திரைப் பார்வை: விபத்தை வென்று விளையாடு! - சூர்மா (இந்தி)

திரைப் பார்வை: விபத்தை வென்று விளையாடு! - சூர்மா (இந்தி)
Updated on
2 min read

”திரும்பி வரும்போது, உனக்கு என்ன வாங்கிட்டு வரணும்..?”

“தங்கம்… தங்கம் வாங்கிட்டு வா..!”

- இப்படித் தன்னுடையதை மட்டுமல்ல, இந்தியாவுக்காகத் தங்கம் வெல்லும் தன் அண்ணனது கனவையும் சுமந்துகொண்டு, உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்குச் செல்கிறார் சந்தீப் சிங். போகும் வழியில் ஒரு விபத்து! அவர் உயிர் பிழைத்தாரா, மீண்டும் எழுந்து நடமாடினாரா, இந்தியாவுக்காக விளையாடினாரா, பதக்கம் வென்றாரா என்பதைச் சொல்கிறது ‘சூர்மா!’ ‘சக்தே இந்தியா’ படத்துக்குப் பிறகு இந்தியாவின் தேசிய விளையாட்டை நினைவுபடுத்த மேலும் ஒரு படம். ஆனால், மிக முக்கியமான படம், ‘சூர்மா’.

தோட்டா துளைத்த கனவு

ஹரியாணா மாநிலத்தின் மத்திய தரக் குடும்பம் ஒன்றில் பிறந்த சந்தீப், இன்று இந்தியாவின் மிகச் சிறந்த ஹாக்கி வீரர்களில் ஒருவர். அர்ஜுனா விருதை வென்றவர். தற்போது ஹரியாணா போலீஸில் டி.எஸ்.பி.யாக இருப்பவர்.

ஆனால், ஆடுகளத்தில்  மிகச் சிறந்த வீரராக, சர்வதேசப் போட்டிகளில் மிளிர்ந்துகொண்டிருந்த நாட்களில் நடந்த ஓர் அசாதாரணச் சம்பவம் அவர் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. 2006-ல் ஹரியாணாவிலிருந்து டெல்லிக்கு ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தார் சந்தீப். அப்போது காவலர் ஒருவரின் கவனக் குறைவால் அவரது துப்பாக்கியிலிருந்து வெளியான தோட்டா, சந்தீப்பின் முதுகைப் பதம் பார்த்தது. ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடுவதற்கு இரண்டு தினங்களே எஞ்சியிருந்த நிலையில், அந்த விபத்து, அவரது கனவைச் சிதைத்தது.

கோமாவில் இருந்தார். உயிர் பிழைத்தாலும், சுமார் ஒரு வருடம், இடுப்புக்குக் கீழே உறுப்புகள் செயல்படாத நிலையில், சக்கர நாற்காலியில் வலம் வந்தார்.

கச்சிதமான ‘உத்தி’

இதுபோன்ற ‘ஸ்போர்ட்ஸ் பயோபிக்’குகளில், குறிப்பிட்ட வீரரின் உடல்மொழியைப் பிரதிபலிப்பதை மட்டுமே வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், ‘சூர்மா’வில், சந்தீப் ஆடுகளத்தில் பயன்படுத்தும் ‘ட்ரேக் ஃப்ளிக்’ (drag flick) உத்தி, அவ்வளவு நேர்த்தியாகப் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.

ஹாக்கி விளையாட்டில் ‘பெனாலிட்டி கார்னர்’களின்போது, இந்த உத்தி பயன்படுத்தப்படுகிறது. பெனாலிட்டி ‘ஷாட்’ அடிக்கும் வீரர், தன் உடலைக் குனிந்து, தன் ஹாக்கி மட்டையைத் தரையோடு இழுத்து, மட்டையின் வளைவில் பந்தைக் கொஞ்சம் தூக்கி, கோல்போஸ்ட்டை நோக்கி எறிவார். அதுதான் ‘ட்ராக் ஃப்ளிக்’ உத்தி. இந்த உத்தி, உலகில் உள்ள வேறு எந்த ஹாக்கி விளையாட்டு வீரரை விடவும் சந்தீப் சிங்குக்கு மிகச் சரியாகக் கை வந்தது. அவரது ‘ட்ராக் ஃப்ளிக்’கின் வேகம் மணிக்கு 145 கிமீ. அதனால் அவரைச் செல்லமாக ‘ஃப்ளிக்கர்’ சிங் என்று அழைப்பதும் உண்டு. அந்தக் காட்சிகள் படத்தில் அவ்வளவு நேர்த்தியாக வந்திருக்கின்றன. நாயகனாக நடித்திருக்கும் தில்ஜீத் இந்தக் காட்சிகளில் அச்சு அசலாக சந்தீப் சிங்கை நினைவுபடுத்திவிடுகிறார். காரணம் இந்தக் காட்சிகளுக்கு சந்தீப் சிங்கேதான் பயிற்சியளித்தார்.

விபத்துக்குப் பிறகு, மீண்டு வரும் நிஜ சந்தீப், கேப்டனாகப் பொறுப்பேற்று 2009-ல் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பையை 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்காக வெல்கிறார். அந்தப் போட்டியில் ‘டாப் கோல் ஸ்கோரர்’ அவர்தான். 2010-ல் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெறுகிறார். 2012-ல் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுகிறது. அப்போது பிரான்ஸுக்கு எதிராக மட்டும் 5 கோல்கள் (அதில் ஒன்று ஹாட்ரிக்!) போட்டார் சந்தீப். அந்தத் தகுதிச் சுற்றுப் போட்டிகளிலேயே மிக அதிக கோல் போட்டவரும் (19) அவரே!

இந்தக் காரணங்கள் எல்லாம், ‘சூர்மா’வை உண்மைக்கு நெருக்கமாக மாற்றுகின்றன. பஞ்சாபியில் ‘சூர்மா’ என்றால் ‘வீரர்’ என்று அர்த்தம்.

'காஷ்மோரா' படத்தில் நடிக்க விரும்பினேன்: விஜய் சேதுபதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in