

நகைச்சுவைக் குணச்சித்திர நடிகராகத் திரையுலகில் பெயர் பெறுவது அவ்வளவு எளிதல்ல. ஆச்சி மனோரமாவும் கோவை சரளாவும் பதித்துச் சென்றிருக்கும் தடத்தின் தொடர்ச்சிதான் என்றாலும் தனது பாணியில் தனித்த தரத்தைப் பேணி வருபவர் தேவதர்ஷினி.
அப்படிப்பட்டவர் ஒரு முழுநீள சீரியஸ் கதாபாத்திரத்துக்கு ஆழ்ந்த நடிப்பை வழங்கி நிமிர்ந்து பார்க்க வைத்திருக்கும் படம் தான் ‘அம்..ஆ’. இப்படியொரு கதாபாத்திரத்தை அவருக்கு வழங்கி கௌரவம் செய்திருக்கிறது மலையாளத் திரையுலகம்.
தற்போது திரையரங்குகளில் தமிழில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தின் மொழிமாற்றுத் தரம், இதை நேரடித் தமிழ்ப் படம்போல் உணர வைக்கிறது. உதட்டசைவுகள் சிறிதும் வேறுபடாத வண்ணம் தமிழ் வசனங்களை மிகப் பொருத்தமாக எழுதியிருக்கிறார் எஸ்.ஆர்.வாசன். தாமஸ் செபாஸ்டியன் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதியிருப்பவர் கவிபிரசாத் கோபிநாத்.
தாய்மையின் தவிப்பு, போராட்டம், அதன் தூய்மை குணம் ஆகியனதான் கதையின் உயிர்நாடி. கேரளத்தில் கவந்தா எனும் ஒரு நெட்டுக்குத்தான மலைக் கிராமம். அங்கே நடுத்தர வயதுப் பெண்ணாக மராமத்து வேலைகள் செய்து தனது 4 வயது மகளைக் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றிவரும் அம்மணியம்மாவைப் (தேவதர்ஷினி) பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார் அந்த ஊருக்குச் சாலை போட ரோடு காண்ட்ராக்டராக வரும் ஸ்டீபன் (திலீஷ் போத்தன்). உண்மையில் அவர் ரோடு காண்ட்ராக்டர் தானா? அம்மணியம்மாவிடம் இருப்பது அவருடைய குழந்தைதானா என்கிற கேள்விகளுக்கு விடை தேடி த்ரில்ல ராக விரியும் திரைக்கதை நல்ல திரை அனுபவத்தைத் தருகிறது. குடும்பத்துடன் காண வேண்டிய முக்கியமான படம்.