

இயக்குநர் ஸ்ரீதர் தனது ‘சித்ராலயா’ பட நிறுவனத்தின் மூலம் எடுத்த சில படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தன. அதனால், பொருளாதார நெருக்கடிக்கு ஆளானார். ‘‘அதிலிருந்து மீள மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பதுதான் உனக்கிருக்கும் ஒரே வழி’’ என்று ஸ்ரீதரின் நெருங்கிய நண்பரும் இந்தி நடிகருமான ராஜேந்திர குமார் யோசனை கூறினார். அதைக் கேட்டு ஸ்ரீதர் முதலில் அதிர்ந்தார்.
ஏனென்றால், ‘அன்று சிந்திய ரத்தம்’ என்கிற தலைப்பில் படம் தயாரிக்கத் திட்டமிட்டு எம்.ஜி.ஆரை வைத்து சில காட்சிகளை எடுத்தார் ஸ்ரீதர். பின், அந்தப் படம் நின்று போனது. அதே நேரம், புதுமுகங்களை வைத்து ‘காதலிக்க நேரமில்லை’ என்கிற வண்ணப்படத்தை எடுத்தார்.
ஆனால், எம்.ஜி.ஆர். நடிக்க ஒப்புக் கொண்ட ‘அன்று சிந்தியரத்தம்’ ஒரு கறுப்பு வெள்ளை படம். அன்றைக்கு வண்ணப்படம் என்றால் உச்ச நட்சத்திரங்கள் நடிக்க, பெரிய பட்ஜெட்டில் தயாராகும். ‘புதுமுகங்களை வைத்து வண்ணப்படம் எடுக்கும் ஸ்ரீதர், சூப்பர் ஸ்டாரான எம்.ஜி.ஆரை வைத்து குறைந்த பட்ஜெட்டில் கறுப்புவெள்ளை படம் எடுக்கிறார்’ என்று பத்திரிகைகள் சில எழுத, இது தொடர்பாக ஸ்ரீதருக்கும் எம்.ஜி.ஆருக்குமான உரசலில் ‘அன்று சிந்திய ரத்தம்’ உறைந்து போனது.
இப்போது, தனது பொருளாதார நெருக்கடி தீர எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுப்பதைத் தவிர, வேறு வழியில்லை, ராஜேந்திரகுமாரின் அறிவுரை சரிதான் என்கிற முடிவுக்கு ஸ்ரீதர் வந்தார். எம்.ஜி.ஆரின் ஒப்பனைக் கலைஞரும் இயக்கு நர் பி.வாசுவின் தந்தையுமான பீதாம்பரம் மூலம் எம்.ஜி.ஆரை அணுகினார்.
ஸ்ரீதரின் நிலையை அறிந்து பழைய சம்பவங்கள் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் படத்தில் நடிக்க ஒப்புதல் அளித்தார் எம்.ஜி.ஆர்! நெகிழ்ந்து போனார் ஸ்ரீதர். இவர்களின் கூட்டணியில் உருவாகி 1974, நவம்பர் 7ஆம் தேதி வெளியான படம்தான் ‘உரிமைக்குரல்’.
வென்று காட்டிய கூட்டணி: எம்.ஜி.ஆரும் ஸ்ரீதரும் மீண்டும் இணைந்தபோது, ‘இந்தக் கூட்டணி சரியாக வராது. எம்.ஜி.ஆருக்கு ஆக் ஷன் படங்கள்தான் சரியாக இருக்கும். ஸ்ரீதருக்கோ சென்டிமென்ட் படங்கள்தான் ‘செட்’டாகும்’ என்று விமர்சனங்கள் அனல் பறந்தன. அவற்றைப் பொய்யாக்கி, ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த திரைக்கதை யுடன் வெளியான ‘உரிமைக்குரல்’ அந்த ஆண்டின் ‘பிளாக் பஸ்டர்’ வெற்றியாக மாறி, 25 வாரங்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய துடன் வசூலையும் வாரிக் குவித்தது.
ஆந்திரா பாணியில் எம்.ஜி.ஆர். கட்டியிருந்த வேட்டி ‘உரிமைக்குரல் வேட்டி’ என்று பிரபலமானது. எம்.ஜி.ஆர். பாணியும் ஸ்ரீதரின் தனித்தன்மையும் சரியான கலவையில் அமைந்துவிட்டதாக இருவருடைய ரசிகர்களும் பெருமைப்பட்டனர். களத்துமேட்டில் காவலுக்கு இருக்கும்போது நம்பியாரின் அடியாட்களுடன் நடக்கும் சண்டையில் எம்.ஜி.ஆரின் முதுகில் கத்தியால் குத்திவிடுவார்கள். ரத்தம் பீறிட வலியால் துடித்துக்கொண்டு குதிரைக்குச் சேணம் பூட்டக்கூட முடியாத பலவீனத்தைக் காட்டியபடி எம்.ஜி.ஆர். தள்ளாடுவார். இக் காட்சியில் அவரின் இயற்கையான நடிப்பு ரசிகர்களாலும் பத்திரிகை களாலும் பாராட்டப்பட்டது.
‘சூப்பர் ஹிட்’ பாடல்கள்: வாலி, கண்ணதாசன் பங்களிப்பில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட். ‘உரிமைக்குரல்’ வெற்றியால் ‘சித்ராலயா’ நிறுவனம் கடனிலிருந்து மீண்டது. படத்துக்காக எம்.ஜி.ஆருக்குக் குறிப்பிட்ட தொகையைச் ஸ்ரீதர் அளித்தார். அந்தத் தொகையிலிருந்து 25,000 ரூபாயை எம்.ஜி.ஆர். கழித்துக் கொள்ளச் சொன்னார்.
அந்தத் தொகை, எம்.ஜி.ஆர். சில நாட்கள் நடித்து நின்றுபோன ‘அன்று சிந்திய ரத்தம்’ படத்துக்காக ஸ்ரீதர் முன்பு எம்.ஜி.ஆருக்கு அளித்த ‘அட்வான்ஸ்’ தொகை. தென்னிந்திய நடிகர்களில் அதிகச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., ‘அன்று சிந்திய ரத்தம்’ படத்துக்குச் சில நாட்கள் நடித்ததற்காக அந்தத் தொகை சரியாகிவிட்டது என்று சொல்லியிருந்தால் என்ன செய்ய முடியும்? நன்றிப் பெருக்கில் கண்கள் பனிக்க நின்றார் ஸ்ரீதர். நிதி நெருக்கடியிலிருந்து ‘சித்ராலயா’வை மீட்டதுடன் ஸ்ரீதரின் கணக்கையும் நேர்செய்து விட்டார் எம்.ஜி.ஆர்!
பாடல் வேறு.. ஊடல் வேறு..! - பாடல் பதிவின்போது ஸ்ரீதருக்கு ஒரு தர்மசங்கடம். ‘விழியே கதை எழுது’, ‘ஆம்பிளைங்களா.. நீங்க ஆம்பிளைங்களா..?’ ஆகிய பாடல்களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார். அப்போது அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆரைக் கடுமையாக விமர்சித்து பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தார் கண்ணதாசன்.
அது பரபரப்பாகப் பேசப்பட்டது. அதனால், கண்ணதாசன் எழுதிய பாடல்களை எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள் என்கிற சந்தேகம் ஸ்ரீதருக்கு எழுந்தது. விநியோகஸ்தர்களும் இதையே சொன்னதால் எம்.ஜி.ஆரிடம் போய் தனது குழப்பத்தையும் விநியோகஸ்தர்கள் நினைப்பதையும் ஸ்ரீதர் கூறினார்.
‘‘அரசியல் விமர்சனத்தைப் பாடலுடன் போட்டுக் குழப்ப வேண்டாம். கண்ணதாசன் எழுதிய இரு பாடல்களும் அருமையானவை. அவற்றை அப்படியே பயன்படுத்திக் கொள்ளுங்கள்’’ என்று எம்.ஜி.ஆர். தெளிவாகச் சொன்னார். அதன் பின்னரே அந்தப் பாடல்களைப் படத்தில் இடம்பெறச் செய்தார் ஸ்ரீதர். இரண்டும் மிகப்பெரிய ‘ஹிட்’டடித்தன. தன்னை விமர்சித்த கண்ணதாசனையும் ஒதுக்காமல், ரசிகர்களின் நாடித்துடிப்பையும் துல்லியமாக எம்.ஜி.ஆர். புரிந்து வைத்திருந்ததை அறிந்து ஆச்சரியப்பட்டார் ஸ்ரீதர்!