

நான் சினிமாவில் இயக்குநர் ஆக முயன்றதை எனது வீட்டில் எப்படி ஆதரிக்கவில்லையோ; அப்படித்தான் என் மகன் விஜய் சினிமாவுக்கு நடிக்கச் செல்வதையும் தொடக்கத்தில் நானும் ஆதரிக்கவில்லை. ஒரே மகன்; ஒரு நடிகனாக வெயிலிலும் மழையிலும் அவன் ஏன் கஷ்டப்பட வேண்டும்.
நாம் தான் அவனுக்கும் சேர்த்து சம்பாதிக்கிறோமே என்று நினைத்தேன். ஆனால், என்னுடைய பெற்றோர் என்னைத் தடுத்தபோது எனக்கு எவ்வளவு பிடிவாதம் இருந்ததோ, அதே பிடிவாதம் விஜய்க்கும் இருந்தது. விஜயின் விருப்பத்துக்கு இனி தடை போட முடியாது என்று தெரிந்த பிறகு, அவரை நாம் இயக்குவதைவிட, நம்மைவிடப் பெரிய இயக்குநர்களிடம் போய் அவருக்கு வாய்ப்புக் கேட்போம் என்று முடிவு செய்தேன்.