

பேசும்படக் காலத்தின் முதல் 50 ஆண்டுகளில் கொங்கு மண்டலமும் தன்னுடைய பாரிய பங்கைத் தமிழ் சினிமாவுக்கு அளித்திருக்கிறது. சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் போல் கோவையில் சென்ட்ரல் ஸ்டுடியோவும் பக் ஷிராஜா ஸ்டுடியோவும் புகழ்பெற்று விளங்கின. அங்கே தயாரான படங்களின் வழியாக, தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அறிமுகமான பல நடிகர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள் பின்னாளில் பெரும் ஜாம்பவான் களாக வலம் வந்தார்கள்.
அவர்களில் பலர் அரசியலிலும் நட்சத்திர மானார்கள். கோடம்பாக்கத்து ஸ்டுடியோக்கள் குறித்துப் பேசும் அளவுக்குக் கொங்கு மண்டல ஸ்டுடியோக்கள் பற்றிய பதிவுகள் குறைவாக இருக்கின்றன. அந்தக் குறையை ‘பக் ஷிராஜா பறவை’ என்கிற ஆவணத் திரைப்படம் வழியாகப் போக்க முயன்றிருக்கிறார் மூத்த திரையாளுமையும் கவிஞரும் எழுத்தாளருமான சூலூர் கலைப்பித்தன். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ்க் கல்லூரியில் படித்துப் புலவர் பட்டம் பெற்ற இவர், 35க்கும் அதிகமான நூல்களின் ஆசிரியராகத் தடம் பதித்தவர்.