

தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ‘ஒக்கடு’ மிகப்பெரிய ஹிட்! அதில், ஹீரோவின் அப்பா, மகனை அவ்வளவு நேசிப்பார். அவனைக் கபடி விளையாடச் சொல்வார். ‘நீ எப்படியாவது போலீஸ் ஆபீஸர் ஆகணும்’ என்று சொல்வார். இதை ‘கில்லி’யில் அப்படியே திருப்பிப் போட்டுவிட்டேன். மகன் கபடி விளையாடுவதை விஜயோட அப்பா வெறுப்பார். அப்பாவுக்குத் தெரியாமல் கபடி விளை யாடி ஜெயித்துக்கொண்டு வந்த கோப்பை களையெல்லாம் அவரது கண்ணில் படாமல் வீட்டில் ஒளித்து வைப்பார். அதற்கு விஜயின் தங்கை உதவியாக இருப்பார்.
வாழ்க்கையிலும் சரி கபடி விளை யாட்டிலும் சரி கண்ணியமாக இருக்கிற ஒரு இளைஞன் கதாபாத்திரம் எனும்போது, விஜய் விளையாடும் கபடி சினிமாவுக்கான ஒப்பேற்றலாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். எனவே ‘ஆத்தென் டிக்’ கபடி குறித்து முறையான ஆய்வு செய்தோம். அப்போது, கர்நாடகா - தமிழ்நாடு அணிகளுக்கிடையில் புதுச் சேரியில் நடந்த போட்டியை அனுமதிபெற்று வீடியோ ஷூட் செய்து, அதை எடிட் செய்து ஒரு சிடி ஆகத் தயார் செய்து விஜய்க்கு கொடுத்து அதைப் பார்க்கும்படி செய்தேன். அதைப் பார்த்த விஜய், ‘கபடியில் இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கின்றனவா?’ என்று ஆச்சரியப்பட்டார். கபடி பயிற்சி எடுத்துக் கொள்ளவும் ஒப்புக்கொண்டார்.