Last Updated : 18 Apr, 2014 12:21 PM

 

Published : 18 Apr 2014 12:21 PM
Last Updated : 18 Apr 2014 12:21 PM

திரையும் இசையும்: மொழி பிரிக்காத உணர்வு 8 - தன்னந்தனியாய் போகாதே...

மக்களின் முதன்மையான பொழுதுபோக்கு ஊடகமாகத் திரைப்படம் நீடிப்பதன் ரகசியம் அலாதியானது. காதல், கோபம், சோகம், நகைச்சுவை என நவரச உணர்வுகளை வெளிப்படுத்தும் அதன் காட்சிகள் பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் அளிக்கின்றன. நாயகன், நாயகி மற்றவர் மீது செய்யும் சீண்டல் காட்சிகள் ஒரு முக்கிய அம்சமாகும். இந்தச் சீண்டல் ஈவ் டீஸிங் என்று சொல்லப்படும் அளவுக்குப் போன பாடல்களும் உள்ளன. ஆனால் இங்கே நாம் காணவிருக்கும் பாடல்கள் அப்படிப்பட்டவை அல்ல.

இந்த விதமான சீண்டல் காட்சிகளில் வெளிப்படும் நடிகர்களின் உடல் மொழிகளுக்கு உயிர் கொடுத்து அதன் ஜீவனாக விளங்குவது அக்கட்சிகளின் பாடல் வரிகள்தான். ‘சேட்னா’ என்று இந்தியில் சொல்லப்படும் சீண்டல் உணர்வுடன் கூடிய திரைப்படப் பாடல்கள் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. 1965 -ல் வெளிவந்த என் கடமை என்ற படப் பாடலும் 1967-ல் வெளிவந்த ஆன் ஈவ்னிங் இன் பாரீஸ் (An Evning in Paris) என்ற இந்திப் படப் பாடலும் இந்தச் சீண்டல் உணர்வை ஒரே வித மொழியிலும் நடையிலும் வெளிப்படுத்தியிருப்பதைப் பாருங்கள்.

முதலில் இந்திப் பாடலின் சில வரிகள்:

அகேலே அகே லே கஹான் ஜா ரஹே ஹோ

ஹமே சாத் லேலோ ஜஹான் ஜா ரஹே ஹோ

கோயி மிட் ரஹா ஹை துமே குச் பத்தா ஹை

துமார ஹுவா ஹை துமே குச் பத்தா ஹை

யே கியா மாஜரா ஹை துமே குச் பத்தா ஹை.

(அகேலே அகேலே)

தடப்த்தானா சோடோ மேரி ஜான் ஹோ தும்

யே முக்டா நா மோடோ மேரி ஜான் ஹோ தும்

மேரி தில் நா தோடோ மேரி ஜான் ஹோ தும்

(அகேலே அகேலே)

பாடலின் பொருள்:

தனியாக, தனியாக, எங்கே போய்க்கொண்டிருக்கிறாய்

என்னை உடன் கூட்டிக்கொள் எங்கு போகிறாயோ (அங்கு)

யாரோ கரைந்துகொண்டிருப்பது உனக்கு ஏதாவது தெரிகிறதா

உன் வசம் ஆகிவிட்டது தெரிகிறதா

இது என்ன நிகழ்வு உனக்கு ஏதாவது தெரிகிறதா

(தனியாக)

பதற்றமடைவதை விட்டுவிடு நீ என் உயிரல்லவா

இந்த (உன்) முகத்தைத் திருப்பாதே நீ என் உயிரல்லவா

என் உள்ளத்தை உடைக்காதே நீ என் உயிரல்லவா

(தனியாக)

யாராவது உன்னைத் தடுத்து நிறுத்தினால்

பிறகு என்ன செய்வாய்

அடி (காலை) எடுத்து வைப்பதைப் பிடித்து நிறுத்தினால் என் செய்வாய்

கேலி செய்தால் பிறகு என்ன செய்வாய்

(தனியாக)

உடல் சேட்டைகளுக்குப் புகழ் பெற்ற ஷம்மி கபூர் கதாநாயகனாகவும் கண்ணழகி ஷர்மிளா தாகூரும் நடித்த இந்தப்பாடல் காட்சியில் ஆல்ப்ஸ் மலை வெளிப்புறப் படப்பிடிப்புச் காட்சிகளும் சிறப்பம்சங்கள். அக்காலத்தில், முதல் முதலாக, ஒரு வண்ணப் படத்தில், பிகினி நீச்சல் உடையில் நடித்துப் புரட்சி செய்த ஷர்மிளா தாகூர் இச்செயலுக்காகப் பெரிதும் அப்போது விமர்சிக்கப்பட்டார்.

ஹஸ்ரத் ஜெய்பூரியின் பாடலுக்கு சங்கர் ஜெய்கிஷன் அமைத்த இப்பாடலுக்கு இணையான தமிழ்ப் பாடலில் ஆங்கிலச் சொல் கலப்பு உண்டு.

தமிழ்ப் பாடல் :

ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க

இன்று ஏனிந்த கோபம் கொஞ்சம் நில்லுங்க

தன்னந்தனியாகப் போகாதீங்க

உங்க தள தள உடம்புக்கு ஆகாதுங்க

வழித்துணையாக வாரேனுங்க

இந்த வாலிப மனசை மிஸ் பண்ணாதீங்க

(ஹலோ மிஸ்)

கண்ணழகைக் கண்டால் கூட்டம் சேருங்க

காளையர்கள் நெஞ்சில் ஆசை தோணுங்க

மாப்பிளை போலே நான் வரும்போது

பார்பவர் உள்ளம் மாறாதுங்க

(ஹலோ மிஸ்)

ஆசையுடன் பார்த்தால் மோசம் இல்லீங்க

ஆதரவைக் கேட்டால் பாபமில்லீங்க

நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு

நடப்பதுதானே ஓடாதீங்க

(ஹலோ மிஸ்)

கதாநாயகனாக வில்லன்களுடன் கட்டிப் புரண்டு சண்டையிடும் கலையில் மட்டுமின்றி நாயகியைக் கேலி செய்து குறும்பு காட்டும் கலையிலும் வாத்தியாரான எம்.ஜி.ஆர்., சரோஜாதேவியைப் பார்த்துப் பாடுவதுபோன்ற இந்தப் பாடல் என் கடமை படத்தில் இடம்பெற்றது. இசை அமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி.

பாடலை எழுதியவர்கள் கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் என்று டைட்டில் கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இருவரில் இந்தப் பாடலை எழுதியவர் யார் என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x