

அப்போது ‘காக்க காக்க’ படத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் தங்கி இருக்கும் அந்த ஏரி வீடு அவ்வளவு பிரபலம். இப்போதோ ‘மெய்யழகன்’ படத்தில் கார்த்தியின் ஓட்டு வீடு பிரபலம். அந்த இரண்டு வீடுகளையும் வடிவமைத்து உருவாக்கி, அழகுபடுத்தியவர் கலை இயக்குநர் ராஜீவன். கேரளத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர், மலையாள, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலை இயக்குநராக இருந்துகொண்டே, தெலுங்கு சினிமாவிலும் கொடிகட்டிப் பறக்கிறார்.
தற்போது பிரபாஸ், மாளவிகா மோகனன் நடிப்பில், மாருதி இயக்கத்தில், டி.ஜி.விஸ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘ராஜா சாப்’ என்கிற பான் இந்தியப் படத்துக்கு 19ஆம் நூற்றாண்டு அரண்மனை வீடு ஒன்றை வடிவமைத்து உருவாக்கியிருக்கிறார். ஹைதரா பாத்தை அடுத்த அசிஸ் நகரில் அமைக்கப்பட்ட ‘ராஜா சாப்’ அரண்மனை ‘செட்’டைச் சுற்றிக் காட்டிய அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி: