

காலத்தைத் துளைத்துச் செல்லும் எத்தகைய நிகழ்வுகளும் வெள்ளம் பெருக்கெடுத்த ஆற்றைப்போல் கண்முன் நிற்காமல் கடந்து சென்றுவிடுகின்றன. அவற்றின் சாதக பாதகங்களை மனிதநேய விழுமியத்தோடு பதிவில் உறைய வைத்துக் கடமை யாற்றுவது இலக்கியம், ஓவியம், சிற்பம் உள்ளிட்ட கலைவடிவங்களே. சென்ற நூற்றாண்டிலிருந்து இவை அனைத்தையும் உள்வாங்கிய தன்னெழுச்சியுடன் வீறுகொண்டு நடை போடுவது சினிமா என்னும் மாயப் பொக்கிஷம்.
கலைக்குப் புனைவெதார்த்தம் என்கிற வரையறை இருப்பினும், மனித இனத்தின் மத்தியில் அன்பும் அமைதியும் செழித்தோங்க வேண்டிய இயல்பெழில் மிகுந்த கனவைக் கண்ணயராமல் கண்ட படியே தொடர்கிறது. அத்தொடர்ச்சியின் நிகழ்சான்றாக வெளிவந்திருக்கிறது ‘நோரா’ (Norah) என்கிற சவுதி அரேபியத் திரைப்படம்.