

பான் இந்திய சினிமா என்கிற பெயரில், 5 மொழிகளில் பெரிய பட்ஜெட் படத்தை உருவாக்கி வசூல் பெறுவதே இன்றைய போக்கு. ஆனால், அவை, மாநில அளவில் கலாச்சார வேறுபாடுகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங் களைக் கொண்டிருப்பதில்லை. அண்டை மாநில சினிமாவாக இருந்தாலும் தெலுங்கு சினிமா ரசனையை, தமிழ் ரசனையுடன் ஒப்பிடவே முடியாது. பாடல்கள், சண்டைக்காட்சிகள், கதாபாத்திர அணுகுமுறை, க்ளைமாக்ஸ் எனப்பலவற்றில் இருமொழிப் படங்களும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன. ‘குஷி’ படத்தைத் தமிழில் இயக்கி வெற்றி கொடுத்த கையோடு, அதே தயாரிப்பாளருக்காக அதன் தெலுங்குப் பதிப்பை மறுஆக்கம் செய்தார் எஸ்.ஜே.சூர்யா. அதில் நாயக னாக நடித்தவர் இன்றைய ஆந்திராவின் துணை முதல்வரான பவன் கல்யாண். தமிழ், தெலுங்கு பதிப்புகளில் தான் கையாண்ட மாற்றங்கள் பற்றிய மனப்பதிவை இந்த அத்தியாயத்தில் பகிர்ந்திருக் கிறார் எஸ்.ஜே.சூர்யா.
“இயற்கையின் சில விதிகளை ஒரு திரைக்கதைக்குள் பொருத்திவிட்டால், கலாச்சாரம் கடந்து உலகின் எந்த மொழி ரசிகர் களையும் அதை ரசிக்கச் செய்துவிடலாம். எடுத்துக்காட்டுக்கு ‘வண்ணத்துப் பூச்சி விளைவு’ என்கிற இயற்கையின் விதி. எங்கோ ஒரு வனாந்தரத்தில் கூட்டுப் புழுவாக இருந்து, அதிலிருந்து வெளியேறி சிறகை அசைக்கும்போது, இறைவனின் படைப்பில் மிகச்சிறியதாக இருக்கும் அந்த வண்ணத்துப்பூச்சியின் சிறகசைவினால் காற்றில் உண்டாகின்ற நகர்தல், சங்கிலித் தொடர்போல் செயல்பட்டு மிகப்பெரிய புயலாக உருவாகக்கூடும் என்பதுதான் அந்த வண்ணத்துப்பூச்சி விளைவு!