

முதல் பெஞ்ச் ரசிகர்களுக்காகப் பட மெடுப்பவர் எனப் புகழ்பெற்றவர் இராம.நாராயணன். அவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் என்றாலும், ‘ஆல் கிளாஸ்’ ரசிகர்களைக் கவரும் படங்களைக் கொடுத்து அசத்தி யவர் பேரரசு. இயக்குநராக அறிமுகமான தொடக்கத்திலேயே விஜயை வைத்து ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ என அடுத்தடுத்து இரண்டு படங்களைத் தந்தவர், தனது மூன்றாவது படத்தில் அஜித்தை இயக்கினார்.
ஊர்களின் பெயரையே தன்னுடைய படங்களுக்குத் தலைப்பாகச் சூட்டித் தொடர் வெற்றிகளைக் கொடுத்த இவர், தற்போது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொருளாளர். இவர் இல்லாமல் இன்றைய கோலிவுட் இல்லை. விஜய் உடனான ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ நாள்களைப் பற்றிக் கேட்டதும் மிகுந்த பிரியத்துடன் ‘பிளாஷ் பேக்’கில் ஆழ்ந்தார்.
இனி அவர்: “நான் இயக்க வேண்டும் என்று நினைத்த முதல் கதை ‘திருப்பாச்சி’ அல்ல. குடும்பம், காதல் என்று மென்னுணர்வை முன்னிறுத்தும் திரைக்கதைகளை எழுதி முடித்துவிட்டு தயாரிப்பாளர் களை அணுகிக் கதை சொல்லத் தொடங்கினேன். கதைகளைக் கேட்டு முடித்ததும் ‘நல்லா இருக்கு; ஆனா, பெரிய ஹீரோவுக்கு கமர்ஷியலாகக் கதை தேவை.
உங்களிடம் இருந்தா சொல்லுங்க’ என்று கேட்கத் தொடங்கினார்கள். அப்போதுதான் ‘சேஃப் சைடு’ ஆக இருக்கட்டும் என்று ‘திருப்பாச்சி’ ஸ்கிரிப்ட்டை எழுதினேன். அந்தச் சமயத்தில் சூப்பர் குட் பிலிம்ஸில் மேனேஜர்களாக இருந்த கணேஷ் - செந்தில் இருவரும் ‘விஜயோட கால்ஷீட் இருக்கு; அவருக்குக் கதை இருக்கா?’ எனக் கேட்டார்கள். அவர்களிடம்தான் ‘திருப்பாச்சி’ கதையை முதலில் சொன்னேன். அவர்களுக்குப் பிடித்துப்போனதும் சௌத்ரி சாரிடம் அவர்கள் சொல்ல; அவரும் அன்றே கதை கேட்டு ஓகே சொன்னார்.
சூப்பர் குட் அலுவலகத்திலிருந்து மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்த ஒரு மணி நேரத்தில் மேனேஜர் போன் செய்தார். ‘இன்றைக்கு 4 மணிக்கே விஜய் சார் வீட்டுக்குப் போங்க. கதை கேட்க நேரம் கொடுத்திருக்கிறார்’ என்றார். எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. எல்லாம் மேஜிக் மாதிரி நடக்கிறதே என்று வியப்பு விலகாமல் விஜய் வீட்டுக்குப் போனேன். உதவி இயக்குநராக இருந்த காலத்தில் ரஜினி சார், கமல் சாரைப் படப்பிடிப்பில் பார்த்திருக்கிறேன்.
விஜய்காந்த் சார் நடித்த படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால், ஒருமுறைகூட விஜயை நேரில் பார்க்கவில்லை. கதை சொல்லச் சென்றபோதுதான் அவரை முதல் முறையாகப் பார்க்கிறேன். அப்போது விஜய் 40 படங்கள் செய்துவிட்டார். பெரிய ஹீரோ.
விஜயை இயக்க வேண்டும், அவரை வைத்துப் படம் தயாரிக்க வேண்டும் என்று முன்னணி இயக்குநர்களும், பெரிய தயாரிப்பாளர்களும் காத்துக்கொண்டிருந்த காலம். ஆனால், அவர் என்னைப் போன்ற புதுமுக இயக்குநர்களுக்கும் வாய்ப்பு வழங்கிக்கொண்டிருந்தார். ‘திருப்பாச்சி’ அவருக்கு 42வது படம்.
நான் கதை சொல்லச் சென்றபோது விஜயின் அப்பா எஸ்.ஏ.சியும் கூட இருந்தார். கதை சொல்லும்போது, என்ன காமெடி சீன் சொல்லி சிரிக்க வைத்தாலும் எவ்வளவு உருக்கமான சென்டிமெண்ட் சொன்னாலும் விஜயின் உதடுகள் கூட அசையாது. முகம் சலனமில்லாமல் இருக்கும். நான் அவ்வளவு நடித்து 3 மணி நேரம் கதை சொன்னபோதும் அவர் அப்படியே அசையாமல் இருந்தார்.
கதை சொல்லி முடித்தவுடன் ‘ஒரு ஐந்து நிமிடம் ஹாலில் வெயிட் பண்ணுங்க; நானும் அப்பாவும் டிஸ்கஸ் பண்ணிட்டு வந்து என் முடிவைச் சொல்கிறேன்’ என்றார். சொன்ன மாதிரியே துல்லியமாக அடுத்த 5 நிமிடம் முடியும் முன்பே ஹாலுக்கு வந்து என் கையைப் பிடித்துக் குலுக்கி, ‘கதை நல்லா இருக்கு, பண்ணிடலாம்’ என்றார். அந்தத் தருணத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது. டைரக்டர் ஆனால் போதும் என்று நினைத்துக்கொண்டிருந்த நான், அவ்வளவு பெரிய ஹீரோவை முதல் படத்திலேயே இயக்குவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.
விஜயிடம் பல விஷயங்களைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். அவருடைய தனிப்பட்ட கேரக்டருக்கும் நடிக்கும்போது அவரிடம் பார்க்கும் உருமாற்றத்துக்கும் சம்பந்தமே இருக்காது. பெரிய ஹீரோ என்பதால் படப்பிடிப்பில் முதல் மூன்று நாள்கள் எனக்கும் ஒரு பயம் இருந்தது.
அதன்பிறகு அது துளியும் இல்லாமல் போய்விட்டது. காரணம், ‘ஷாட் ரெடி’ என்று கூப்பிட்டதும் ஒரு புதுமுக நாயகன்போல் வருவார். வசனத்தைப் படித்துக் காட்டும்போது கேட்டுக்கொள்வார். அப்போதும் அவர் முகத்தில் எந்தச் சலனமும் இருக்காது. எந்த ஆர்க்யூமெண்டும் செய்யமாட்டார். ‘ஆக்ஷன்’ என்று சொன்னதும் அவருக்குள் இன்னொரு மனிதன் புகுந்துவிட்டதுபோல, நாம் எதிர்பார்த்ததைவிடப் பல மடங்கு அதிகமாக நடிப்பைக் கொடுத்துவிடுவார்.
அது அவ்வளவு நியாயமாகவும் கச்சித மாகவும் இருக்கும். ‘கட்’ என்றதும் புஸ்ஸென்று குழந்தையின் கையில் இருக்கும் காற்றுப்போன பலூனைப் போல தளர்ச்சியாகி அமைதியாகிவிடுவார். காரா வேனில் சில காட்சிகளுக்கு நடித்துக் காட்டச் சொல்லுவார். அதைக் கவனமாக உள்வாங்கி தன்னுடைய ‘பாடி லாங்குவே’ஜில் நான் கேட் டதை ஷூட்டின்போது கொடுத்துவிடுவார்.
அவரிடம் நான் வியந்த மற்றோர் அம்சம், தொழிலில் அவர் காட்டிய நேர ஒழுங்கு. காலை 8 மணிக்கு வரச்சொன்னால், 7.30 மணிக்கே வந்து நிற்பார். அவர் போடும் ஒரே நிபந்தனை, ஞாயிற்றுக்கிழமையும் ‘நைட் ஷூட்’டும் வைக்கக் கூடாது என்பதுதான். படத்துடன் ஒன்றிவிட்டால், இந்த நிபந்தனையைப் பற்றிக் கவலைப்பட மாட்டார். ஒருமுறை இரவு 2 மணி வரை படப்பிடிப்பு நடத்தினேன். மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார்.
அடுத்தவர்களின் நேரத்தை வீணாக்கக் கூடாது என்பதில் விஜய் மிகுந்த அக்கறையும் கவனமும் கொண்டவர். உதாரணத்துக்கு ஒரு கதை பிடிக்கவில்லை என்றால், அதைப் பிடிக்கவில்லை என்று சொன்னவர் முகத்தில் அடித்தமாதிரி கூற மாட்டார். மிக நாகரிகமாக ‘எனக்கு செட் ஆகாது’ என்று கையைப் பிடித்து பவ்யமாகச் சொல்லிவிடுவார்.
அதுவே ஒரு கதை பிடித்துவிட்டால், அதைப் பற்றி ‘டிஸ்கஸ்’ செய்ய ஆரம்பித்து விடுவார். அதில் நெருடலாகவும் கொஞ்சம் பலவீனமாகவும் இருக்கும் இடங்களைச் சுட்டிக்காட்டி, இது ஒரு சிலரைக் காயப்படுத்தும், இது இன்னும் அழுத்தமாக வேண்டும், அதைச் சரி செய்துகொண்டு வாருங்கள் என்பார். அதைச் சரி செய்துகொண்டுபோய் மீண்டும் சொன்னவுடன் ‘இப்போ ஃபர்பெக்ட்!’’ என்று சொல்லிவிடுவார். அப்படிச் சொன்னபிறகு படத்தின் ஷூட்டிங் முடியும் வரை எந்தவிதத்திலும் வசனத்திலோ, காட்சியிலோ குறுக்கீடு செய்ய மாட்டார்.
‘திருப்பாச்சி’ படம் முடிந்து முதல் ‘காப்பி’ ரெடியான தும் பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில் வந்து படம் பார்த்துவிட்டு வெளியே வந்தார். ‘இந்த வருஷம் டாப் 10 டைரக்டர்கள்ல ஒருத்தரா நீங்க இருப்பீங்க; அதே மாதிரி கதை சொன்னதைவிடப் பல மடங்கு பெஸ்டா படத்தைக் கொடுத்திருக்கீங்க’ என்று கூறிவிட்டுச் சென்றார். விஜய் யாரையும் அவ்வளவு எளிதாகப் பாராட்ட மாட்டார்.
யாரும் தன்னைப் பாராட்டவும் விடமாட்டார். அதேபோல் மற்றவர்களைப் பற்றி அவரிடம் யாராவது குறை கூறினால் அதைக் காதுகொடுத்துக் கேட்காதது மட்டுமல்ல, அதை அனுமதிக்கவும் மாட்டார். ஓர் உதவி இயக்குநர், தனது முதல் படத்திலேயே விஜயை ஒருமுறை இயக்கியதே பெரிய விஷயம் என்று நினைத்துக்கொண்டிருந்தபோதுதான் இரண்டாவது இன்ப அதிர்ச்சியையும் விஜய் கொடுத்தார்! - பேரரசு
(ப்ரியம் பெருகும்)