

நடிப்பதற்காக ஊரிலிருந்து புறப்பட்டு வந்தவர்களில் விக்ரம் சுகுமாரனும் ஒருவர். ‘சினிமாவை நோக்கி உங்களை இழுத்து வந்தது எது?’ என ‘மதயானைக் கூட்டம்’ வெளியாகியிருந்த நேரத்தில் இயக்குநர் விக்ரம் சுகுமாரனிடம் கேட்டேன். “தேவர் மகன், கிழக்குச் சீமையிலே போன்ற தமிழர்களின் பண்பாட்டைப் பிரதி செய்த தமிழ்ப் படங்கள்தான் என்னைச் சென்னைக்குக் கூட்டி வந்தன” என்றார். ஆனால், அப்படங்களில் இருந்த சாதிப் பெருமிதத்தை அவர் தன் முதல் படைப்பில் நுழைய அனுமதிக்கவில்லை.
அப்படிப்பட்ட விக்ரம் சுகுமாறன், இன்றைக்கும் தமிழகத்தின் வறட்சியான மாவட்டமாகத் தொடரும் ராமநாதபுரத்தின் பரமக்குடியைச் சேர்ந்தவர். கமல்ஹாசன், விக்ரம், வேல.ராமமூர்த்தி, சீமான் போன்ற சிறந்த கலைஞர்களைத் தந்த அதே மண்ணிலிருந்து வந்தவர்.