

விஜய் நடிப்பில் 2002இல் வெளியான ‘தமிழன்’ படத்தை இயக்கியவர் மஜித். பள்ளி, கல்லூரி நாள்களிலிருந்தே விஜயுடன் பழகி வந்திருக்கும் அவர், ‘தமிழன்’ படம் சார்ந்த தன் மனப் பதிவுகளை இரண்டாவது வாரமாக இங்கே பகிர்ந்திருக்கிறார்:
“திரை வாழ்க்கையின் தொடக்கத்தி லேயே விஜயைச் சிம்மாசனத்தில் வைத்து அழகு பார்த்த படம் ‘தமிழன்’. ‘காதலியின் பின்னால் சுற்றி வரும் கதாநாயகன்’ என்கிற பிம்பத்தை ‘தமிழன்’ படம் துடைத்துப்போட்டது. காரணம், கடைக்கோடி குடிமக னுக்கும் சட்ட அறிவு அவசியம் என வலியுறுத்தும் சூர்யா என்கிற கலகக்கார இளம் வழக்கறிஞர் கதாபாத்திரத்தை விஜய்க்காக அப்போதே எழுதினேன். ஏனென்றால் சமூகத்தின் மீது, மக்களின் மீது அவருக்கு அக்கறை
உண்டு என்பதை அறிந்தவன் நான். அவர் நேரடி அரசியலுக்கு வந்துவிட்ட இந்த நேரத்திலும் சொல்கிறேன். அரசியலில் விஜய் அடைய வேண்டிய மிகப்பெரிய உயரத்தைத் தமிழ்நாடு பார்க்கப் போகிறது. ஏனென்றால், அவரிடம் தொழில் பக்தி, கடும் உழைப்பு, அனைவருக்கும் உண்மையாக நடந்துகொள்வது, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது என நிறைய நல்ல குணங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, ‘தமிழன்’ படத்தின் ஒருவரிக் கதையைச் சொன்னதும் ‘லைன் அட்டகாசமாக இருக்கு. பொறுப் பில்லாத ஓர் இளைஞன், அவன் உயிரோடு இருக்கும்போதே, அவனுக்கு அரசாங்கமே அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவம் செய்கிறது என்றால், அவன் செய்யும் செயல் எவ்வளவு ‘சவுண்ட்’ ஆக இருக்கும் என்று புரியுது. அதை இப்பவே தெரிஞ்சுக்க ஆசைதான். ஆனால், இப்போ தெரிஞ்சுகிட்டா, அப்புறம் அதுதான் மண்டையில ஓடிக்கிட்டு இருக்கும். இந்த வாரக் கடைசியில நான் லண்டன் போறேன்.
அதுக்கு முன்னாடி எனக்கு முழு ஸ்கிரிப் டையும் சொல்லுங்க. டிராவல்ல அந்தக் கேரக்டர் பத்தி யோசிக்க எனக்கு டைம் இருக்கும்’ என்றார்.