

எல்லாக் காலத்திலும் திறமையான கலைஞர்களைக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் தற்போது ‘டெவிலன்’ என்கிற முழுநீளத் தமிழ்த் திரைப்படக்குழுவின் சாதனை பேசு பொருளாகியிருக்கிறது. சீகர் பிக்சர்ஸ் சார்பில் பி. கமலக் குமாரி - ந. ராஜ்குமார் தயாரிப்பில், பிகாய் அருண் இயக்கியிருக்கும் இப்படத்தை ‘திரைக்கதை முதல் திரையிடல்’ வரை 48 மணி நேரத்தில் உருவாக்கி உலக சாதனை படைத்திருக்கிறார்கள். இப்படத்தின் முன் தயாரிப்பு, படப்பிடிப்பு, பின் தயாரிப்பு, முதல் பிரதி உருவாக்கம் உள்பட, கடந்த மே மாதம் 29ஆம் தேதி மாலை 4:01 மணிக்குத் தொடங்கி, 31ஆம் தேதி மாலை 3:58 மணிக்குள் படத்தை முடித்துள்ளனர்.
நோபிள் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடுவர்கள் குழுவின் நேரடிக் கண்காணிப்பு மற்றும் அவர்களுக்கான திரையிடலுடன் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர். மொத்தம் 47 மணி நேரம் 58 நிமிடங்களில் திரைக்கதை எழுதல், படப்பிடிப்பு, படத்தொகுப்பு, சிறப்பு ஒலி, பின்னணி இசை சேர்த்தல், கலரிங், சப்-டைட்டிலிங், மாஸ்டரிங், திரையிடல் ஆகிய அனைத்தையும் முடித்துக்காட்டி சாதனை படைத்துள்ளனர். இரண்டு மணிநேரம் ஓடும் ‘ஹாரர் த்ரில்லர்’ படமான இது, விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
கைக்குள் அடங்கிய காதல்! - கடந்த பிப்ரவரியில் காதலர் தினத்தன்று வெளியான ‘தருணம்’ படத்தை ஜென் ஸ்டுடியோ சார்பில் புகழ், ஈடன் ஆகியோர் தயாரித்திருந்தனர். தற்போது இவர்கள், ‘நீ - ஃபாரெவர்’ என்கிற தங்களுடைய இரண்டாவது படத்தைத் தயாரித்துள்ளனர். அசோக்குமார் கலைவாணி எழுதி, இயக்கி, இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில், சுதர்சன் கோவிந்த் - அர்ச்சனா ரவி ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் ஒய்.ஜி.மகேந்திரா, நிழல்கள் ரவி, ரித்திகா ஸ்ரீனிவாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ‘தருணம்’ படத்துக்குப் பின்னணி இசை வழங்கி கவனம் ஈர்த்த அஸ்வின் ஹேம்நாத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். படம் குறித்து இயக்குநர் கூறும்போது: “இன்றைய GenZ தலைமுறையைச் சேர்ந்த பலரும் காதலிக்கவும் தங்களுக்கான வாழ்க்கைத் துணையைத் தேடவும் ‘டேட்டிங் ஆப்’களைத்தான் நாடுகிறார்கள்.
நானே அதைத்தான் செய்தேன். ‘டேட்டிங் ஆப்’ வழியாக உருவாகும் காதலில் நம்பகத்தன்மை என்பதும் மனப் பரிமாற்றம் என்பதும் பெரும்பாலும் போலியானது. இதை நேரடியாக நானே உணர்ந்தேன். ‘டேட்டிங் ஆப்’ வழியாக நீண்ட நாள்கள் பழகி, காதலைச் சொல்பவர்கள், பின் நேரடியாகச் சந்தித்துப் பழகிய பிறகு அக்கவுண்டை டெலீட் செய்துவிட்டு மாயமாகிவிடுவார்கள்.
இதனால், ஆண், பெண் இருவருக்குமான ‘மெண்டல் ட்ராமா’ தரும் வலியும் சிக்கல்களும் கொஞ்சநஞ்சமல்ல. இன்று கையடக்கக் கருவிக்குள் அடங்கிவிட்ட இந்த நவீனக் காதலின் சிக்கல்களை ஒரு புத்தாயிரத் தலைமுறை ஜோடியின் வாழ்க்கை வழியாக நகைச்சுவை, குடும்ப சென்டிமென்ட் கலந்து சொல்லியிருக்கிறோம்” என்றார்.