

பொழுதுபோக்கு சினிமா மொழியில், காதலை மையமாகக் கொண்ட படங்களில் அதிகமும் நடித்துவந்த விஜயை, சட்டென்று சமூகப் பொறுப்புமிக்க இளைஞனாக முன்னிறுத்திய படம், அப்துல் மஜித் இயக்கத்தில் 2002இல் வெளிவந்த ‘தமிழன்’. விஜயை இயக்கியவர்களில் மஜித்துக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. விஜயை, பள்ளி, கல்லூரிக் காலத்திலிருந்து அருகிலிருந்து கவனித்து வந்தவர் மஜித். விஜய் நாயகனாக அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரனிடம் முதன்மை உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். சினிமா மீது இளவயதிலேயே விஜய்க்கு இருந்த தாகத்தையும் ‘தமிழன்’ படப்பிடிப்பு நாள்களையும் ப்ரியமுடன் இங்கே பகிர்ந்திருக்கிறார்:
“எனக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி. பள்ளியில் படிக்கும்போதே நாடகம் போடுவதில் ஆர்வம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே சினிமாவில் சேரும் நோக்கத்துடன் சென்னைக்கு வந்து வாய்ப்புத்தேடினேன். அப்போது இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்துவந்த ஷங்கர் சாரின் நட்பைப் பெற்றேன். அவர்தான் என்னை எஸ்.ஏ.சியிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார். அப்போது நானும் ஓர் உதவி இயக்குநராகச் சேர்ந்து பிறகு அவருடைய இணை இயக்குநராக உயரும் வரையில் 14 படங்களில் பணிபுரிந்தேன்.