

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கு இன்று கோடிக்கணக்கான ரசிகர்கள் பெருகிக் கிடக்கிறார்கள். தெலுங்கு, இந்தியிலும் சொந்தக் குரலில் பேசி நடிக்கும் இவர், சென்னைக்கு வந்தது நடிப்பு தாகத்துடன். ஆனால், இயக்குநராகப் பெயர் பெற்று, அஜித், விஜய் ஆகிய இருபெரும் மாஸ் கதாநாயகர்களை அடுத்தடுத்து இயக்கி உச்சத்துக்குப் போனார். அடுத்து முயன்றால், ரஜினி அல்லது கமலை இயக்கிவிடலாம் என்கிற மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தபோது, ‘நியூ’ படத்தைத் தயாரித்து, இயக்கி, தன் நடிப்புக் கனவை வென்றெடுத்தார்.
அதன்பின் அவர் நடித்த சில படங்களின் தோல்வியால் 8 ஆண்டுகள் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் வாழ்ந்தார். ஆனால், விட்ட இடத்திலிருந்து மீண்டும் மலையேறி இன்று புகழின் இமயத்தைத் தொட்டுத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். அஜித்துக்கு முதல் இரட்டை வேடக் கதாபாத்திரங்களை ‘வாலி’யின் வழியாகப் படைத்து அவருக்கு வெற்றி தேடிக்கொடுத்த எஸ்.ஜே.சூர்யா, அடுத்து விஜய்க்காகப் படைத்த ‘குஷி’ 2கே கிட்ஸ்களின் மனத் திரையில் இன்னும் குறுகுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஓர் அதிரடி ரொமாண்டிக் காமெடி திரைப்படம். அப்படம் உருவான நாள்களை இங்கே பதிவு செய்கிறார்.