

மாஸ் ஹீரோவாக உயரும் ஒரு நடிகருக்கு நவரசங்களும் வசப்பட்டிருக்க வேண்டும். நவரசங்களில் அவர் எந்த உணர்ச்சியை வெளிப் படுத்தினாலும் அது ரசிகர்களைக் கவர வேண்டும். நடிப்பு என்பதே தெரியாமல், வெகு இயல்பாக நடிக்கக்கூடிய நடிகர்கள் இன்றைக்கு வந்துவிட்டார்கள். இந்திய சினிமாவில், தென்னிந்திய சினிமாவில் ‘மெத்தட் ஆக்டிங்’ என்பதைத் தங்களை அறியாமலேயே பயன்படுத்தப் பழகிவிட்ட இயல்பான நடிகர்களின் எண்ணிக்கைப் பெருகிவிட்டது. ஆனால், அவர்களால் எல்லாம் மாஸ் ரசிகர்களைக் கவர முடியுமா என்றால், நிச்சயமாக முடியாது. அவர்கள் விமர்சகர்களை வேண்டுமானால் கவரலாம்.
ஆனால், ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொண்டு விட்ட ஒரு மாஸ் நாயகன், துரும்பைக் கிள்ளிப் போட்டாலும் ‘ஆஹா ஓகோ’ என்று கொண்டாடுவார்கள். தங்கள் இதயத்தில் இடம்பிடித்துவிட்ட மாஸ்நாயகன் வில்லத்தனம் செய்தாலும் ரசிப்பார்கள். ஏன், கதாநாயகியிடம் எல்லை மீறிக் காதல் செய்தாலும், அதை ரசிக்கும் மனோபாவம் வெகுஜன ரசிகர்களிடம் இருப்பதை தியாகராஜ பாகவதர் காலம் தொட்டுப் பார்த்து வருகிறோம். ரசிகர்கள் இப்படி வாரி அணைத்துக்கொள்ளும் ஒருவர்தான் காலம்தோறும் திரையுலகை ஆள்கிறார்கள். விஜய் அந்த வரிசையில் வரும் மாஸ்
நாயகன்தான். தன்னை அணுவணு வாகக் கொண்டாடுகிறார்கள் எனும் போது, ரசிகர்களின் மகிழ்ச்சிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைப்பையும் ஈடுபாட்டையும் கொடுக்கலாம், ரிஸ்க் எடுக்கலாம் என்கிற எண்ணம் இருந்தால் மட்டும்தான் ஒரு சக்சஸ்ஃபுல் மாஸ் ஹீரோவால் தனக்குக் கிடைத்த ஸ்டார்டமை தக்க வைத்துக் கொள்ள முடியும். இதை, காதல் படங்களில் நடித்து வரிசையாக வெற்றி கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே விஜய் உணர்ந்து விட்டார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், ‘ஷாஜகான்’ படத்தில் விஜய் காட்டிய ஈடுபாடும் உழைப்பும் அப்படிப்பட்டது.