

வெளிநாட்டில் பணி புரிந்து சென்னை வந்திறங்கி சொந்த ஊரான கோவைக்கு செல்ல தனது மனைவி குழந்தையுடன் விமான நிலையத்தில் காத்திருக்கிறார் சிவா (ஜெய்). அதேபோல் மதுரைக்குச் செல்ல மனைவி, குழந்தையுடன் காத்திருக்கிறார் குணா(யோகி பாபு). எதிர்பாராதவிதமாக சிவாவின் ஆண் குழந்தை குணாவிடமும், குணாவின் பெண்குழந்தை சிவாவிடமும் இடமாறிவிடுகின்றன.
ஜமீன்தாரான சிவாவின் அப்பா (சத்யராஜ்) தனது பரம்பரை சொத்துக்காக ஆண் வாரிசையும், ஜோதிடம் மற்றும் சகுனங்களில் தீவிர நம்பிக்கைக் கொண்டவரான குணாவின் அப்பா இளவரசு பெண் வாரிசையும் எதிர்பார்த்திருக்கிறார்கள். பெற்றோர் எதிர்பார்த்தபடி வாரிசுகள் பிறந்ததில் மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பிய இருவருடைய குழந்தைகளும் மாறியிருப்பது கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடை, மாறிய குழந்தைகளை மாற்றிக்கொள்ள அடுத்து வரும் இரண்டு நாட்களில் இவர்கள் படும் அல்லல்கள்தான் கதை.
90களில் ஆள் மாறாட்டத்தை மையமாக வைத்து வெளியான பல படங்களின் கதைகளை ஒத்திருக்கும் படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள். எல்லாரையும் திரைக்கதைக்குத் தேவையான அளவு பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ஆனால், குழந்தை மாறியது தெரிந்ததும் உடனே ஊரைவிட்டுக் கிளம்பு முடியாமல் அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கும் குடும்பச் சூழலை இன்னும் கூட தர்க்கத்துடன் அமைத்திருக்கலாம்.
குணாவிடம் இருக்கும் குழந்தை ஆண் அல்ல; பெண் என்றதறிந்து வில்லன்களான ஆனந்த ராஜும் ஸ்ரீமனும் நடத்தும் குழந்தைக் கடத்தல் நாடகம் நகைச்சுவைத் தோரணமாக விரிவதும் அதில் மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை குழுவினரின் ‘ஆக்ஷன் காமெடி’யும் தேவையான அளவுக்குக் கிச்சுகிச்சு மூட்டுகிறது.
இக்கதை ஜெய்க்கு ஏற்றதாக இல்லை. அதனால், அவர் பெரிய அளவில் நடிப்பிலும் சோபிக்க முடியவில்லை. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் மட்டும் தன் திறமையைக் காட்டுகிறார். ஆனால், யோகிபாபு கிடைத்த களத்தில் புகுந்து விளையாடியிருக்கிறார். நகைச்சுவை குணச்சித்திரம் செய்வதில் நானே ஆட்ட நாயகன் என்பதை இந்தப் படத்திலும் நிரூபிக்கிறார். குழந்தையைக் காணவில்லை என்று எல்லோரும் பதறிக்கொண்டிருக்கும்போது யோகிபாபு ஜூஸ் குடித்து, சிவா வீட்டு பார்ட்டியில் பங்கெடுத்துக்கொண்டிருப்பது பார்வையாளர்களை கடுப்பேற்றும் காட்சி.
சாய் தன்யா, பிரக்யா நாக்ரா ஆகிய இரண்டு கதாநாயகிகளும் பார்ப்பதற்கு இரட்டைப் பிறவிகள் போல் இருந்தாலும் தோற்றம், நடிப்பு இரண்டிலும் குறைசொல்ல முடியாத அளவுக்கு ஸ்கோர் செய்திருக்கிறார்கள். சத்யராஜ், நிழல்கள் ரவி இரண்டுபேருக்கும் பெரிதாக வேலை இல்லை. ஆனால், இளவரசு தனது ‘டைமிங்’, தனது கதாபாத்திரத் தன்மைக்குச் செய்துகொள்ளும் நாகாசுகள் ரசிக்க வைக்கின்றன. ஆனந்த ராஜைவிட ஸ்ரீமன் அப்ளாஸ்களை அள்ளிக்கொள்கிறார். என்றாலும் அவருக்கான நகைச்சுவை என்கிற பெயரில் வைக்கப்பட்டுள்ள ‘லேகிய விவகாரம்’ தேவையில்லாத ஆபாச ஆணி. சிங்கம் புலி, ரெடின் கிங்ஸ்லி இருவரும் கொடுத்த வேலையைக் கச்சிதமாக நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார்கள்.
குழந்தைகள் மாறிய கதையில் பெற்றோர்கள் பதறியடித்து உடனடியாக ஆக்ஷனில் இறங்கியிருக்க வேண்டிய திரைக்கதையில், 48 மணிநேரத்தில் நடக்கிற கதை என்கிற காலவோட்டத்தை (டைம் லேப்ஸ்) உணர வைக்கத் தவறிய படத்தொகுப்புடன் வந்திருக்கும் இப்படம், நகைச்சுவை நடிகர்களின் கூட்டத்தால் தப்பிக்கிறது.