

அனைத்துக் கலை வடிவங்களையும் உள்ளடக்கிய ‘ஏழாம் கலை’ (Seventh Art) எனப் போற்றப்படு வது சினிமா. அது, அனைத்துலக நாடுகளினது வரலாற்றைப் புனைவின் வழி ஆவணப்படுத்தும் காட்சியூடக மன சாட்சியாக, தன்னை நூறாண்டுகளுக்கும் மேலாக நிலைநிறுத்தியிருக்கிறது.
கறுப்பு - வெள்ளை சினிமா தொடங்கி, இன்றைய டிஜிட்டல் சினிமாவின் யுகம் வரை விதவிதமான கதையாடல்களில், தொழில்நுட்ப வளர்ச்சிகளில் ஊடுபாவி பண்பட்டு நிற்கிறது உலக சினிமா. காலங்காலமாக அப்பாவி மக்களைக் கொன்றழித்த போர்ச்சூழல், இன வெறித் தாக்குதல், குடும்பம் தொடங்கி அரசமைப்பு வரையிலான வன்முறையாட்டம் குறித்து மனிதமார்ந்த மாண்புடன் பேசியிருக்கிறது.