

விஜய் ஒரு வெற்றி நாயகனாக வேகமாக வளர்ந்துகொண்டிருந்த தொடக்க நேரம். அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் அல்லாமல், தொடக்கத்தில் விஜய் நடித்த வெளிப் படங்களில் ஒன்று ‘கோயமுத்தூர் மாப்ளே’. அதை இயக்கி, இயக்குநராக அறிமுக மானவர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் உதவியாளரான சி.ரங்கநாதன். அந்தப் படம் உருவான நாள்களை இந்த வாரமும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
“சினிமாவில் ஹீரோவாகும் கனவைச் சிறு வயதிலேயே வரித்துக்கொண்டிருந்த விஜய்க்கு அவருடைய அம்மா பெரிய சப்போர்ட். ‘அப்பா ஒரு டைரக்டரா இருந்தா.. மகனை ஹீரோவாக ஆக்கியே தீரணும்னு நினைக்கிறது சரியில்ல’ என்று எஸ்.ஏ.சி. மறுத்து வந்தார். ‘ஹீரோவாக ஆவது பெரிய விஷயமில்லை; சக்சஸ்ஃபுல் ஹீரோவாக நிலைப்பதுதான் சவால்’ என்பது அவருடைய தயக்கத்துக் கான காரணம். தவிர, ‘விஜய் 18 வயதில் ஹீரோ ஆக வேண்டுமா, முகத்தில் இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டி வரட்டும்’ என்று கோரிக்கையை ஏற்கவில்லை. இச்சமயத் தில், விஜய் காணாமல் போய் ஒரு நாள் முழுவதும் கொடுத்த ட்ரீட் மெண்ட் வீட்டில் நன்றாகவே வேலை செய்தது. மகனை இதற்குமேல் அலட்சியப்படுத்த முடியாது என்கிற நிலை வந்தபிறகு எஸ்.ஏ.சி.சார் விஜய்க்கு எழுதிய கதைதான் ‘நாளைய தீர்ப்பு’. அந்தப் படத்தில் விஜயுடன் நடித்த சீனியர் நடிகர்களில் ராதாரவி தொடங்கி அத்தனைப் பேரும் ‘என்ன சார்! உங்கப் பையன் இந்த வயசுல நீங்க எப்படி பால் போட்டாலும் அடிக்கிறான். அவன் நடிப்பு ரொம்ப கிளாஸ்; இவர் ஒருத்தர் போதும் உங்க குடும்பத்தைப் பார்த்துக்க’ என்று பாராட்டினார்கள்.