

எந்தத் துறையாக இருந்தாலும் ‘வெற்றி’ என்பதுதான் அங்கீகாரத்துக்கான நுழைவாயில். சினிமாவிலோ ‘வெற்றி’ மட்டும்தான் கணக்கில் கொள்ளப்படும். தோல்விகள் கொடுத்தால், ஏற்கெனவே பெற்றிருக்கும் வெற்றிகளை அதிலிருந்து கழித்து விடுவார்கள். ஓர் இயக்குநராக எனது முதல் படம் ‘அவள் ஒரு பச்சை குழந்தை' எனக்குத் தோல்வி. அந்தத் தோல்வி கொடுத்த பாடம்தான் இரண்டாவது படத்தை வெற்றியாகக் கொடுத்துவிடவேண்டும் என்கிற தீவிரத்தை ஏற்படுத்தியது.
விஜயின் அறிமுகப்படமும் அவ்வளவாகப் போகவில்லை. அதில் அவனுக்கு வலி இருந்தாலும் தனக்குள் இருந்த நடிகனை அப்பாவுக்குக் காட்டிவிட்டோம் என்கிற தன்னம்பிக்கை அவனிடம் ஒளிர்வதைக் கண்டேன். அடுத்து ‘செந்தூரப் பாண்டி’ வெற்றிப் படம் என்றாலும், அதை முழுமையான விஜய் படம் என்று சொல்ல முடியாது. அந்த வெற்றியில் விஜயகாந்துக்கு அதிகப் பங்கிருக்கிறது. இதற்கிடையில், ‘சந்திரசேகர் கையில் நிறையப் பணம் இருக்கிறதுபோல; பையனை வைத்து ரிஸ்க் எடுக்கிறார்’ என்று விமர்சித்தவர்கள் எல்லாம், ‘ரசிகன்’ வெள்ளி விழா படமானதும் விஜயை அங்கீகரித்தார்கள். அப்படத்தில் பெற்ற வெற்றியை அடுத்தடுத்த படங்களில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அக்கறை விஜயிடம் தீவிரம் கொண்டது.