

தன்னுடைய கதாபாத்திரங் களின் வழியாக நம்முடன் உரையாடியவர் இயக்குநர் ஜெ.மகேந்திரன். வசனமும் காட்சி மொழியும் இசையும் இணைந்த தியானம் போல் தன்னுடைய தனித்துவமான படைப்புகளைத் தந்து தமிழ் சினிமாவுக்கு அமுதூட்டி யவர். அவருடைய மகன் ஜான் மகேந்திரன் எழுத்து, இயக்கத்தில் விஜய் நடித்த கொண்டாட்டமும் குளிரும் நிறைந்த காதல் திரைப்படம் ‘சச்சின்’. கமல்ஹாசனுக்குப் பிறகு அழுத்தமான காதல் கதைகளில் ஜொலித்த விஜய்க்கு மறைந்த ஜீவாவின் ஒளிப்பதிவில் ‘சச்சின்’ ஓர் அழகான ஓவியமாக அமைந்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு,இப்போது ‘சச்சின்’ மறு வெளியீடு கண்ட நேரத்திலும் கொண்டாடப் பட்டது. அப்படம் உருவான நாள்கள் பற்றிய தன்னுடைய மனப்பதிவை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் ஜான்:
“ஓஷோ ரஜனீஷை முழுவதும் படிக்காதவர்களுக்கு அவரைப் பற்றிய ஒரு பிம்பம் இருக்கும். அவருடைய எழுத்துகள், போதனைகளைப் படித்தவர்களுக்கோ வாழ்க்கையை முற்றிலும் புதிய ஒன்றாகப் பார்க்கத் தோன்றும். ரஜனீஷின் எழுத்துகளை வாசித்த தாக்கத்தில் நான் எழுதிய ‘அவுட் ஆஃப் பாக்ஸ்’ கதாபாத்திரம்தான் சச்சின். ஒரு சிறந்த, மாறுபட்டக் கதாபாத்திரம் கிடைத்துவிட்டால், அதுவே தன் கதையை எழுதிக்கொள்ளும். சமூகத்தோடு இயைந்து செல்ல முடியாத சச்சின் போன்ற ஒருவன், சமூகம் என்ன சொல்லும் என்பதற்காகவெல்லாம் கவலைப் பட்டுக்கொண்டிருக்காமல் வெளிப் படையாக, தன்னுடைய இயல்பான நகைச்சுவை உணர்வைக் கட்டுப் படுத்தி வைக்காமல் வாழ விரும்பு கிறவன். ஒளிவு மறைவு இல்லாத அவனைப் போன்ற ஒருவன், ஷாலினி போன்ற ஒரு பெண்ணைப் பார்த்தால் எப்படி புரபோஸ் பண்ணுவான், ஒரு காதல் தோல்வியை எப்படி ரீசீவ் பண்ணுவான் என்பதுதான் ‘சச்சின்’ என்கிற இளைஞனுடைய கதை.