

கடந்த 2004இல் வெளியான ‘கில்லி’ படத்தைத் தமிழ் சினிமாவின் அதிரடி ஹிட் எனக் கொண்டாட வைத்தார் இயக்குநர் தரணி. வில்லனிடமிருந்து காப்பாற்ற நாயகியை அழைத்துக்கொண்டு தப்பிக்கும் நாயகன், பெரும் அடியாள் கூட்டத்துடன் நாயகனை அசராமல் துரத்தும் வில்லன் என்கிற ‘டாம் & ஜெர்ரி’ ஓட்டம்தான் படம். திரைக்கதையின் பெரும் பகுதி, ஒரு ‘ரோட் மூவி’யாக வேகமெடுத்துப் பாயும்விதமாக இருக்க வேண்டும் என்கிற இயக்குநரின் எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்டு, ஒளிப்பதிவில் அதகளம் செய்திருந்தார் கோபிநாத். வித்யாசாகரின் பாடல்களும் பின்னணி இசையும் இயக்குநர் - ஒளிப்பதிவாளரின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் விதமாக அமைந்திருந்தது.அப்படிப்பட்ட ‘கில்லி’ திரைப்படம் 20 ஆண்டுகள் கழித்துக் கடந்த ஆண்டு மறு வெளியீடு கண்டபோது, புதிய படம் ரிலீஸ் ஆனதுபோல திரையரங்குகள் விழாக் கோலம் பூண்டன. 2 வாரங்கள் ஓடி 10 கோடி ரூபாய் வசூலித்தது. தலைமுறை கடந்து கொண்டாடப்பட்டிருக்கும் ‘கில்லி’யை உருவாக்கிய தரணி, படம் உருவான நாள் களை ப்ரியமுடன் இங்கே பகிர்ந்திருக்கிறார்:
“சிலரை மட்டும் ‘மச்சான் அவன் கில்லிடா..!’ என்று சொல்வார்கள். கில்லியாக இருப்பவர்களை, எவ்வளவு சிக்கலான இடத்தில் மாட்டிவிட்டாலும் எவ்வளவு பெரிய கூட்டத்துக்குள் தூக்கிப் போட்டாலும் எல்லாருக்கும் தண்ணிக்காட்டிவிட்டு முழு ஆளாக வந்து நிற்பார்கள். ‘கில்லி’யில் விஜய் ஏற்ற வேலு கதாபாத்திரமும் அப்படிப் பட்டதுதான். ‘கில்லி’ படம் உருவானதே சர்ப்பிரைஸ்தான். என்னுடைய உதவி இயக்கு நர்களுடன் ‘ஒக்கடு’ தெலுங்குப் படம் பார்க்க ஜெயபிரதா தியேட்டருக்குப் போயிருந்தேன்.