தது. அந்தக் காணொளியில் ‘கணவர் தூங்கிக்கொண்டிருக்கிறார். அவரிடம்தான் கர்ப்பமாகிவிட்ட செய்தியை மனைவி சொல்கிறார். அது கேமராவில் பதிவு செய்யப்படுகிறது என்று கணவருக்குத் தெரிந்தாலும் அவர் மனைவி சொல்லும் செய்தி அவரை சர்பிரைஸ் செய்வதுபோல் நடிக்கிறார்’.
உண்மையில் இதே போன்ற ஒரு தம்பதியின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளில் ‘எது பொய்.. எது உண்மை?’ என்கிற சந்தேகம் வந்து விடும் அல்லவா? அது அவர்களின் உணர்வுகளை எந்த அளவுக்குச் சிதைக்கும் என்பதுதான் இக் கதையை எழுத வைத்தது.
படக்குழு குறித்து.. கலையரசன் - ப்ரியா யூபிடியுடன் பிரேம்குமார், பெசண்ட் ரவி, வித்யா போர்ஜியா, சிவன்யா பிரியங்கா, கௌரி, பாலாஜி தியாகராஜன் எனப் பலர் நடித்திருக்கிறார்கள். பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசை சாம் சி.எஸ். தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் அசோக், லேலண்ட் கார்ப்பரேட் கம்யூனி கேஷனில் பல ஆண்டுகள் பணியாற்றிய மீடியா அனுபவம் கொண்டவர்.