கடைசி மனிதனின் கை! | திரைசொல்லி 16
இன்றைக்குச் சுற்றுச்சூழல் சார்ந்து மிகவும் மோசமான நிலைக்குப் பூமியை நாம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறோம். நமது முதுகை உற்றுப் பார்த்தோமானால், நமது கடந்தகால சினிமா, சுற்றுச்சூழல் மாசு படுவதைப் பற்றிச் சிறிதும் கவலைப்பட்டதில்லை.
நாம் இயற்கையாக உண்டு வந்த உணவில் உரம் என்கிற பெயரில் ரசாயன நஞ்சு கலக்கப்பட்டது குறித்துக் கேள்வியெழுப்பியதில்லை. பயிர் செறிந்து திகழ்ந்த கழனி, கட்டிடக்காடுகளாக மாற்றப்பட்டது குறித்து விசனப்பட்டதில்லை. காதலை மட்டுமே தீராத வியப்புக்கு உள்படுத்தி மனித விழிப்புணர்வை மழுங்கடிக்கச் செய்ததில் அளப்பரியத் தொண்டை சிறப்பாக ஆற்றியிருக்கிறது.
விவசாயிகளும் விலக்கல்ல! - இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பத்தாண்டுகளுக்கு முன்பு சொன்னார், ‘பூமியை முடிந்தவரை நாசப்படுத்திவிட்டோம். இனிமேல் வருடம் முழுக்க வெள்ளங்களையும் புயல்களையும்தான் நாம் எதிர் கொள்ள நேரும்.’ ஒரு காலத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த பெரு நகரங்களை மட்டுமே ஆக்கிரமித்த வெள்ளம் இப்போது சிறு நகரங் களைக் கடந்து கிராமங்கள் வரை நீண்டுவிட்டதைக் கண்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில், இது இயற்கை தரும் பேரிடர்கள் இல்லை.
நமது விருப்பத்துக்குப் புகையைப் பெருக்கி பூமியைச் சூடாக்கி னோம். அதன் கோபம் மழையாகக் கொட்டி வெள்ளமாக உருவெடுக்கிறது. புவி வெப்பமாதல் (Global Warming) நிலையிலிருந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில், புவி கொதித்தல் (Global Boiling) நிலையைத் தொட்டபின்பும் புகையைக் கக்கும் வாகன உற்பத்திகளும் அவற்றின் அத்துமீறிய பயன்பாடுகளும் ஓய வில்லை. பூமியை அழிப்பதில் யார் முன்னணி என்கிற போட்டியில் பெரு முதலீட்டு நிறுவனங்கள், அரசியல்வாதிகள், மதவாதிகள், வணிகர்கள் ஆகியோருடன் ரசாயன விவசாயிகளும் முண்டியடித்துக் கொண்டு வரிசையில் நிற்கிறார்கள்.
இதனைக் கூறும்போது, அர்ஜென்டின சினிமாவின் இளம் மேதைகளில் ஒருவரான லிசண்ட்ரோ அலொன்சா 2001ஆம் ஆண்டு இயக்கிய விடுதலை (La Liberated) படம் நினைவுக்கு வருகிறது. அதில், முதன்மைக் கதாபாத்திரத்தில் வருபவன் மரங்களை வெட்டி எரிப்பான். தனது தவறு குறித்த எவ்விதத் தன்னுணர்வும் அவனுக்கு இருக்காது. ஆழ்ந்த மௌனத்தை நம்முள் தட்டியெழுப்பும் விதமாக அக்காட்சியை அலொன்சா சிறப்புறச் சித்திரித்திருப்பார்.
அதீத நுகர்வுப் பயன்பாட்டால் புவியை புகைமயமாக்குவதன் காரணமாகச் சட்டெனக் கொட்டித் தீர்க்கும் பெருமழை குறித்தும் அதன் ஆவேச வினையான வெள்ளம் குறித்தும் நம்முடைய திரைப்படங்கள் இன்னும் பக்குவப்பட்ட பார்வையில் பேசவில்லை. சமீபத்தில் ஊர்வசியின் சிறந்த நடிப்பில் வெளியான ‘உள்ளொழுக்கு’ என்கிற மலையாளப் படம், ஆற்றில் வெள்ளம் பெருகி வீட்டுக்குள் நீர் சூழ்வதைக் காட்டினாலும் பிணத்தை அடக்கம் செய்யத் தடைபோடும் பின்புலமாக மட்டுமே தனது கதைத் தேவைக்கு எடுத்துக்கொண்டது. கமல்ஹாசன் நடித்த ‘அன்பே சிவம்’ படத்தில் வரும் வெள்ளமும் கதைக்களத்தின் பயன்பாட்டுக்குள் தேங்கி நிற்பது.
சுயமொழி பேசும் விலங்குகள்: இந்த ஆண்டின் தொடக்கத்தில் லாட்வியா நாட்டிலிருந்து கின்ட்ஸ் சில்பலோடிஸ் இயக்கிய ‘ஒழுகுதல்’ (Flow) என்றொரு அனிமேஷன் படம் வெளியானது. முதன்மைக் கதாபாத்தி ரத்தில் ஒரு பூனையும் பிற கதாபாத்திரங்களில் நாய் உள்படச் சில விலங்குகளும் வருகின்றன. ஒரு மீனைக் கவ்விக்கொண்டு ஓடும் பூனையை விரட்டிப் பிடிக்க மற்ற விலங்குகளும் ஓடும் முதற்காட்சியே நம்மை நிமிர்ந்து அமரச் செய்துவிடுகிறது.
உயிர் அச்சத்தில் ஓடும் பூனை, கவ்விச் சென்ற மீனைப் பின்னே துரத்திவரும் நாயை நோக்கி வீசியெறிந்துவிட்டு ஓடுகிறது. நாயோ மீனை அலட்சியப்படுத்திவிட்டு பூனையை விரட்டுகிறது. இயற்கையின் கண்மூடித்தனமான விளை யாட்டில் நிர்ணயிக்கப்பட்ட வேட்டை.
சற்று நேரத்தில், ஒரு சரிவான பாதை யிலிருந்து மான்கள் தலைதெறிக்க ஓடிவர, திகைக்கும் பூனை, அவை வந்த பாதையைக் கூர்ந்து பார்க்கிறது. சில விநாடிகள்தான் இருக்கும். ஆழிப் பேரலையைப் போன்று நீர் பெருக்கெடுத்து ஓடிவர, பூனையும் மற்ற விலங்குகளும் வந்த பாதையிலேயே ஓட்டமெடுக்கின்றன.
எங்கும் வெள்ளம். ஆளற்று மிதக்கும் ஒரு படகில், அவை அனைத்தும் ஏறிக்கொள்ள, புகலிடம் தேடி படகை இழுத்துச் செல்லும் நீரோட்டத்தில் பயணித்து உயரமான மலை முகடுகளிலும் கோபுரங்களிலும் தம்மைக் காத்துக்கொள்ள அவை போராடுவதே கதையோட்டம்.
விலங்குகளை வெள்ளத்தின் நீரலை அனைத்து உயரங்களிலும் துரத்திவரும். இறுதியாக, அது தொட்டுப் பார்க்காத ஒரு மலையுச்சியில் அமர்ந்தபடி, கால்களுக்கு அடியே உள்ள சிறு நீர்ப்படுகையை கவலையுடன் பார்த்தபடி அனைத்து விலங்கு களோடும் பூனை அமர்ந்திருக்க, பெருத்த மௌனத்தை நம்மிடம் ஏற்றிவிட்டு படம் முடிவடையும்.
முழுவதும் சிறப்பான வடிவிலமைந்த ஓவியக் கவர்தலுடன் கூடிய அனிமேஷன் சித்திரம். விலங்குகள் எதுவும் ஆங்கிலமோ, மொழிபெயர்ப்பில் தமிழோ பேசி படத்தின் கதைத் தீவிரத்தைச் செயற்கையாக மாற்றவில்லை. அதனதன் சத்தங்களுடன் உரையாடிக் கொள்கின்றன, உதவிக்கொள்கின்றன.
பூமியை விழுங்க முயலும் இந்தப் பெருவெள்ளம் இயற்கை விளைவித்த பேரிடர் இல்லை. மனிதன் விளைவித்த பேரிடர்தான் என்பதற்கு ஒரு காட்சி சாட்சியாக நிற்கிறது. மனித இனத்தின் தடமே இல்லாமல் வெற்று கட்டிடங்களே மூழ்கிக்கொண்டிருக்கும். ஓர் இடத்தில், காப்பாற்றுமாறு உதவிவேண்டி ஒரு கையை உயர்த்திக்கொண்டு ஒரு மனிதத் தலை நீரில் பாதி மூழ்கிய தோற்றத்தில் சிலையொன்று இருக்கும்.
இயற்கையின் மீது தொடுக்கும் தொடர் தாக்குதலில், தனது அழிவை எதிர்கொள்ளப் போகும் மனித இனத்தில் கடைசிப் பிரதிநிதியின் கையறு நிலையைச் சித்திரிக்கும் குறியீட்டுக் காட்சி அது. வெள்ளமும் புயலும் இனி வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத அங்கமாக மாறிப்போன இக்காலக்கட்டத்தில், இனி நாம் கைகொள்ளவேண்டிய விழிப்புணர்வை ஆழமாகத் தூண்டும் படம் இது. இப்படத்தை, இந்திய அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் திரையிட்டுக் காட்டவேண்டியது திரை ஆர்வலர்களின் தலையாய பணி.
மத, இன, வர்க்க, சாதியப் பிரிவற்று அனைவரும் நுகர்வின் வெறியாட்டத்தில் கார்பன் புகையை வானம் நோக்கிக் கக்குவதன் தீய விளைவு பூமிக்கே திரும்புவது குறித்து தீவிர கவனப்படுத்துதல் தேவை. எதிர்கால இளைய தலைமுறை, இயற்கையின் மனங்கோணாமல் தமது வாழ்வை ஏனைய விலங்குகளைப் போல் ஒழுங்கமைத்துக்கொள்வது குறித்த சிந்தனையை எழுப்பியாகவேண்டும். இந்தப் படத்தின் கதைக்களம் நமக்கு அறிவுறுத்துவது இத்தகைய அர்த்தம்மிகுந்த கருத்தமைவைத்தான்.
- viswamithran@gmail.com
