

ஆகஸ்ட் 15ம் தேதி ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ வெளியாகவுள்ள நிலையில் பரபரப்பாக இருக்கிறார் பார்த்திபன். தனது அலுவலகத்தில் ரிலீஸ் தொடர்பான வேலைகளில் இருந்த அவரைச் சந்தித்தோம்.
‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ தயாராகி பல நாட்கள் ஆகிறது. ஆனால் அதன் ரிலீஸ் இத்தனை நாட்கள் தள்ளிப் போனதற்கு என்ன காரணம்?
ஒரு விவசாயி வீடு கட்டுவதற்கும், ரியல் எஸ்டேட் செய்பவர் வீடு கட்டுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அதுபோலத்தான் படம் எடுப்பதும். நான் ரியல் எஸ்டேட் உரிமையாளர் இல்லை. ஒரு சாதாரண விவசாயி. நான் நடிக்கும் படங்களின் வருமானத்தை வைத்துதான் மற்றொரு படத்தை செய்ய முடியும். நஷ்டம் ஏற்பட்டால் அதிலிருந்து மீள நீண்ட நாட்கள் ஆகும். அதனால் பெரிய படங்களின் அலை ஓயட்டும் என்று காத்திருந்தேன். ஏற்கெனவே என் படத்தை ரிலீஸ் செய்ய நினைத்த நாட்களில் எல்லாம் பெரிய படங்கள் ரிலீஸ் ஆனது. அதனால் என் படத்தை தள்ளிப் போடவேண்டி வந்தது.
பெரிய படங்களை வெளியிடுபவர் களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் ரிலீஸ் தேதியை தயவு செய்து தள்ளிப்போடாதீர்கள். உங்கள் படத்தை தள்ளிப் போடுவதால் அதன் பின்னால் வரும் சுமார் பத்து படங்களாவது பாதிக்கப்படுகின்றன. பெரிய படங்கள் சொன்ன நேரத்துக்கு வெளியாகி விட்டால், சின்ன படங்களுக்கு பாதிப்பு இருக்காது. இந்தப் பிரச்சினைக்கு தயாரிப்பாளர் சங்கமும் ஒரு தீர்வு காண வேண்டும்.
தமிழ் சினிமா உலகம் சந்திக்கும் மற்றொரு முக்கிய பிரச்சினை திருட்டு விசிடி. அடுத்தவர்களின் சொத்தை கொள்ளையடிக்கிறோம் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் சிலர் திருட்டு விசிடிகளைத் தயாரிக்கிறார்கள். இந்த விஷயத்தில் மக்களின் விழிப்புணர்வுக்காக 10 வருடங்களுக்கு முன்பு அண்ணா சாலையில் நான் உண்ணாவிரதம் இருந்தேன். திரையுலகினர் பல போராட்டங்களை நடத்தியும் இந்த விவகாரத்தில் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
முதல்முறையாக புதுமுகங்களை வைத்து இயக்கி இருக்கிறீர்களே?
புது முகங்களை வைத்து படம் பண்ணும்பொழுது எனக்கொரு பயமிருந்தது. ஆனால் படத்தை முடித்துவிட்டு பார்க்கும்பொழுது அவர்கள் புது முகங்கள் மாதிரி தெரியவில்லை. தேர்ச்சிபெற்ற நடிகர்களுக்கு இணையாக நடித்தார்கள். இந்தப் படத்தில் புதுமுகங்கள் மட்டுமல்லாது ஆர்யா, அமலா பால், விஷால், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், இனியா, விமல், ஸ்ரீகாந்த், சாந்தனு, பரத், ஐஸ்வர்யா, ஜெயராம், சேரன் என்று பலர் நடித்துள்ளனர்.
கதையே இல்லாமல் ஒரு படமா? நம்ப முடியவில்லையே?
இதுபற்றிய விளம்பரங்களை கூர்ந்து கவனித்தால் ‘a film without a story?’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். பல பேர் இதிலுள்ள கேள்விக் குறியை விட்டுவிட்டு படிக்கிறார்கள். ஒவ்வொரு குறிக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். இதில் கேள்விக்குறியை விட்டுவிட்டுதான் நாம் படிக்கிறோம். கதையில்லாமல் ஒரு படம் என்றால் அதில் ஏதோ இருக்கிறது என்பதுதான் இதன் அர்த்தம்.
பார்த்திபன் படம் என்றாலே நக்கல், நையாண்டி நிறைய இருக்குமே. இந்தப் படத்தில் எப்படி?
இது ஒரு குடும்பப் படம். இதில் கில்மாக்கள் ஏதும் இல்லை. ஜாலியாக பார்க்கக்கூடிய ஒரு படமாக இல்லாமல், இதில் தொழில்நுட்ப ரீதியாக நிறைய செய்திருக்கிறேன். கதையில் இல்லாமல் திரைக்கதையில் நிறைய ப்ளே பண்ணியிருக்கிறேன். இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கு மக்களிடம் என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பதை அறிய ஆர்வமாக காத்திருக்கிறேன்.
மற்ற மொழிகளில் நீங்கள் அதிகமாக நடிப்பதில்லையே... ஏன்?
முதல் முறையாக இப்போது ஒரு கன்னட படத்தில் நடிக்க போகிறேன். தமிழில் நான் செய்த நிறைய படங்கள் நேரடியாகவே தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கில் நான் ராம் சரணோடு ஒரு படத்தில் நடித்துள்ளேன். தமிழில் சூர்யாவுடன் ‘மாஸ்’, வெற்றிமாறன் - தனுஷ் படங்களில் நடிக்கிறேன்.
கண்டிப்பாக அதில் வில்லன் ரோலில் நடிக்கவில்லை என்பதை மட்டும் இப்போது சொல்கிறேன். அதோடு ஒரு மலையாளப் படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் படம் ரிலீஸ் ஆனதும் நடிக்கவிருக்கும் படங்களில் கவனம் செலுத்துவேன்.