

பாலா இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது ‘வணங்கான்’ திரைப்படம். அதில், பாதிக்கப்பட்ட வர்களின் பக்கம் நிற்கும் நீதிபதியாக வருகிறார் மிஷ்கின். அவரிடம் விசாரணைக்கு வரும் போக்ஸோ வழக்கில் களமாடும் வழக்கறிஞராக வந்து கவனிக்க வைத்தார் ‘மைபா’ என நட்பு வட்டத்தால் அழைக்கப்படும் மை.பா.நாராயணன். கலைஞர் மு.கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி அனைத்து முகாம்களிலும் தலைவர்களை எளிதாக அணுகிப் பேட்டியெடுத்த பத்திரிகையாளர்.
அனைவரது நட்புக்கும் பாத்திரமான இவர், வாலியின் செல்லப்பிள்ளையாக வலம்வந்தவர். வலம்புரி ஜானின் அன்புக்கும் அடைக்கலமாகிக் கிடந்தார். இப்போது, அரசியல், இலக்கிய விவாதம், ஆன்மிக உரை, பட்டிமன்ற பங்கேற்பு என 30 ஆண்டு இதழியல் வாழ்க்கைக்குப் பின் பல தளங்களில் களமாடி வருகிறார். அவரது ஆடுகளத்தில் சினிமாவும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. அவருடன் ஒரு சிறு உரையாடல்:
ஒரு நடிகராக உங்கள் சினிமா பயணம் எப்போது தொடங்கியது? - எனது திரை உலகப் பிரவேசத்துக்குப் பிள்ளையார் சுழி போட்ட இயக்குநர், தம்பி ராஜுமுருகன்தான். அவரது ‘ஜோக்கர்'தான் எனக்கு முதல் படம். பிறகு ‘தீரன் அதிகாரம் ஒன்று', அடுத்து அண்ணன் பாலாவின் ‘நாச்சியார்' படத்தில் நடித்தேன். ‘தல’யின் ‘நேர்கொண்ட பார்வை’யில் நடித்தேன்.
பிறகு ‘இறுகப்பற்று’, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்த ‘கலகத் தலைவன்’, யோகிபாபுவுடன் ‘பொம்மை நாயகி’உள்பட 13 படங்களில் நடித்த பிறகு இப்போது மீண்டும் அண்ணன் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்' வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது.
தொடர்ந்து ‘அறம்’ பட இயக்குநர் கோபி நயினாரின் புதிய படத்திலும் வ.கௌதமன் நடித்து இயக்கிவரும் மறைந்த அரசியலர் காடுவெட்டி குருவின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘படையாண்ட மாவீரா’ படத்திலும் நடித்து வருகிறேன். மேலும் பல புதிய பட வாய்ப்புகள் வந்துள்ளன.
காவியக் கவிஞர் வாலியிடம் பாராட்டைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல; உங்களுக்கு ‘ஆழ்வார்க்கடியான்’ என்று பட்டம் கொடுத்தார் அல்லவா? - அது இறைவன் அருளிய பெரும் பேறு. ‘அரசியல் வாதிகளுடனும் நட்பாக இருக்கிறாய்.. ஆழ்வார்களுட னும் அன்பில் கரைந்து போகிறாய்.. நுனி நாக்கில் அரசியலும் உள் நாக்கில் ஆன்மிகமும் அமர்ந் திருக்கும் அரிய மனிதர்; என் இனிய இளவல்’ என்று பொது மேடையில் சொற்களால் கட்டி யணைத்து எனக்குப் பட்டம் கொடுத்தார்.
வாலி சாருடன் மட்டுமல்ல; அனைவரையும் விமர்சிக்கத் தயங்காத பத்திரிகையாளர் சோ, சோவே வியந்த கலைஞர் மு.கருணாநிதி, இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், சீமான் என அனைவரது அன்பையும் பெற்றி ருக்கிறேன் என்பது இறையருள் அன்றி வேறில்லை.
கலைஞர் மு.கருணாநிதியைப் பலமுறை சந்தித்த அனுபவங்களி லிருந்து ஒன்று... கலைஞரைச் சந்தித்த போதெல்லாம் அவருடன் ஆன்மிகம் பேசிய ஒரே ஆள் நான் மட்டும்தான். ஒரு முறை, ‘கடவுள் இல்லை என்று சொல்றீங்க; ஆனால் உங்கள் வீட்டு வாசலிலேயே கடவுள் சன்னதி இருக்கிறது’ என்றேன். அதே போல், ‘நீங்கள் பிறந்த ஊரான திருக்குவளை, மனிதர் தம் குற்றங்களை நீக்கி கோயில் கொண்ட இறைவன் அருள் புரிந்தமையால் ‘கோளிலி’ என்று பெயர் பெற்றது’ என்றேன். உடனே அவர், “கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்" என்பது ஞானசம்பந்தர் வாக்கு” என்று எடுத்துக்காட்டினார். அதுதான் கலைஞர். மு.கருணாநிதி.
வலம்புரி ஜானிடம் நீங்கள் வியந்தது? - தமிழ்த் தாய் அவருடைய சொற்களில் குடி புகுந்தாள் என்பேன். அவரைப் போலச் சொற்களை வைத்து மனிதம் உயர்த்திய மகத்தான எழுத்து, பேச்சுக் கலைஞன் இனி வரப்போவதில்லை. அவரது வாழ்க்கையின் வெளித் தெரியாத பல பக்கங்களை என்னுடன் மனம் விட்டுப் பகிர்ந்திருக்கிறார்.
அவர் ஒருமுறை, ‘வாழ்க்கை என்பது உயிருடன் இருக்கிற வரை திருத்தப்பட்டு, மரணத்துக்குப்பின் படிக்கப்படுகிற மாபெரும் கவிதை’ என்றார். ‘வியர்வைத் துளியிலும் என்னால் நீச்சலடிக்க முடியும் என்று இயற்கை எனக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது’ என உழைப்பின் மகத்துவத்தைச் சொல் வீச்சாக்கியவர். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ராமானுஜர் மீது உங்களுக்கு அப்படியென்ன பித்து? - பெரியார் தாசன், அம்பேத்கர் தாசன் போல என்னை ராமானுஜ தாசன் என்பேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு; ‘உயிர்களில் பேதமில்லை; எல்லாரும் ஒரே இனம்’ என்று சொன்னவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதைச் சொல்லவும் அதன்படி வாழ்ந்து காட்டவும் ஒருவருக்கு எவ்வளவு துணிவு வேண்டும். அதனால்தான் கலைஞர்.மு.கருணாநிதி தனது கடைசி நாள்களில் ‘மதத்தில் புரட்சி செய்த மகான்’ என்று ராமானுஜரைப் புகழ்ந்தார்.