‘விஜயை எதிர்பார்க்காத அஜித்!’ - பேரரசு | ப்ரியமுடன் விஜய் - 7

‘விஜயை எதிர்பார்க்காத அஜித்!’ - பேரரசு | ப்ரியமுடன் விஜய் - 7
Updated on
3 min read

“பத்து ரூபாய் லஞ்சம் கொடுத்து ஏவி.எம். ஸ்டுடியோவுக்குள் நுழைந்த எனக்கு, அந்நிறுவனம் 10 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து அஜித்தை இயக்க அழைத்தது என் வாழ்க்கையில் நான் வெற்றியை உணர்ந்த தருணங்களில் ஒன்று.

அப்போது என்னிடம் 3 கதைகள் இருந்தன. அவற்றில் ‘திருப்பதி’ கதையை அஜித் சாரிடம் சொன்னேன். அது அவருக்குப் பிடித்து விட்டது. ஏவி.எம். நிறுவனமும் அந்தக் கதையை ஓகே செய்தார்கள். அதில் எனக்கு ஆச்சரியமில்லை! ஏனென்றால் அவர்கள் தேர்வு செய்யும் எல்லாக் கதைகளிலும் ‘லேடீஸ் சென்டிமெண்ட்’ தூக்கலாக இருக்கும். அப்படித்தான் ‘திருப்பதி’ படத் திரைக்கதையில் இருந்த ‘பெண்களுக்கு இலவசப் பிரசவத் திட்டம்’ அவர்களுக்குப் பிடித்துவிட்டது. அந்தக் கருத்துக் காகவே அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் கையால் மாநில அரசின் விருதை ‘திருப்பதி’ படத்துக்காகப் பெற்றேன்.

ஏவி.எம். நிறுவனம் அழைத்து ‘அஜித்தான் உங்களைத் தேர்வு செய்தார்’ என்று சொன்ன உடனேயே, எனக்கு விஜயின் முகம் மனதில் தோன்றியது. நான் அஜித்தை இயக்கினால் அவர் ஏதும் நினைத்துக்கொள்வாரோ என்று நானாக ஒரு கற்பனையைச் செய்துகொண்டேன். ஒருகால் நாம் அஜித்தை இயக்குவது அவருக்குப் பிடிக்காமல் போனால்? அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்க வாய்ப்பளித்த அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன் இதுதானா என்றெல்லாம் மனம் யோசிக்கத் தொடங்கிவிட்டது.

எனவே அஜித் படம் இயக்குவதை இன்றே.. இப்போதே அவருக்குச் சொல்லி விட வேண்டும் என்று ஏவி.எம்மிலிருந்து நேரே விஜய் பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய்விட்டேன். விஜய் என்னைப் பார்த்ததும் ‘என்னங்கண்ணா.. எல்லாம் நல்லாத்தானே போய்க் கிட்டிருக்கு?’ என்று நலம் விசாரித்தார். ‘அது சம்பந்தமாத்தான் உங்களைப் பார்த்துப் பேசிட்டுப் போக வந்தேன்; ஏவி.எம். கூப்பிட்டுக் கமிட் செய்திருக்கிறார்கள்’ என்றேன். அடுத்த நொடி ‘சூப்பர்..!’ என்று முகம் மலர கைகொடுத்தார் விஜய். உடனே ‘அஜித்தான் ஹீரோ! அதான் உங்க கிட்ட கேட்டுக்கலாம்னு வந்தேன்’ என்றேன். அப்போது விஜய் ‘என்னங்ண்ணா நீங்க.. இப்படிக் கேட்கிறீங்க.. வாழ்த்துகள்! உடனே படத்தை ஆரம்பிங்க..’ என்றார். அந்தக் கணத்தில்தான் தெரிந்தது; விஜயும் அஜித்தும் நமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட அற்புதமான கலைஞர்கள் என்பது. என்னை ‘விஜய் பட இயக்குநர்’ என்று அஜித்தும் நினைக்கவில்லை, நான் அஜித்தை இயக்குகிறேன் என்று விஜயும் என்னை ஒதுக்கவில்லை. இவையெல்லாமே ஊடகங்களும் ரசிகர்களும் உருவாக்கிக்கொள்ளும் மாயை என்பதும் இருவருமே சொக்கத் தங்கம் என்பதும் புரிந்துபோனது.

‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ ஆகிய இரண்டு படங்களுமே அழைப்பிதழ் அச்சடித்து, பிரபலங்களை அழைத்து பிரம்மாண்டமாகப் பூஜை, தொடக்க விழா என்று நடத்தாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு தேங்காய் உடைத்து தீபாராதனையுடன் தொடங்கி முடித்த படங்கள். ஆனால், ஏவி.எம். தங்கள் படத்தின் தொடக்க விழாவைப் பிரம்மாண்டமாக நடத்திப் பழக்கப்பட்டவர்கள் ரிலீஸ் தேதியையும் தொடக்கத்தி லேயே முடிவு செய்துவிடுவார்கள். அவர்கள் பாணியில் ‘திருப்பதி’க்குத் தொடக்க விழா பூஜை என்றதும் அதற்குப் பிரபலங்களை அழைக்க வேண்டும் என்றார்கள். அப்போது நான் உறுதியாக இருந்தேன் ‘நமக்கு லைஃப் கொடுத்தவர் விஜய். யாரை அழைக்கிறோமோ இல்லையோ, விஜய்தான் முதன்மைச் சிறப்பு விருந்தினராக இருக்க வேண்டும்’ என்று முடிவு செய்துவிட்டேன்.

பேரரசு
பேரரசு

உடனே விஜயைப் பார்த்து, ‘சார் பூஜைக்கு நீங்க வரணும்’ என்றேன். ‘என்னைக்குண்ணா?’ என்றார். தேதியைச் சொன்னேன். ‘ஓகேங்ண்ணா வந்துர்றேன்’ என்றார். எனக்குப் பயங்கர ஹேப்பி! அலுவலகத்துக்கு வந்ததும் என் உதவியாளர்களைக் கூப்பிட்டுச் சொன் னேன். யாரும் நம்பத் தயாராக இல்லை. ‘ஒரு ஃபார்மலுக்குச் சொல்லியிருப்பார்; அஜித் படத்துக்கு அவரு எப்படி வருவார்?’ என்று குண்டைத் தூக்கிப் போட்டார்கள். அதே போல் ஏவி.எம். புரொடெக்‌ஷன்ஸ் மேனேஜர்களிடம் விஷயத்தைச் சொன்னேன். ‘அட போங்க சார்!’ என்றார்கள். அஜித்திடம் போய், ‘விஜய் பூஜைக்கு வருகிறார்’ என்றேன். ‘அப்படியா ஜி!’ என்று சொல்லிவிட்டு ஒரு சின்ன புன்னகையைச் சிந்தினார். அந்தச் சிரிப்பிலேயே தெரிஞ்சுப் போச்சு, அவரும் நம்ப வில்லை என்று. இப்போது என் மனதுக்குள் மீண்டும் ஒரு சின்ன ‘டவுட்’ எட்டிப் பார்த்தது. அதைத் தாண்டி, இவர்கள் அனைவருக்குமே பூஜை அன்று அந்த மாயை விலகும் என்று உள்ளூர நம்பிக்கைக் கொண்டிருந்தேன். அதை உண்மையாக்கினார் விஜய்!
பூஜைக்கு முதல் நாள் இரவு 8.30 மணிக்கு விஜயிட மிருந்து போன் கால். ‘அண்ணா நாளைக்குக் காலையில எத்தனை மணிக்கு பூஜை?’ என்றார். ‘சார் காலையில 9 மணிக்கு.. நீங்கள் கொஞ்சம் முன்னப் பின்ன வந்தாலும் ஓகேதான்’ என்றேன். ‘நான் 9.30க்கு அங்கே இருக்கேன்’ என்றார். எனக்கு அப்பாடா என்று இருந்தது. ஏனென்றால் விஜய் சாரைப் பொறுத்தவரை வாக்குக் கொடுத்துவிட்டால் அதைக் காப்பாற்றி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். விஜய் போன் செய்ததை வெளியே சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால், என்னைக் கிண்டல் அடித்திருப்பார்கள்.

வாக்கைக் காப்பாற்றுவதில் அவர் எவ்வளவு உறுதியான ஆள் என்பதற்கு எடுத்துக்காட்டு கதையில் கொண்டிருக்கும் நம்பிக்கை. ஒரு கதையைத் தேர்ந்தெடுத்த பின் யார் தடுத்தாலும் சரி; அது அவருடைய அப்பாவாக இருந்தாலும் சரி, அதில் துணிந்து நடித்துவிடுவார். அந்த அளவுக்குக் கதையை நம்புவார். கதை சொன்ன இயக்குநரை நம்புவார். பூஜை அன்று விஜய் சொன்ன நேரத்துக்கு அவரின் கார் உள்ளே நுழைய ஒரே சலசலப்பு. அப்போது யூடியூப் எல்லாம் கிடையாது. ஊடகம் என்றால் அச்சுப் பத்திரிகையும் தொலைக்காட்சிகளும் மட்டும்தான். பிரஸ் கேமராமேன்கள் எல்லாம் இந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் சடசடவென்று ஓடிப்போய்.. விஜய் இறங்கி நடந்து வருவதை ஃபோகஸ் செய்து படமெடுத்துக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்தார்கள்.

விஜய் முகம் மலர அஜித்துக்கு கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்து விட்டு, இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு தோழனாக மாறி அஜித்தின் தோளில் கைபோட்டுக்கொண்டார் விஜய். அந்தக் காட்சியில் இருவரின் மனதிலும் எந்தச் சுமையும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. விஜயும் அஜித்தும் இவ்வளவு பக்குவப்பட்ட கலைஞர்களா என்பதை நம்ப முடியாமல் அனைவரும் அவர்கள் இருவரையும் வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஏவி.எம். நிறுவனத்தைச் சேர்ந்தவர்களோ இந்தக் காட்சி உண்மைதானா என்று திகைத்துப் போய் நின்றார்கள். அஜித் படத்தின் பூஜைக்கு விஜய் வந்தது ஊடகங்களில் வைரலானது!

விஜய் மிகவும் அமைதியானவர்; அஜித் அனைவரிடமும் மனம் விட்டுப் பழகும் குணம் கொண்டவர். நான் உதவி இயக்குநராக இருந்தபோது எனக்கு முதல் படம் கொடுத்தவர் விஜய் என்றால், விஜய் பட இயக்குநர் என்கிற முத்திரை விழுந்த பின்பும் அதைப் பொருள்படுத்தாமல் எனக்கு மூன்றாவது படம் கொடுத்த அஜித் என் சினிமா வாழ்க்கையில் நான் ஹாட்ரிக் வெற்றி கொடுக்கக் காரணமாக அமைந்தவர். இவர்கள் இருவரும் மீண்டும் எனக்கு வாய்ப்புத் தரவில்லை என்று எப்போதும் நான் வருத்தப்பட்டதில்லை. இருவர் மீதும் எனக்கு எந்தப் புகாரும் இல்லை.

- பேரரசு

(ப்ரியம் பெருகும்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in