

நாட்டார் தெய்வங்கள் குறித்துத் தமிழ் சினிமாவில் இதுவரை அதிகமும் காட்டப்பட்ட அம்சங்கள் கிராமியக் கோயில் திருவிழாக்கள், சாமியாடிகள் பற்றி மட்டுமே. ஆனால், ‘எமகாதகி’, ஆணவக் கொலை வழியாக வலிந்து சிறுதெய்வம் ஆக்கப்பட்ட பெண் களின் விடுதலைக் குரலையும் அது நெரிக்கப்பட்ட அவர்களின் குமுறலையும் கலை நேர்த்தியுடன் ஓங்கி ஒலித்திருக்கிறது.
தஞ்சையின் வளமை மிகுந்த கிராமம் ஒன்றின் தலைவர் செல்வராஜ். கல்லூரிப் படிப்பை முடித்த அவருடைய மகள் லீலா, ஒரு நாள் இரவு சடலமாகத் தூக்கில் தொங்குகிறாள். ஆஸ்துமா பிரச்சி னையால் அவ்வப்போது அவதிப்படும் அவள், மூச்சுவிட முடியாமல் இறந்துவிட்டதாக ஊரை நம்பவைக்கும் குடும்பம், அவளது இறுதிச் சடங்கை முடித்துவிட முயல்கிறது. சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்ல லீலாவின் சடலத்தைத் தூக்க முயலும் போது அது சாத்தியமில் லாமல் போகிறது.
பல பேர் சேர்ந்து முயன்றும் தூக்க முடியாமல் தடுக்கும் சக்தி எது? லீலாவின் சடலத்துக்குக் குடும்பத்தினரும் ஊராரும் இறுதிச் சடங்கு செய்தார் களா, இல்லையா? லீலாவின் மரணத்தில் மறைந்திருக்கும் மர்மம் என்ன ஆகிய கேள்விகளுக்கு ‘நேச்சுரல் ஹாரர்’ என்கிற கேன்வாஸில் ஒளி ஓவியமாக வரைந்து காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன்.
கணவனின் இறப்புக்குப் பிறகு வலுக்கட்டாயமாக உடன்கட்டை ஏற வற்புறுத்தப்பட்ட பெண்கள் ஏராளம். தீயின் புகையில் மூச்சுத் திணறியும் உடல் கருகியும் இறந்து போனவர்களை, ‘தீப்பாய்ந்த அம்மன்’ களாக வழிபடுவதன் மூலம், பெண்கள் மீதான ஒடுக்குதலைப் புனிதப் படுத்தித் தப்பித்து வரும் ஆண் மைய உலகம் மீது ஆராவாரம் இல்லாமல் சாட்டையைச் சுழற்றியிருக்கிறார் இயக்குநர். சிறுதெய்வம் ஒன்றின் மரணத்துக்கான காரணத்தையே நாயகியின் மூச்சுப் பிரச்சினைக்கு எளிய குறியீடாக வைத்திருக்கிறார்.
லீலாவின் குடும்பம், குடும்ப உறுப்பினர்கள், உறவுகளுக்கு இடையிலான உளவியல் சிக்கல், சமூக அடுக்கில் அவர்களின் சாதிப் படிநிலை, அதனால் விளையும் முதன்மைச் சிக்கல் ஆகிய காரணங் கள், லீலாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை நோக்கி, ஒவ்வொரு புதிராக விடுவித்துக்கொண்டு வரும் ‘நான் - லீனியர்’ கதையுத்தி, எந்தவித சினிமாத்தனத்திலும் சிக்கி விடாமல் பதற்றத்தைப் பார்வை யாளர்களுக்குக் கடத்திக்கொண்டே இருக்கிறது.
ஒப்பாரியின் வழியாக மரணத்தின் ரணத்தைக் கடக்க விரும்பும் தமிழ் மரபை, ஜெசின் ஜார்ஜின் இசை வழியாகவும், ‘நீ மின்னுனா நட்சத்திரம்’ என ஏங்கியழும் தஞ்சை செல்வியின் குரல் வழியாகவும் காட்சியாக்கிய விதம் உலுக்குகிறது.
மகள் இறப்புக்கான காரணத்தை அறிய முடியாமல் தவிக்கும் அம்மா வாக வரும் கீதா கைலாசமும் அவரு டைய கணவராக வரும் பேராசிரியர் ராஜுவும் மட்டுமே தெரிந்த முகங்கள். பேதமறியா காதலெனும் உணர்வின் பிரதியாக வரும் லீலாவாகவும் பின் உயிரற்ற சடலமாகவும் நம்ப வைக்கும் உயர்தரமான நடிப்பைத் தந்திருக்கிறார் ரூபா கொடுவாயூர்.
கதை, திரைக்கதை, உரையாடல், இசை, நடிகர்களின் பங்களிப்பு என எல்லா அம்சங்களும் சிறந்து விளங்கும் இந்தப் படத்தில் சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு பல மாயங்களைச் செய்திருக்கிறது. முன்பொரு காலத்தில் ஓர் அகால மரணத்தைச் சந்தித்த வீடு, நிகழ்காலத்தில் மரணம் நிகழவிருக்கும் வீடு, மரணம் நிகழ்ந்த பிறகான வீடு என்கிற மூன்று நிலைகளுக்கான ஒளியமைப்பை அவர் லீலாவின் வீட்டுக்குள் உருவாக்கியிருக்கும் விதம், இந்தப் படத்தின் ஹாரர் தன்மையை கலாபூர்வம் ஆக்கி இருக்கிறது.
வெளிப்புறக் காட்சிகளிலோ காவிரியின் கிளையாறுகள் பாய்ந்து செழிக்கும் கிராமியத் தஞ்சையின் அசலான நிலப் பரப்பை விஸ்தாரமாகப் படியெடுத் திருக்கிறது. ‘எமகாதகி’ என்றைக்கும் நினைவில் நிற்கப்போகும் அசலான திரை அனுபவம்.