

தமிழன் படத்தின் கிளைமாக்ஸில் வழக்கறிஞர் சூர்யாவால் பாதிக்கப் பட்ட ஊழல்வாதிகள் ஒன்றாகக் கரம் கோத்துவிடுவார்கள். தங்களுக்கு ஏவல் வேலை செய்யும் காவல் அதிகாரியை அனுப்பி, அவரை அடித்து உதைத்துத் துன்புறுத்தி அவரை நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானவராகக் குற்றம் சுமத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து வார்கள். அப்போது நீதிபதி: ‘மிஸ்டர் சூர்யா... தீவிரவாதிகளை உருவாக்கினீங்க என்று தமிழ்நாடு காவல் துறை உங்கள் மீது குற்றம் சுமத்தியிருக்காங்க? இதுக்கு உங்க பதில் என்ன?’ என்று கேட்பார்.
இந்தக் காட்சியில் சூர்யாவாக, குற்றவாளிக் கூண்டில் நின்று விஜய் 10 பக்க வசனம் பேச வேண்டும். நான் வசனப் பேப்பரைக் கொடுத்து, ‘இதை கட் பண்ணி கட் பண்ணி எடுத்துக்குவோம்’ என்றேன். ‘அதுக்கு அவசியமிருக்காது. நீங்க ஒரே டேக்ல எடுத்துக்கோங்க’ என்றார். என்னிடமிருந்து வசனப் பேப்பரை வாங்கிய 15வது நிமிடம் ‘நான் ரெடி’ என்றார். ‘என்னடா இது! இந்தப் பதினைந்து நிமிஷத்தில் இந்த வசனத்தை ஒரு தடவைதான் படிச்சிருக்க முடியும். அதுக்குள்ள மைண்ட்ல நிறுத்தி விட்டாரா!?’ என்று நினைத்தேன்.