

சிறந்த கால் டாக்ஸி நிறுவனம் என்ற விருதை பல ஆண்டுகளாக பெறுகிறார் ‘கருடா கால் டாக்ஸி’ உரிமையாளரான இயக்குநர் மகேந்திரன். ‘‘அடுத்த ஆண்டு இதே விருதை உங்கள் கையால் நான் வாங்கிக் காட்டுகிறேன்’’ என்று அவரிடம் சவால் விடுகிறார் கோ கேப்ஸ் நிறுவன உரிமையாளர் சந்தோஷ் பிரதாப். இதனால் மகேந்திரன் கோபமடைகிறார். அதன் பிறகு, கோ கேப்ஸ் கால்டாக்ஸிகளில் அடுத்தடுத்து மர்மக் கொலைகள் நடக்கின்றன.
இதற்கிடையில், கார்த்திக் தன் மகன் கவுதம் கார்த்திக்குடன் அமைதியான, அன்பான ஒரு வாழ்க்கையை நடத்திவருகிறார். வளர்ந்துவரும் குத்துச்சண்டை வீரரான கவுதமுக்கும், நாயகி ரெஜினா கஸாண்ட்ராவுக்கும் காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில், கால் டாக்ஸி நிறுவனங்களுக்கு இடையிலான மோதலில் சிக்கி கார்த்திக் பலியாகிறார்.
எதற்காக அந்தக் கொலைகள் நடந்தன? இதற்கு காரணகர்த்தா யார்? பார்வைக் குறைபாடுள்ள கவுதம் தன் காதலி, நண்பன் உதவியோடு வில்லனை எப்படி பழிவாங்குகிறார் என்பது மீதிக் கதை. திரில்லர் பாணி படத்தை சுவாரசியமாக தந்திருக்கிறார் இயக்குநர் திரு.
90-களில் தமிழ் திரையுலக ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இடம்பிடித்த சொல் 'மிஸ்டர் சந்திரமவுலி' (மௌன ராகம்). பிரபலமான அந்த சொல்லை டைட்டிலாக கொண்ட படத்தில், மகன் கவுதமுடன் முதன்முதலாக களமிறங்கி இருக்கிறார் கார்த்திக். ‘ஏய்.. ஏய்.. நீன்.. நீன்னி..’ எனச் சொல்லியபடியே அவருக்கே உரித்தான அதே உடல்மொழியில் சில இடங்களில் வெகுவாய் கவர்கிறார். சில இடங்களில் ஸ்டீரியோ டைப்பில் கொஞ்சம் எரிச்சல்படுத்துகிறார்.
கடந்த 2 படங்களில் இருந்து வெகுவாக விலகி வந்திருக்கும் கவுதமிடம் நல்ல மாற்றம் தெரிகிறது. பல இடங்களில் பொறுப்பான நடிப்பால் அப்ளாஸ் அள்ளுகிறார். மிக ஸ்மார்ட்டாக இருக்கிறார். குறிப்பாக தந்தை - மகன் பாசக் காட்சிகள் இயல்பு. நாயகனோடு படம் முழுக்க வரும் பாத்திரம் ரெஜினாவுக்கு. நிறைவான நடிப்பு. காதல் பாடல்கள் இடைச் செருகலாக இருந்தாலும் போரடிக்கவில்லை.
‘இது கார்ப்பரேட் உலகம். ஒருத்தன் அழிந்தால்தான் இன்னொருத்தன் வாழ முடியும்’ என்று சொல்லும் சந்தோஷ் பிரதாப்.. மெச்சத் தகுந்த நடிப்பு.
சில காட்சிகளே வந்துபோகும் இயக்குநர் மகேந்திரன், முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் வரலட்சுமி சரத்குமார், சதீஷ், மைம் கோபி, இயக்குநர் அகத்தியன், விஜி சந்திரசேகர் என பெரும் நடிகர் பட்டாளத்துடன் பழைய பத்மினி கார் ஒன்றும் பிரதான பாத்திரமாக படம் முழுக்க பயணிக்கிறது. எக்கச்சக்க பாத்திரங்கள் இருந்தாலும், அனைவரிடமும் நல்ல நடிப்பை வாங்கியுள்ள இயக்குநருக்கு சபாஷ். கவுதமின் நண்பனாக வரும் சதீஷின் டைமிங் காமெடிகள் ஏமாற்றம். இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியனை இன்னும் நன்கு பயன்படுத்தி இருக்கலாம்.
‘வனக்குயிலே’ பாடல், காதைவிட கண்ணுக்கு இதமாக இருக்கிறது. ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம்.நாதன். படத்தின் பல காட்சிகள் அவரால் பசுமையாய் கண் முன்னே படர்கிறது. அதை அழகாய் தொகுத்து அளித்திருக்கிறார் சுரேஷ்.
ஆரம்பம் முதல் சின்னச் சின்ன திருப்பங்களோடு அழகியலாக நகரும் காட்சிகள், இடைவேளைக்கு பிறகு வேகமெடுக்கிறது. கார்த்திக் - வரலட்சுமி உறவை மிக சாதுர்யமாக கையாண்டிருப்பது, வில்லனை வீழ்த்த நாயகன் கையாளும் டெக்னிக் ஆகியவை சிறப்பு. அதேநேரம், படத்தின் முன்பாதி ஒரு ஒட்டுதல் இல்லாமல் செல்வது, கண்டதும் காதல், சில இடங்களில் ஒட்டாத அப்பா - மகன் சென்டிமென்ட், நெருடலான மின்மயான காட்சிகள் ஆகியவற்றை தவிர்த்திருக்கலாம்.
கார்ப்பரேட் மோதலில் அப்பாவிகள் சிக்குவதை அழுத்தமாக காட்டி, முன்னே செதுக்கி, பின்னே குறைத்திருந்தால் மிஸ்டர் சந்திரமவுலி இன்னும் கவர்ந்திருப்பார்.