ரஜினி உங்களைக் கூப்பிடுவார்! - பேரரசு | ப்ரியமுடன் விஜய் - 6

ரஜினி உங்களைக் கூப்பிடுவார்! - பேரரசு | ப்ரியமுடன் விஜய் - 6
Updated on
3 min read

“திருப்பாச்சி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது. அப்போது ‘கில்லி’ படம் 200 நாள்களைத் தொட்டிருந்தது. பத்திரிகைகளில் கோலாகலமாக 200 நாள் விளம்பரங்கள் வந்திருந்தன. அதை விஜயிடம் காட்டி, ‘சார்.. நம்ம படம் ‘கில்லி’யைவிட ஒரு நாளாவது அதிகமாக ஓடும் என்றேன். அதற்கு விஜய், ‘எனக்கு அவ்வளவு வேண்டாம்.. 100 நாள் ஓடினா போதும்’ என்றார். நான் சொன்னபடியே ‘கில்லி’யை பீட் செய்தது ‘திருப்பாச்சி’. அதற்கு விஜய் இப்படியொரு சர்பிரைஸ் பரிசு கொடுப்பார் என்று நான் நினைத்திருக்கவே இல்லை.

திருப்பாச்சி ரிலீஸ் ஆகி தமிழ்நாடெங்கும் 5 நாள்களாக ஹவுஸ்ஃபுல் காட்சிகள். நான் மதுரை பக்கம் உள்ள திரையரங்கு களுக்கு விசிட் செய்து, மக்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்று அறிந்துகொள்ளச் சென்றிருந்தேன். அடுத்து யார் படம் கொடுப்பார்கள், பெரிய ஹீரோவை இயக்க முடியுமா என்று எதுவும் தெரியவில்லை. ஒரு தியேட்டரில் மக்களுடன் மக்களாக அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்த போது, ஒரு போன் கால். அழைத்தவர் ஏ.எம்.ரத்னம்.

‘எங்க இருக்கீங்க?’ என்றார். ‘மதுரையில’ என்றேன். ‘சென்னை வந்ததும் உடனே என் ஆபீஸ் வாங்க’ என்றார். அவ்வளவுதான் அவர் பேசியது. எனக்கு ஜிலீர் என்றிருந்தது. ஒரு பெரிய ஹீரோவின் படம் வெளியான 5 நாள்களுக்குள் ஒரு பெரிய தயாரிப்பாளர் பார்த்துவிட்டு, இந்த இயக்குநரை வைத்துப் படம் தயாரிக்கலாம் என்று முடிவெடுப்பார் என்றெல்லாம் நான் நம்பவில்லை.

சென்னை வந்ததும் அவரின் அலுவலகத்துக்குப் போய் காத்துக்கொண்டிருந்தேன். அவர் உள்ளே வருவதும் போவதுமாக இருந்தார். என்னைப் பட வாய்ப்பு கேட்டு வந்திருக்கும் ஓர் உதவி இயக்குநர் என்று அவர் நினைத்துவிட்டார். அதனால், நானே அவர் முன்பாகப் போய் நின்று ‘திருப்பாச்சி பட டைரக்டர் பேரரசு நான்தான் சார்’ என்றேன். ‘அட என்னங்க.. ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா?.. வாங்க.. வாங்க..’ என்று அவரின் அறைக்குள் அழைத்துப்போனார்.

‘உங்களுக்கு வாழ்த்துகள். விஜய் சார் எனக்கு கால்ஷீட் கொடுத்திருக்கார். நீங்கதான் டைரக்டர் என்று சொன்னார். திருப்பாச்சி படம் பார்த்தேன். நீங்கதான் அதை டைரக்ட் பண்ணினவரா?’ என்று நம்பமுடியாமல் கேட்டவர், ‘விஜய் சாருக்கு கதை ரெடியா இருக்கா?’ என்றார். ‘இருக்கு சார்’ என்று சொல்லிவிட்டு ‘சிவாகாசி’ படத்தின் அவுட்லைன் கதையைச் சொன்னேன். ‘விஜய் சாரிடமும் சொல்லி ஓகே செய்துவிட்டு வந்துவிடுங்கள் ஆபீஸ் போட்டுவிடலாம்’ என்றார்.

உடனே விஜயைச் சந்தித்துக் கதைக் கருவைச் சொன்னதும் ‘ரொம்ப நல்லா இருக்கு.. ஸ்கிரிப்ட் வேலையைச் சீக்கிரம் முடிங்க’ என்றார். உடனே நான் ரத்னம் சாரிடம் போய் ‘ஹீரோ கதையை ஓகே பண்ணிட்டார்’ என்றேன். அவர், ‘அட்வான்ஸ் வாங்கிக்கோங்க.. இப்போது நல்ல நேரம்’ என்றார்.

நான் ‘வேண்டாம் சார்’ என மறுத்தேன். அச்சரியமாக என்னைப் பார்த்தார். ‘முழு ஸ்கிரிப்டையும் முடிச்சு.. அதை விஜய் சாருக்குச் சொல்லி, அவர் ஓகே சொல்லட்டும். அந்த ஸ்கிரிப்டை நீங்களும் கேட்டு உங்களுக்கும் பிடிச்சிருந்தா அட்வான்ஸ் வாங்கிக்கிறேன்’ என்றேன். ‘உங்களுக்குன்னு ஏதோ பாலிசி வச்சிருக்கீங்கபோல இருக்கு.

சரி டிஸ்கஷனுக்கு ரூம் போட்டுக் கொடுக்கிறேன் வந்துடுங்க’ என்றார். நான் ‘அதுக்கும் இப்ப அவசியமில்லை சார்’ நான் முழு ஸ்கிரிப்டோட வர்றேன்’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ரத்னம் சார் என்னை ஒருமாதிரிப் பார்த்தார். அதைப் பற்றிக் கவலைப்படாமல் கிளம்பிவிட்டேன்.

ஏனென்றால், சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். முழு ஸ்கிரிப்டையும் ஹீரோ கேட்டபின் அவருக்குப் பிடிக்காமல்கூட போகலாம். அப்போது தயாரிப் பாளரைக் கூப்பிட்டு ‘வேற டைரக்டர் சொல்றேன்’ என்று சொல்லலாம். அப்படிச் சொன்னால், வாங்கிய அட்வான்ஸை என்னால் திரும்பக் கொடுக்க முடியாமல் போகலாம் அல்லவா? அப்போது பல பேச்சிலர் போர்ஷன்கள் கொண்ட, அனைவருக்கும் ஒரே ‘காமன் பாத்ரூம் - டாய்லெட்’ இருந்த வீட்டில் மாதம் 1200 ரூபாய் வாடகைக்குக் குடியிருந்தேன்.

அடுத்து 3500 வாடகை கொடுத்து தனியாகக் கழிவறை - குளியலறை வசதி கொண்ட வீட்டுக்குப் போகலாம் என்றால், அதற்கு 40 ஆயிரம் அட்வான்ஸ் கொடுக்கப் பணமில்லை. திருப்பாச்சி சூப்பர் ஹிட் ஆகியிருந்த நேரத்தில் இப்படிப்பட்ட நிலையில் தான் இருந்தேன். இந்தச் சமயத்தில்தான் ரத்னம் சாரிடம் அட்வான்ஸ் வாங்க மறுத்தேன்.

விஜயை வைத்து ஒரு படம் இயக்கினாலே சாதனை என்கிற நிலையில் இரண்டாவது படமெல் லாம் நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஆனால், எனக்கு அந்த வாய்ப்பை விஜய் கொடுத்தார். திருப்பாச்சியைப் பொறுத்தவரை, ஏற்கெனவே எழுதியிருந்த கதையில் விஜயைப் பொருத்தி சில மாற்றங்கள் செய்தேன்.

ஆனால் ‘சிவாகாசி’யில் விஜய்தான் ஹீரோ என்று முடிவானதும் அவரை மனதில் வைத்து திரைக்கதையை எழுதினேன். எழுதிய கதைக்கு ஹீரோ நடித்தாலும் ஹீரோவுக்காகக் கதை பண்ணினாலும் அதைச் சரியாகச் செய்துவிட்டால் படம் உறுதியாக வெற்றிபெறும் என்பதற்கு ‘திருப்பாச்சி’யும் ‘சிவகாசி’யும் எடுத்துக்காட்டுகள்.

சிவகாசி ஷூட்டிங் சமயத்தில் விஜய் என்னிடம் ‘இந்தப் படத்துக்குப் பிறகு ரஜினி உங்களைக் கூப்பிடுவார் பாருங்கள்’ என்றார். அவர் சொன்னதுபோலவே ‘சிவகாசி’ ஹிட்டாகியிருந்த நேரத்தில் ‘ரஜினி சார் அழைத்திருக்கிறார்’ என்று சொல்லி போனைக் கொடுத்தார்கள். எனக்கு ஷாக்! போனை காதில் வைத்தேன். “நான் ரஜினி பேசுறேன்.. சிவாகாசி படம் பார்த்தேன். படம் ரொம்பப் பிடிச்சுப் போச்சு.

டயலாக்ஸ் நல்லா எழுதுறீங்க.. சென்டிமெண்டை அட்டகாசமா டீல் பண்றீங்க. அந்தத் திறமை இருந்தா.. சினிமாலா லாங் ஸ்டாண்டிங் நிக்கலாம். வாழ்த்துகள்” என்றார். அவர் பேசி முடித்து போனை வைத்துச் சில மணி நேரம் வரையிலும் அந்தப் பாதிப்பிலிருந்து விடுபட முடியவில்லை.

விஜயை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்கள் இயக்கி வெற்றி கொடுத்துவிட்டதால் ‘விஜய் பட டைரக்டர்’ என்கிற முத்திரையை என் மீது சுமத்திவிட்டார்கள். சிவகாசியை இயக்கி முடிக்கும்போதே எனக்குத் தெரிந்து விட்டது. அஜித்தைத் தவிர மற்ற எல்லா ஹீரோக்களும் நமக்கு கால்ஷீட் கொடுப்பார்கள் என்பது. ஏனென்றால், அப்போது விஜயும் அஜித்தும் இரண்டு துருவங்கள். விஜயை இயக்கியவர்கள் ஒருபோதும் அஜித்தை இயக்க முடியாது என்கிற நிலைதான் அப்போது இருந்தது.

அதுதான் யதார்த்தம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அது உண்மையல்ல என்பதை எனக்கு உணர்த்தினார் அஜித்! உதவி இயக்குநராக இருந்த காலத்தில் ஏவி.எம். ஸ்டுடியோவுக்குள் நுழைய வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், அங்குள்ள வாட்ச்மேன்கள் விடமாட்டார்கள்.

அப்போது பேருந்து டிக்கெட்டுக்காக வைத்திருந்த பத்து ரூபாயை லஞ்சமாகக் கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்து அங்கே நடந்த படப்பிடிப்பைப் பார்த்தவன் நான். அப்படிப்பட்ட ஏவி.எம். நிறுவனம் அழைத்து 10 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தார்கள். ‘ஹீரோ யார்?’ என்று கேட்டபோது ‘அஜித்’ என்றார்கள். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது! ‘நான்தான் டைரக்டர் என்று அஜித்துக்குத் தெரியுமா?’ என்று கேட்டேன். ‘அவர் சொல்லித்தான் உங்களை அழைத்தோம். உங்களைப் பரிந்துரைத்ததே அவர்தான்’ என்றார்கள். மற்றொரு பெரிய அதிசயம் ‘திருப்பதி’ பட பூஜையில் நடந்தது! அந்த அதிசயத்தை நிகழ்த்தியவர் விஜய்!

(ப்ரியம் பெருகும்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in