ரோந்து - காவல் மனிதர்கள் | திரைப் பார்வை
“உங்களுடைய போலீஸ் கதாபாத்திரங்கள் நல்லவர்களா, கெட்டவர்களா?” என்றொரு கேள்வி கேட்கப்படுகிறது. “அவர்கள் மனிதர்கள்!” எனப் பதிலளிக்கிறார் மலையாளப் படவுலகில் தற்போது ‘காவல் கதை’களின் மன்னராக அறியப்படும் கதாசிரியரும் இயக்குநருமான ஷாஹி கபீர். இவரின் எழுத்து, இயக்கத்தில் உணர்வுக் குவியலாகச் சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம்தான் ‘ரோந்து’ (Ronth).
ஒரு சின்ன நகரம். பனியும் தூவல் மழையும் கைகோத்துக்கொண்டிருக்கும் கிறிஸ்துமஸ் காலத்தில் கதை தொடங்குகிறது. மூத்த காவல் உதவி ஆய்வாளர் யோஹனன், பணியில் இணைந்து ஆறு மாதங்களே கடந்த காவலர் தின்னாத் ஆகிய இருவரும் அன்றைய இரவுக்கான ரோந்துப் பணியைத் தொடங்குகின்றனர்.
வெவ்வேறு பின்னணியிலிருந்து வரும் இவர்களுக்குள் எழும் முரண்கள், ரோந்துப் பணியின்போது எதிர்கொள்ளும் வெவ்வேறு சம்பவங்கள், அவற்றுடன் தொடர்புடைய வெவ்வேறு கதை மாந்தர்கள் என இவ்விரு காவல் மனிதர்களின் வாழ்வைப் புரட்டிப்போடுகிறது அந்த இரவு. மறுநாள் விடியும்போது அவர்கள் என்னவாக ஆனார்கள் என்பதுதான் கதை.
மதம், சாதி, அரசு, லஞ்சம், குடி, உளவியல் சிக்கல்கள், கடந்த காலக் குற்றவுணர்வுகள் எனச் சமூகத்தின் அனைத்து அடுக்குகளையும் தொட்டபடி கதை நகர்கிறது. கோவையற்ற சம்பவங்களாக இருந்தாலும் முதன்மைக் கதாபாத்திரங்கள் இருவரும் அவற்றுடன் எப்படி ஊடாடுகிறார்கள் என்பதில் நாம் பிணைக்கப்பட்டுவிடுகிறோம்.
தோற்றம், மறைவு இரண்டிலும் ஒரே தேதி குறிப்பிடப்பட்டிருக்கும் கல்லறையின் முன் உதவி ஆய்வாளர் யோஹனன் ஏன் நிற்கிறார் என்பதை நமக்குப் போகிற போக்கில் புரியவைத்துச் செல்கிறார் இயக்குநர். முதன்மைக் கதாபாத்திரங்களின் போக்கை, ஓர் இடத்தில் தொடங்கி வேறொரு தளத்தில் முடிக்கும் ரசவாத திரைக்கதைகளின் வரிசையில் ‘ரோந்து’வும் சேர்ந்துகொள்கிறது.
பழுதாகிக் கிடக்கும் பழைய ஜீப் ஒன்றைத் திரைக்கதைக்குள் ஒரு சின்ன கதாபாத்திரமாகப் பயன்படுத்தியிருப்பது ரசனை. செதுக்கும் உளியாகத் திருத்தமான வசனங்கள். ஒரு குறிப்பிட்ட காட்சியில் பாதிரியார் ஒருவரிடம் காவல்துறையின் பங்கு பற்றி உதவி ஆய்வாளர் விளக்கும் வசனம் அமர்க்களம்.
பெரும்பாலான இரவுக் காட்சிகளில் கதையை நகர்த்துவதால், அக்காட்சிகளில் இரவின் ஆட்சியைத் தனது ஒளிப்பதிவில் கொண்டுவந்திருக்கிறார் மணிஷ் மாதவன். அதேபோல் வரம்பு மீறாத பின்னணி இசையை அமைத்திருக்கும் அனில் ஜான்சனின் பங்கும் மெச்சத்தக்கது.
யோஹனனாகப் பிரமாதப்படுத்தியிருக்கும் திலீஷ் போத்தனின் நடிப்புப் பயணத்தில் இப்படம் ஒரு மைல்கல். அவருக்கு ஈடுகொடுத்திருக்கும் ரோஷன் மேத்யூவும் உணர்ந்து நடித்திருக்கிறார். காவல் துறையில் சில காலம் பணியாற்றிய பின் கதாசிரியராக மாறியவர் ஷாஹி கபீர். போலீஸ் கதைகளை நேர்த்தியாகத் தருவதில் பெயர் பெற்ற கோவிந்த் நிஹ்லானியைத் தனது ‘ரோந்’தின் வழி தாண்டிச் சென்றுவிட்டார் ஷாஹி கபீர்.
