

‘இன்னிசை பாடி வரும் இளங் காற்றுக்கு உருவமில்லை’ என்கிற பாடல், ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் நான்கு முறை வரும். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு உணர்வுகள் வழிந்தோடும் சூழ்நிலைகள் இடம்பெற்றுச் சாகாவரம் பெற்றது. இளைய ராஜா இருந்தால்தான் ‘மியூசிக்கல் ஃபிலிம்’ என்கிற நிலையை எஸ்.ஏ.ராஜ்குமாரை வைத்துச் சாதித்துக் காட்டினார் இயக்குநர் எஸ்.எழில். சிறந்த கதைப் படங்களின் இயக்குநர் என்று பெயரெடுத்த அவர், இன்று காதல் - நகைச்சுவை கதைக் களங்களில் தொடர் வெற்றிகளைக் கொடுத்து
வருகிறார். அவர், ‘துள்ளாத மனமும் துள்ளும்’ பட நாள்களின் மனப்பதிவுகளை இந்த வாரமும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்:
“அறிமுக இயக்குநர்களின் கதைகளைக் கேட்டு, அதிலிருந்து தனக்கான கதைகளைத் தேர்வு செய்து நடித்த அனுபவம் விஜய்க்கு நிறையவே உண்டு. ஒரு ஸ்டார் ஆன பிறகும் அறிமுக இயக்குநர்களின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். அவர்தான் ஓர் அறிமுக இயக்குநரை ஓகே செய்கிறார். அதனால், அந்த இயக்குநரின் வெற்றியில் தனக்குச் சமமான பங்கிருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படும் ‘ரெஸ்பான்ஸிபிலிட்டி’யை அவர் எடுத்துக்கொள்கிறார். ‘இவர் படத்தைச் சரியாகச் செய்துவிட வேண்டுமே’ என்கிற பயம், தான் தேர்வு செய்த அறிமுக இயக்குநரைவிட விஜய்க்குதான் அதிகமாக இருக்கும். அதனால், அறிமுக இயக்குநர் களை மிகவும் பக்குவமாக ‘ஹேண்டில்’ பண்ணுவார். அவர்களை ‘எக்ஸ்ட்ரா கேர்’ எடுத்துப் பார்த்துக்கொள்வார்.