

கதாபாத்திரங்களின் குற்றப் பின்புலத்தை ஆராயும் புலன் விசாரணைப் படங்களில், அவற்றின் வாழிடமும் அங்குள்ள கலாச்சார வாழ்வும் முக்கியத்துவம் பெறும்போது, அது நம்பகம் எனும் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. மணி மூர்த்தி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘லாரா’ இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே சுவாரஸ்யம் கூட்டும் திரை அனுபவத்தைத் தருகிறது.
ஒரு பெண்ணின் சடலம் காரைக் கால் கடற்கரையில் ஒதுங்குகிறது. கொலையா, தற்கொலையா என உடற்கூறாய்வில் கூட கண்டறிய முடியாதபடி சிதைந்து கரை ஒதுங்கிய அதனைக் கொண்டு, தன் நிலையத்துக்கு வரும் ஒரு ‘மிஸ்சிங் கேஸ்’ வழக்கைத் துருவத் தொடங்குகிறார் நிலைய ஆய்வாளர்.
அவருக்கு உதவியாகத் துணை ஆய்வாளர், காவலர்கள் எனக் கரம் கொடுத்தாலும் தனது விசாரணை அணுகுமுறையால் அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவரச் சளைக் காமல் போராடுகிறார். இறுதியில், சடலமாகக் கிடைத்த பெண் யார், அவரின் மரணத்துக்கான காரணம் என்ன என்பதை அவர் எப்படிக் கண்டறிந்தார் என்பது கதை.
சிசிடிவி, கைபேசிப் பயன்பாடு ஆகியவற்றை முதன்மைத் தடயங் களாகக் கொள்கிறது இன்றைய குற்றப் புலன் விசாரணை. இவற்றின் வழி சிக்கும் மனிதர்கள், எதிர்பாராத திசைகளை நோக்கி இழுத்துச் செல்லும் திருப்பங்கள் ஒவ்வொன்றும் அழுத்தமாகவும் நம்பும் விதமாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாக, ஒரு வழக்கின் புலன் விசாரணை முடிவடையாத வேறுசில வழக்குகளின் தொடர்ச்சிகளுக்குள் கொண்டுபோய் விடும் திரைக்கதையின் தொய்வற்ற தன்மை, உண்மை நிகழ்வுகளின் தொகுப்பைப் பார்ப்பதுபோல் எண்ண வைக்கிறது.
காரைக்கால் பகுதியின் கோயில் திருவிழா, கடல் வாழ்க்கை, முந்திரி விவசாயம், ஹவாலா குற்றங்கள், பிழைப்புக்கான வெளிநாட்டுப் பயணம், மதுவின் மீதான நாட்டம் எனக் கதாபாத்திரங்களுடன் பின்னிப் பிணைந்திருக்கும் ஊர் வாழ்க்கையைத் தொட்டுக்கொண்டது. படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது.
ஆய்வாளராக வரும் கார்த்திகேயனின் அலட்டல் இல்லாத நடிப்பும் அதில் அவரின் இயல்பான முக பாவங்களும் அசத்தல். அவருடைய துணை ஆய்வாளராக வருபவர், லாராவாக வரும் அனுஷ்ரேயா ராஜன், ஸ்டெல்லாவாக வரும் வெண்மதி, ஜெயாவாக வரும் வர்ஷினி ஆகிய மூன்று பெண்கள் அறிமுக நடிகர்கள் என்றே சொல்ல முடியாதபடி நடித்திருக்கிறார்கள்.
இசை, ஒளிப்பதிவு போன்ற தொழில் நுட்ப அம்சங்களிலும் சிறக்கும் இப்படம், யூகிக்க முடியாத, ஆனால், நம்பகமான திருப்பங்களால் நிறைந்த திரைக்கதையாலும் நடிகர்களின் சிறந்த பங்களிப்பாலும் 2 மணிநேரமும் விறுவிறுப்பு.