

ஹாலிவுட் படங்களில் டைனோசர் முதலான அழிந்துபோன விலங்கினங்களுக்கு அவ்வப்போது உயிரூட்டி ரசிகர்களை பயமுறுத்த முயல்வார்கள். அந்த வரிசையில் ராட்சத சுறாவுடன் ஆகஸ்ட் 10 அன்று வரவிருக்கும் திரைப்படம் ‘த மெக்’.
அமெரிக்க அறிவியல் புனைவு எழுத்தாளரான ஸ்டீவ் அல்டென் எழுதி 1997-ல் வெளியான நாவல் ‘மெக்: எ நாவல் ஆஃப் டீப் டெரர்’. பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பசிபிக் பெருங்கடலை ஆண்டு வந்த ‘மெகலோடன்’ என்ற வெண்ணிற சுறா மீண்டும் தட்டுப்படுவதும், அதை எதிர்கொள்ளும் ஜோனாஸ் டெய்லர் என்ற அமெரிக்கக் கடற்படை அதிகாரியின் ஆழ்கடல் சாகசங்களுமே ‘மெக்’ வரிசை நாவல்களின் மையம். நாவலுக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து அப்போது தொடங்கிய திரைப்படமாக்கும் முயற்சிகள் பட்ஜெட் காரணமாகப் பல முறை கைவிடப்பட்டன. ஒரு வழியாக 2011-ல் அறிவிக்கப்பட்ட ‘த மெக்’ தற்போது திரைக்கு வருகிறது.
உலகின் மிகப் பெரும் ஆழ்கடல் அருங்காட்சியகம் எதிர்பாரா ஆபத்தைச் சந்திக்கிறது. அழிந்து போனதாகச் சொல்லப்படும் மெகலோடன் சுறா தனது 75 அடி நீள உடலும் கோரப் பற்களுமாக மனிதர்களை விரட்டி வேட்டையாடுகிறது. இந்த ராட்சத ஜந்துவுக்கு எதிராகக் களமிறங்கும் ஜோனாஸ், ஆழ்கடல் அருங்காட்சியகத்தில் சிக்கித் தவிக்கும் தன் முன்னாள் மனைவி உள்ளிட்டோரை மீட்க நடத்தும் சாகசமே ‘த மெக்’ திரைப்படம்.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தொடங்கி வைத்த ஜாஸ் (Jaws) வரிசைப் படங்கள், அவற்றின் பாதிப்பில் வெளியான ஒரு டஜனுக்கும் மேலான திரைப்படங்களில் சுறாவைக் காட்டியே ரசிகர்களைப் பயமுறுத்தி ஓய்ந்துபோனது ஹாலிவுட் படவுலகம். எனினும் ‘மெக்’ நாவல் மீதான 20 ஆண்டுகளாக மிச்சமிருக்கும் வாசக ஈர்ப்பு, டைனோசர் பாணியில் நிஜமும் புனைவும் பின்னிப்பிணைந்த கதை, பெரும் பொருட் செலவிலான படமாக்கம் ஆகியவை ‘த மெக்’ திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பை தந்துள்ளன. ஜேசன் ஸ்டாதம், ரூபி ரோஸ், ரெய்ன் வில்சன் உள்ளிட்டோர் நடித்த திரைப்படத்தை ஜான் டர்டெல்டாப் (Jon Turteltaub) இயக்கி உள்ளார்.