விஜய் தனக்காக எடுத்த முடிவல்ல! | ப்ரியமுடன் விஜய் - 4

விஜய் தனக்காக எடுத்த முடிவல்ல! | ப்ரியமுடன் விஜய் - 4
Updated on
4 min read

‘லவ் டுடே’ படத்தில் தன்னுடைய அப்பா விபத்தில் இறந்தது கூடத் தெரியாமல், நாயகன் கணேஷ், காதலி சந்தியாவைத் தேடி பெங்களூருவுக்குப் போய்விடுவான். அவனை எங்கே போய் தேடுவது என்று தெரியாமல், பெங்களூரு செல்லும் எல்லாப் பேருந்துகளிலும் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை நண்பர்கள் ஒட்டுவார்கள். கணேஷின் கண்களில் ஒரு போஸ்டராவது பட்டு உடனே சென்னைக்கு வந்துவிட மாட்டானா என்று துடிப்பார்கள்.

உடல் கூராய்வு செய்த சடலம் என்பதால், பெரியவர்களின் வற்புறுத்தலுக்குப் பணிந்து இரண்டாவது நாள் இரவு வரையிலும் மயானத்தில் சடலத்தைச் சிதையில் வைத்தபடி காத்திருப்பார்கள். கணேஷ் வராத நிலையில் இறுதிச் சடங்கு செய்துவிடுவார்கள். அவன்
மூன்றாம் நாள்தான் சென்னையில் வந்து இறங்குவான். வீட்டுக்கு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருக்கும்போது, சில தெருக்களுக்கு முன்பே ஆட்டோ பழுதாகி நின்றுவிடும்.

அப்போது வீட்டுக்கு நடந்து போகலாம் என்று அட்டோவிலிருந்து கீழே இறங்கும்போதுதான் அஞ்சலி போஸ்டரில் அப்பாவின் படத்தைப் பார்த்துவிட்டு, அதிர்ந்துபோய் வீட்டுக்கு ஓடி வருவான். நண்பர்கள் கண்ணீர் மல்க பிரமைப் பிடித்து நின்று கொண்டிருப்பார்கள். கணேஷ் கதறியபடி.. அவன் நண்பனான பீட்டரின் சட்டையைப் பிடித்து உலுக்கி.. “அப்பா எங்கடா?” என அலறுவான். அப்போது “எல்லாம் முடிஞ்சுப் போச்சுடா..” என நண்பன் அழுதபடி சொல்ல.. ‘ஸ்டெடி கேம்’ கேமராவில் எடுக்கப்பட்ட அந்த 3 நிமிடக் காட்சியில் கணேஷுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் இடையிலான வலி மிகுந்த வசனங்கள் அதில் அதிகம் இருந்தன.

அந்தக் காட்சியில் விஜய் தனது நடிப்பில் காட்டிய ‘இன்வால்வ்மெண்ட்’ மொத்த ‘செட்’டையும் கலங்க வைத்து விட்டது. பார்த்த இளைஞர்களே திரும்பத் திரும்ப ‘ரிபீட் ஆடியன்ஸ்’ ஆக வந்து ஒவ்வொரு முறைப் பார்க்கும்போதும் அந்தக் காட்சியில் அழுது தீர்த்தார்கள்.

விஜயின் ஆச்சரியமான திறமைகளில் ஒன்று, தான் நடித்த படத்தில் 70 காட்சி களில் தாம் இருந்தாலும் ஒரே நாளில் அவ்வளவு காட்சிகளுக்கும் டப்பிங் பேசி முடித்துவிடுவார். பொதுவாக நடிகர்கள், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடித்தபோது எப்படிப் பேசி நடித்திருந்தோம் என்பதெல்லாம் ‘பைலட் டிராக்’கில் பார்த்து, அதேபோல் ‘டப்பிங்’கில் பேசி சமாளித்து விடுவார்கள். ஆனால், டப்பிங் சமயத்தில் ‘சவுண்ட்’ பதிவாகியிருக்கும் ‘பைலட் டிராக்’ கிடைக்க வில்லை என்றால் கதை முடிந்தது.

<strong>பாலசேகரன்</strong>
பாலசேகரன்

சொல்லி வைத்த மாதிரி, ‘லவ் டுடே’ டப்பிங் சமயத்தில் இதே சிக்கலை நானும் சந்தித்தேன். கணேஷ் பெங்களூருவிலிருந்து சென்னைக்குத் திரும்பி, அப்பாவின் உடலுக்குக் கொள்ளி வைக்க முடியாமல் போய் நண்பர்களிடம் உரிமையுடன் சண்டைபோடும் அந்த மூன்று நிமிடக் காட்சியில் விஜயும் நண்பர்களும் பேசும் காட்சியின் ‘பைலட் டிராக்’ பதிவாகியிருந்த பிலிம் காணாமல் போய்விட்டது. எனது உதவி இயக்குநரை அழைத்து, ‘சீன் பேப்பரை யாவது எடுத்து வாருங்கள்’ என்றேன். ஆனால், சீன் பேப்பரும் மிஸ்சிங்!

விஜய் பக்கம் திரும்பினேன்.. அப்போது விஜய் சொன்னார், “சார்.. டோண்ட் ஒரி.. நான் பார்த்துக்கிறேன்.. நீங்க எழுதின டயலாக்ஸ் சரியா இருக்கா.. இல்லையான்னு மட்டும் செக் பண்ணிக்கோங்க’’ என்று சொல்லிவிட்டு அந்தக் காட்சிக்கு டப்பிங் பேசத் தொடங்கினார். என்னால் நம்ப முடியவில்லை. ஸ்பாட்டில் அவர் என்ன பேசி நடித்தாரோ.. நான் என்ன எழுதி, சொல்லிக் கொடுத்தேனோ..அதில் ஒரு வார்த்தையைக்கூட அவர் மறக்கவும் இல்லை, மாற்றவும் இல்லை.

அந்தக் காட்சியில் பேசிய வசனங்கள், உணர்ச்சி யின் அளவு, உச்சரிப்பின் அளவு என எல்லாம் அப்படியே வந்து விழுந்தன. நான் மிரண்டு போனேன். டப்பிங் முடித்து, படத்தின் ‘மேரீட் பிரிண்ட்’ வந்த பிறகு காணாமல்போன சீன் பேப்பர் கிடைத்துவிட்டது. சீன் பேப்பரில் இருந்த வசனங்களோடு, காட்சியை ஒப்பிட்டுப் பார்த்தபோது அவ்வளவு துல்லியம்! மனித வாழ்க்கையில் காதலும் அதன் நினைவுகளும் ஓயாத அலைகளைப் போன்றவை.

வாழ்வின் இறுதிவரையில் பயணிக்கக் கூடிய உணர்வு அது. அதனால், கிளை மாக்ஸில் நாயகனும் நாயகியும் சந்தித்துக்கொள்ளும் ‘பேக் டிராப்’பை இறுகிய மலைப் பாறைகளும் அலை களும் சூழ்ந்த சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கோவளத்தில் படமாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ‘லவ் டுடே’ படத்தின் திரைக்கதை, அதன் கிளைமாக்ஸிலிருந்து தொடங்கி எழுதப்பட்டது என்பது தயாரிப் பாளர் ஆர்.பி.சௌத்ரி சாருக்கு ஒரு தாக்கத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.

கிளைமாக்ஸைப் படமாக்குவதற்கு முன்பு என்னைக் கூப்பிட்டவர், “யோவ் இந்தக் கிளைமாக்ஸை விசாகப்பட்டினம் ஸ்டீல் தொழிற் சாலையை ஒட்டி இருக்கும் மலைகள் சூழ்ந்த கங்காவரம் கடற்கரையில் போய் எடுத்துட்டு வா.. அப்போதான் நீ எதிர்பார்க்கிற ‘இம்பேக்ட்’ கிடைக்கும்’ என்றார். அவர் சொன்னால் சரியாக இருக்கும் என்று ஆந்திரா வில் உள்ள அந்தக் கடற்கரைக்குப் போய் இறங்கியபோது, இந்த கிளைமாக்ஸுக்கான இடம் இதுவே தான் என மனம் கணத்துப் போனது. ஏனென்றால் காதலை நுழைய விடாத கடினமான மனம் கொண்டவள் சந்தியா.. அவளை அலைகளைப் போல துரத்திக் கொண்டேயிருந்தவன் கணேஷ்.. இப்போது அவள் அலை யாகவும் இவன் பாறையாகவும் மாறிப்போய் இருக்கிறார்கள்.

“நான் இறுகிப்போன பாறைன்னு நினைச்சேன்… எனக்குள்ளயும் ஒரு இதயம் இருக்கின்றதை உங்க மூலமாத்தான் நான் தெரிஞ்சு கிட்டேன்” என்று மனம் மாறி சந்தியா ‘ஐ லவ் யூ கணேஷ்’ என்று சொல்கிற போது.. தந்தையை இழந்து மன மொடிந்து போன கணேஷ் பேசத் தொடங்குவான்: “இந்த ஒரேயொரு வார்த்தைக்காகத் தான் எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறேன். இதே காதல்தான் பைத்தியக்காரனா இருந்த என்னை ஒரு மனுஷனா மாத்தியிருக்கு.

காதல் பிடிச்சிருந்தப்ப.. எனக்கு உங்கள ரொம்பப் பிடிச்சிருந்தது.. இப்ப எனக்குக் காதலையும் பிடிக்கல; உங்களையும் பிடிக்கல. காதலுக்காக நிறைய இழந்துட்டேன். இவ்வளவு இழந்த பிறகுதான் கிடைக்கும்ன்னா.. அந்தப் பாழாப் போன காதல் எனக்கு வேண்டாம். இப்ப நான் எடுத்த முடிவு எனக்காக இல்ல; என்னை மாதிரி வெறி பிடிச்சு அலையுற ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் நான் ஒரு பாடமா இருப்பேன்” என்று சொல்லிவிட்டு, பாறையிலிருந்து இறங்கி நடப்பான்.

கிளைமாக்ஸில் விஜயும் சுவலட்சுமியும் அவ்வளவு ஈடுபாட்டுடன் நடித்தார்கள். சௌத்ரி சார், வசந்த் சாய் இயக்கி, அஜித்தும் பிரகாஷ் ராஜும் நடித்திருந்த ‘ஆசை’ படத்தை ரிலீஸுக்கு முன்னர் ப்ரிவியூ பார்த்துவிட்டு வந்து, “அந்தப் படத் தோட ஹீரோயின் நல்ல ஹோம்லி லுக்! சந்தியா கேரக்டருக்குச் சரியா இருப்பாங்க.. ‘லவ் டுடே’வுக்கு ஃபிக்ஸ் பண்ணிக்கோ” என்றார். அப்படித்தான் சந்தியாவாக சுவலட்சுமி இந்தப் படத்தில் வாழ்ந்தார். சௌத்ரி சார் இன்னோர் இன்ப அதிர்ச்சியும் கொடுத்தார்.

அவர், ‘லவ் டுடே’ கதையைக் கேட்ட பிறகு, அதைத் தனது நண்பர்களுக்குக் கூற, அவர்களில் பலர், ‘அப்பா கேரக்ட’ரை அம்மாவாக மாற்றிவிடுங்கள்; நல்ல சென்டிமெண்டாக இருக்கும்’ என்று கூறியிருக் கிறார்கள். உடனே அவர் என் கருத்தைக் கேட்டார். ‘இதில் ஒரு தந்தைக்கும் மகனுக்குமான நட்பைப் பிரதி பலித்திருக்கிறேன். இது வழக்கமான ஒன்றாக இருக்காது’ என்றேன். இயக்குநர் என்று ஒருவரைத் தேர்வு செய்துவிட்டால், அவருக்கு முழுச் சுதந்திரம் கொடுக்கக் கூடியவர் சௌத்ரி சார். ‘நான் சொல்வதுதான் சரி’ என்று ஏற்றுக் கொண்டார். படத்தில் தந்தை - மகனுக்கான உறவு

முதுகெலும்பாக இருந்ததைப் பார்த்துவிட்டு ‘நல்ல வேளையா.. நாம மாத்தல’ என்றார்.
அன்றைக்குத் தெலுங்கில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த பவன் கல்யாணுக்கு அந்தப் படங் கள் சரியாகப் போகவில்லை. மூன்றாவதாக ‘சுஸ்வாகதம்’ என்கிற தலைப்பில் ‘லவ் டுடே’ தெலுங்கு ரீமேக்கில் கணேஷ் ஆக நடித்தார். படம் அவருக்கு முதல் சூப்பர் ஹிட் ஆக அமைந்தது. அந்தப் படத்தில் சந்தியாவாக நடித்தவர் நம் தேவயானி.

- இயக்குநர் பாலசேகரன்

(ப்ரியம் பெருகும்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in