

அரசுகளும் போர்களும் நிரந்தரமானவை. அது பேரரசோ அல்லது சிறு குழுவோ, இரண்டுக்குமே சதுரங்க விதிகள் பொதுவானவை. லண்டன் மாநகரத்தில் ஒழுங்கமைக்கப் பட்ட குற்றப் பின்னணியில் இரு குறுநில மன்னர்கள். அவர்களுடைய குடும்பங்களும் அவர்களுக்கு விசுவாசமானவர்களும் ஒருபுறம் என்றால், அவர்களை மடக்கக் காத்திருக்கும் புலனாய்வுத் துறை இன்னொரு புறம். இந்த மூன்று குழுக்களிடையே நிகழும் விநோதமான சதுரங்க வேட்டைதான் ஹாட்ஸ்டாரில் கிடைக்கும் ‘மாப்லேன்ட்’ இணையத் தொடரின் கதைக்களம்.
ரோனான் பென்னட்டின் எழுத்து, இயக்கத்தில், நம் காலத்து அசல் நடிகரான டாம் ஹார்டியின் அபாரமான நடிப்பில் இத்தொடர் மிளிர்கிறது. முதல் சீசனில் இருக்கும் பத்து அத்தியாயங்களும் நம்மை இருக்கையின் நுனியில் அமரவைத்து, அடுத்தது என்ன என்கிற பேரார்வத்தை உருவாக்கிவிடுகிறது.
இத்தொடருக்கு மூன்று முக்கியத் தூண்கள். குறைவான பேச்சும் இறுக்கமான முகமுமாக வரும் தளபதி ஹாரி டிசோசாவாகப் பின்னியிருக்கும் டாம் ஹார்டிக்கு முதலாவது இடம். தன் வாழ்நாளெல்லாம் குற்றங்களின் குருதியில் நீந்திக் கடந்து சற்றே பிறழ்ந்த ஹாரிகன் குடும்பத்தின் தலைவர் கான்ராட் ஹாரிகனாக அதகளப்படுத்தியிருக்கும் பியர்ஸ் பிராஸ்னன் அடுத்த இடத்தில் அசரடிக்கிறார். பின்னணியிலிருந்து இயக்கும் மீவ் ஹாரிகனாக ராட்சச நடிப்பில் மிரட்டியிருக்கும் ஹெலன் மிர்ரன் மூன்றாவது தூண்.
வெளிவரும் ஆயிரம் குற்றத் தொடர்களுக்கு மத்தியில் அசரடிக்கும் கதைசொல்லல், கண்களைக் கைது செய்யும் காட்சியமைப்புகள், குறுவாள் கூர்மையில் அமைந்த வசனங்கள், அடுத்து யூகிக்க முடியாத திருப்பம் என்னவாக இருக்கும் என்கிற ஆர்வத்தைத் தூண்டிடும் நகர்வு என விறுவிறுப்பான வெப் தொடராக இது அமைந்துள்ளது!