

‘நடிப்பு அரக்கன்’ என்று ரசிகர்களால் இன்று கொண்டாடப் பட்டு வந்தாலும், ‘இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா’வுக்காக ரசிகர்கள் காத்திருக்கவே செய்கிறார்கள். மிரட்டும்வில்லன் - கதாநாயகன் என மாறி மாறிப் பயணப்பட்டு வரும் அவர், ‘கில்லர்’ என்கிற படத்தை எழுதி, இயக்கவிருக்கிறார். அப்படிப்பட்டவர், தன்னுடைய ‘குஷி’ படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி களில் இயக்கிச் சாதனைப் படைத்தவர். ‘குஷி’ உருவான நாள்கள் பற்றி இந்த வாரமும் அவருடைய மனப்பதிவுகள் இதோ: “பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு, மதுரையில் இன்ஜினியரிங் படிக்க சீட் கிடைத்தது. நான் பி.ஈ. சேரவில்லை. சென்னையில் தங்கியிருந்து திரைப்பட இயக்குநர்களைச் சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளவே சென்னை வந்து லயோலா கல்லூரியில் பி.எஸ்சி. இயற்பியலில் சேர்ந்து படித்துப் பட்டம்பெற்றேன். ஆறு வருடப் போராட்டத்துக்குப் பிறகு, வசந்த் சாய் சாரிடம் உதவி இயக்குநராக, அஜித் நடித்த ‘ஆசை' படத்தில் பணியாற்றினேன். அவர்தான் செல்வராஜ் ஜஸ்டின் என்கிற என் பெயரை எஸ்.ஜே.சூர்யா என்று மாற்றினார்.
பிறகு லிவிங்ஸ்டனுடன் ‘சுந்தர புருஷன்' படத்தில் பணியாற்றினேன். பின்னர், ‘உல்லாசம்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தபோது, மீண்டும் அஜித்தை சந்தித்தேன். அப்போது அவர், “இன்னமும் நீங்க உதவி இயக்குநராதான் இருக்கீங்களா? அப்படின்னா எனக்கு ஒரு ஸ்கிரிப்ட் தயார் பண்ணுங்க” என்றார். அவர் என் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்ற ‘வாலி’ திரைக்கதையை எழுதி அவருக்குச் சொன்னேன். அஜித் தான் என்னை இயக்குநர் ஆக்கினார். அன்றைக்கு அஜித்தின் உதவும் மனம் எப்படிப் பரந்த வானம்போல் இருந்ததோ. இன்றைக்கும் தல அப்படித்தான். அதேபோல் தளபதி விஜய் என்றால் நன்றியுணர்வின் இலக்கணம் எனலாம். அதற்கு எடுத்துக்காட்டு, நான் இசையமைத்து, எழுதி, இயக்கி நடித்த ‘இசை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அவர் சிறப்பு விருந்தினராக வருகை தந்து பேசிய பேச்சு!