

‘படத்தின் முடிவை யாருக்கும் சொல்ல வேண்டாம்; அது மட்டுமே எங்களின் மூலதனம்’. ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் புகழ் பெற்ற இந்த விளம்பர வாசகத்தோடு ‘அஞ்ஞாதவாசி’ (Agnyathavasi) படம் தொடங்குகிறது. மலையாளத்தில் வெளிவந்த ‘கிஷ்கிந்தா காண்டம்’ போல், கன்னடத்தில் திரைக்கதையை நம்பி வெளிவந்துள்ள படம். 1997-இல் கர்நாடகத்தின் மலைக் கிராமம் ஒன்றில் ஒரே நாளில் இருவர் இறந்து கிடக்கின்றனர். புகார்கள், வழக்குகள் ஏதுமற்ற அமைதியான அவ்வூர் காவல் நிலையத்துக்கு இது சவாலான வழக்காக மாறுகிறது. மேலும் அந்த ஊருக்கு முதல் முதலாக வாங்கி வரப்பட்ட ஒரு மேசைக் கணினியால் குழப்பம் கூடுகிறது. புலனாய்வின் பாதையில் கிளம்பும் பழைய குற்றங்களின் பின்னணியோடு இந்த இரட்டைச் சாவின் மர்மம் என்ன என்கிற முடிவை நோக்கி நகர்வதுதான் கதை.
படத்தின் கதைசொல்லல் முறைதான் அதன் பலம். சில துண்டுக் காட்சிகளின் வழியாக மிக மெதுவாகத் தொடங்கும் திரைக்கதை, அக்கிராமத்தின் பிரத்தியேகக் குணங்கள், அங்கு வாழும் கதாபாத்திரங்கள், அவற்றின் அன்றாடம் என நிதானம் காட்டுகிறது. பிறகு வேகமெடுக்கும் திரைக்கதைக்குள் விரியும் அடுக்குகள், காலம், இடம் என்கிற எவ்விதக் குழப்பமும் இல்லாமல் இரண்டு மணி நேரம் நம் கண்களை திரையிலிருந்து விலக்க முடியாதபடி செய்துவிடுகிறது.
தற்காலக் கன்னட சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகரான ரங்கயான ரகு, காலல் ஆய்வாளர் கோவிந்துவாக வருகிறார். அக்கதாபாத்திரத்தைத் தன் அசாத்திய உடல் மொழியால் வலிமையானதாக மாற்றுகிறார். கடந்த காலத்தின் ரகசியங்களைக் கண்களில் தேக்கி வைத்து அவர் தந்திருக்கும் நடிப்பு பங்களிப்பு உயர்தரம்.
வெளிநாட்டில் கணினித் துறையில் பணிபுரியும் அருண், அதனால் கணினியை வெறுக்கும் ஊர்ப் பெரியவர் சங்கரய்யா, அருணை காதலிக்கும் பங்கஜம், வேலைக்குப் போகாமல் புதுக் கணினியோடு பொழுது போக்கும் ரோஹித் என வெவ்வேறு கதாபாத்திரங்கள் சூழ இயங்கும் திரைக்கதையில் கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர்களின் பங்களிப்பும் கதை நகர்வில் அவர்களின் முக்கியத்துவமும் திரை அனுபவத்தை ஆழமாக்கி பார்வையாளரின் கூரியக் கவனத்தைக் கோருகின்றன. கதையில் வரும் பறவைகள், விலங்குகளுக்கும் கூட திரைக்கதையில் பொருத்தமான இடத்தை வழங்கியிருப்பது ஆச்சரியம்!
இப்படத்தைத் தயாரிக்கத் துணிந்த கதாசிரியர், இயக்குநர் ஹேமந்த் ராவ், ‘கோதி பன்னா’, ‘சாதாரண மைக்கட்டு’, ‘சப்த சாகரதச்சே எல்லோ’ படங்களின் இயக்குநர். கிருஷ்ணராஜின் கதைக்குத் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் ஜனார்தன் ஜக்கண்ணாவுக்கு ஒரு பூங்கொத்து! யாரோ ஒருவர் கதை எழுத, ஒரு பிரபல இயக்குநர் அதைத் தயாரிக்க, அதைப் பிரபலமாகாத ஒருவர் இயக்க என ஒத்திசைவுடன் அமைந்த கூட்டணியின் ஒத்திசைவுதான் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம்.
குற்றத்தை மட்டும் பேசாமல், அது தொடர்பான குற்றவுணர்வு, தண்டனை, பிள்ளை வளர்ப்பு , காதல் எனப் பல தளங்களில் திரைப்படம் நகர்ந்து சென்று முழுமையான திரை அனுபவத்தை வழங்குகிறது. தென்னிந்திய மொழிகளில் க்ரைம் த்ரில்லர்கள் குப்பை போல் பெருகிக் கிடக்கும் சூழ்நிலையில், ஒரு குற்றப் பின்னணி கதையை வசீகரமான படைப்பாகத் தரமுடன் தந்திருக்கும் நவீனக் கன்னட வெகுஜன சினிமா கேளிக்கை, மாஸ் மசாலாக்களுக்கு மாற்றாக பல படங்களைத் தருவதிலும் கெத்து காட்டுகிறது.